புதையல் தங்கம்! போலி நகைகள் மூலம் நடக்கும் பகீர் மோசடி



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

          துப்பாக்கி முனையில் அதிரடியாக நடந்த வங்கிக் கொள்ளைகளின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என வட மாநில இளைஞர்கள் ஐந்து பேரை சுட்டுக் கொன்றது தமிழக போலீஸ். அதற்குள்... குடும்பம் குடும்பமாக வந்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் அடுத்த வட மாநிலக் கும்பலின் அட்டகாசம். வடசென்னை போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள் இவர்களில் சிலர். தங்க நகை என ஆசை காட்டி அப்பாவிகளிடம் நடக்கிறது இந்த புது ரக பகீர் மோசடி.

யுகேந்திரபாபு சென்னையில் கால் டாக்சி டிரைவர். ஒருநாள் சவாரிக்காக வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் வந்திருக்கிறார்கள். அவர்களை மணலியிலிருந்து தாம்பரம் கொண்டு போய் விட்டிருக்கிறார். இறங்கும்போது, ‘எங்கள் பிசினஸுக்கு அடிக்கடி கார் தேவைப்படும்’ என்று சொல்லி, யுகேந்திரனிடம் செல் நம்பரை வாங்கியிருக்கிறார்கள் அவர்கள். அதன்பிறகு இரண்டொரு முறை கிண்டிக்கும், சைதாப்பேட்டைக்கும் அவர்களை ஏற்றிச் சென்றிருக்கிறார் யுகேந்திரன்.

ஆனாலும், சூட்கேஸ் சகிதம் காரில் ஏறும் அவர்களிடம் ஆரம்பத்திலிருந்து ஒருவித எச்சரிக்கையுடனேயே இருந்திருக்கிறார் யுகேந்திரன். அது தெரியாமல்,  யுகேந்திரனிடமும் தங்கள் பிசினஸ் பற்றி அவர்கள் பேச... தொடர்ந்து கூண்டோடு பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் பிடிபட்டதையும் அவர்களது பிசினஸ் பற்றியும் விவரிக்கிறார் கைது நடவடிக்கைக்குத் தலைமை வகித்த காவல்துறை உதவி ஆணையர் கோவி.மனோகரன்...

‘‘நம்ம ஊர்ல விழாக்கள்ல சந்தன மாலைகள் போடுவாங்களே... அதுமாதிரி வட மாநிலங்கள்ல குண்டுமணிகள் நிறைஞ்ச பித்தளை மாலைகள் கிடைக்கும்ங்கிறாங்க. அந்த மாலைகள்தான் இவங்களோட மூலதனம்(?). நூறு ரூபாய்க்குக்கூட அங்க கிடைக்கிற இந்த மாலைகள், பார்க்கறதுக்கு அந்தக் கால ராஜாக்கள் அணியற மாதிரி ஆடம்பர லுக்ல இருக்கு. இப்படி நிறைய மாலைகளை அள்ளிக்கிட்டு இங்க வந்திருக்காங்க. அதுங்க மேல தங்க முலாம் பூசி, இங்க இருக்கிற அப்பாவிகள்கிட்ட ஏமாத்தறது தான் தொழில். ஒவ்வொரு ஏரியாவா தங்கி ஏமாத்தி இருக்காங்க. மீஞ்சூர், மணலி, மாதவரம் பகுதிக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் வந்திருக்காங்க. அதுக்கு முன்னால தாம்பரம், பெருங்களத்தூர் பக்கம் ஏமாத்தியிருக்காங்க.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineஅதுலயும் ரொம்ப நூதனமா ஏமாத்தறாங்க. ‘மத்தியப் பிரதேச தலைநகர் போபால் பக்கம் எங்க ஊரு. அங்க எங்களுக்கு ஒரு புதையல் கிடைச்சது. அதை அங்க விக்கலாம்னா போலீஸ் அது இதுன்னு நிறைய சிரமங்கள் இருக்கு. அதனாலதான் இங்க கொண்டு வந்திருக்கோம். இதெல்லாம் ‘பன்னா’ங்கிற வைரச்சுரங்கம் இருக்கற ஏரியாவை அந்தக் காலத்துல ஆண்ட ராஜாக்களோட சொத்துகள்’னு சொல்லித்தான் ஆரம்பிக்கறது. யாராச்சும் சந்தேகப்படற மாதிரி தெரிஞ்சா, ‘வேணும்னா இதுல ரெண்டு மணியை எடுத்துட்டுப் போய் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு அப்புறம் வாங்கிக்கோங்க’ன்னு ஒரு நியாய(?) வார்த்தைய எடுத்து விடுவாங்க. (அந்த சாம்பிள் பீஸுக்கும் காசை கரெக்டா வாங்கிடுறாங்க!) இப்படி சாம்பிள் தர்ற மணிகள் மட்டும் ஒரிஜினல் தங்கமா இருக்கும்.

டெஸ்ட் பண்ணி பார்த்தவங்க நம்பி உடனே வந்து சில மணிகளையோ அல்லது மொத்த மாலையாகவோ வாங்கிட்டுப் போயிருக்காங்க. பழமையான சொக்கத் தங்கம், மார்க்கெட் விலையை விட பாதி விலை, செய்கூலி, சேதாரம் எதுவுமில்லை... என்ற ஆசை வார்த்தைகளில் மக்கள் மயங்கிடறாங்க. கொஞ்சம் சேல்ஸ் பண்ணிட்டு, உடனே அந்த ஏரியாவை விட்டு எஸ்கேப் ஆகி அடுத்த இடத்தைப் பிடிச்சிருக்காங்க. தாம்பரம் பகுதியில இப்படி இவங்ககிட்ட ஏமாந்தவங்க நிறைய. ‘புதையல்னு சொன்னதை வாங்க நினைச்சது சட்டப்படி குற்றம் ஆச்சே’ங்கிற பயத்துல அவங்கள்ல சிலர் புகார் கொடுக்க வரலை.

கால் டாக்சி டிரைவர்கிட்டயும் இப்படித்தான் முயற்சி பண்ணி யிருக்காங்க. ஆனா, அவர்கிட்ட இவங்க முன்னுக்குப் பின் முரணா பேசினதும், திடீர்னு இடத்தைக் காலி செய்யப் போறதா சொன்னதும் சந்தேகத்தை உண்டாக்கிடுச்சு. ஏற்கனவே வங்கிக் கொள்ளைகள் மக்கள்கிட்ட பீதி கிளப்பிட்டிருந்ததால, அதுலகூட தொடர்பு இருக்குமோங்கிற எண்ணத்துலயே தகவல் தந்தார் யுகேந்திரன். நாங்களும் வங்கிக் கொள்ளையர்களைத் தேடற கண்ணோட்டத்தோடதான் போனோம். ஆனா இது தங்கம் பேர்ல நடக்கற கொள்ளைங்கிறது அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது’’ என்கிறார் மனோகரன்.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக முதலில் கொஞ்சம் ஒரிஜினல் தங்கத்தைக் கொடுத்து, பிறகு மொத்தமாக மோசடி செய்கிற இதுபோன்ற கும்பல்கள் ஆறு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் நடமாடுகிறதாம். சென்னை தாண்டி மதுரை, திருநெல்வேலி என தமிழகத்தின் உள்ளேயும் ஊடுருவியிருப்பதாக சொல்லப்படுகிறது. பிடிபட்ட போபாலைச் சேர்ந்த வீரு உள்ளிட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘கிட்டத்தட்ட நூறு குடும்பங்கள் இப்படிக் கிளம்பி வந்துள்ளதாக’ சொல்கிறார்கள் கொடுங்கையூர் போலீசார்.  

தங்கம் விலை போகிற போக்கு என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்!
அய்யனார் ராஜன்
படங்கள்: பால்துரை