காற்றின் கையெழுத்து



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

             சென்னையில் பிரபல ஆங்கிலமொழி பள்ளிக்கூடங்களில் வருடந்தோறும் ஒரு காட்சியைக் காண முடியும். தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக முதல்நாள் இரவே பெற்றோர்கள் அங்கு வந்து, செய்தித்தாள் விரித்துப் படுத்துக் கிடந்து, விடிந்ததும் அங்கேயே பல் விளக்கி, முகம் கழுவி, விண்ணப்பம் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.

வெளிநாட்டுத் தூதரகங்களிலும் அப்படியொரு வரிசையைப் பார்க்க முடியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக ‘விசா’ பெறுவதற்குக் காத்திருப்பார்கள். நடுத்தர வர்க்க முகங்கள்தாம் இந்த நீண்ட வரிசையில் நிறைந்திருக்கும்.

தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் படித்தால்தான் அறிவாளி ஆக முடியும்; நிறைய மதிப்பெண் எடுக்க முடியும்; மருத்துவராக, பொறியாளராக வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போக முடியும்; கை நிறைய சம்பாதிக்க முடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இதனால் ஒரு சமூகம் தன் தாய்
மொழியை மறந்து  தாய்மொழியை மறந்ததன் வழியாகத் தன் பண்பாட்டை இழந்து வேர்களற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.

‘எந்த மொழியில் நாம் நமது மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோமா, நமது கோபம், தாபம், துக்கம், பாசம் இவற்றைத் தெரிவிக்கிறோமோ, அதைவிடப் பலனளிக்கின்ற வேறு மொழி இருக்க முடியாது’ என்றார் விவேகானந்தர்.

சமீபத்தில், தேசியக் கல்வி, திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. 201011ம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடி இந்தியக் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கிறார்கள். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ‘‘ஒரு குழந்தை தன்னை, தன் சூழ்நிலையை, தன் வாழ்நிலையைப் புரிந்துகொள்ள தாய் மொழியில்தான் படிக்கவேண்டும். மக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில மொழிப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க வேண்டாம்’’ என்று அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோவிந்தா பேட்டியில் சொல்லியிருந்தார்.

‘‘ஆங்கிலம் நமக்கு முற்றும் பழக்கமிராத மொழி. எழுத்தை உச்சரிக்கும் முறையும் அதையடுத்து எழுத்துக் கூட்டிச் சொல்லைக் கூறும் முறையும் நமக்கு முற்றும் மாறானவை. ஆங்கிலேயர் என்ன கருத்தில் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அவர்கள் தங்களுக்கேற்ற சூழ்நிலையில் எடுத்துச் சொல்லும் விஷயம் இன்னது என்பதையும் கூர்ந்து கவனித்தாலொழிய ஏதும் விளங்காது’’  இது இந்தியாவின் தேசிய கீதத்தைத் தனது தாய்மொழியான வங்கமொழியில் எழுதிய ரவீந்திரநாத் தாகூர் சொன்னது. ஆனால், ஆங்கிலம் படித்தால்தான் உலக அறிவைப் பெற முடியும் என்கிற மனோபாவத்தால் இன்றைய நடுத்தர வர்க்கம் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineஇன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தில் மாபெரும் வல்லரசுகளாகத் திகழ்பவை ஜப்பானும் ஜெர்மனியும். இந்த நாடுகளின் தயாரிப்புகளைத்தான் அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம் கிடையாது. அவர்கள் தங்கள் தாய்மொழிகளில்தான் படிக்கிறார்கள்.

உலகமே இன்று அண்ணாந்து வியக்கும் தஞ்சை பெரிய கோயில், திருச்சி கல்லணை போன்றவற்றைக் கட்டிய ஆயிரம் காலத்திற்கு முந்திய தமிழ்ப் பொறியாளர்கள் ஆங்கிலம் படித்ததனால் அந்த அறிவைப் பெறவில்லை. மனித குலத்தை நோயின் அழிவிலிருந்து காப்பாற்றும் மாபெரும் தமிழ் மருத்துவத்தை உலகுக்கு அளித்த நமது சித்தர்கள் ஆங்கிலம் படித்ததில்லை. நாம் நமது சரித்திரத்தை, நமது புவியியலை, நமது சுற்றுப்புறச்சூழலை எதற்காக ஆங்கிலத்தில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்?

‘‘இங்கிலாந்தின் மிதமான தட்பவெப்ப நிலையும் இயற்கைக் காட்சிகளும் இந்தியாவுக்கு எவ்வாறு பயன்படாதோ, அதே போல் ஆங்கிலத்தின் உன்னதமான இலக்கியத்தினாலும் இந்தியாவுக்குப் பயனில்லை. இந்தியா தனதேயான தட்பவெப்ப நிலையிலும் இயற்கைக் காட்சிகளிலும் இலக்கியத்திலும் தழைத்தோங்க வேண்டும். உலகின் ஏனைய மொழிகளில் உள்ளவற்றையெல்லாம் நம் நாடு தனது பிரதேச மொழிகளின் மூலமே பெறவேண்டுமென்று விரும்புகிறேன்’’ என்கிறார் மகாத்மா.

நமது குழந்தைகள் தாய்மொழியறியாது இருப்பது தலைகுனிவைத் தரும் விஷயம் என்பதை நாம் உணரவே இல்லை. பொது இடங்களில் மட்டுமல்ல; வீடுகளிலும்கூட நம் தாய்மொழியைத் தள்ளி வைத்தே உரையாடத் தொடங்கிவிட்டோம்.

தமிழ்நாட்டில் ஆங்கிலப் பள்ளிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. மும்பையில் நிறைய அரசுப் பள்ளிக்கூடங்களில் தாய்மொழியில் சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை. கேரளத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. ஒரே மாணவனுக்காக ஒரு பள்ளியைத் திறந்து வைத்து ஆசிரியர் காத்திருக்கும் காட்சியை தமிழகத்தின் சில கிராமங்களில் காண நேர்கிறது. மக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். இன்று தனியார் ஆங்கிலப் பள்ளிகள் ஈசல் கூட்டங்களாகப் பெருகி வருகின்றன. வகுப்பு வசதி இல்லை; பரிசோதனைக் கூடம் இல்லை; சுகாதாரமான கழிவறைகள் இல்லை; விளையாட்டுத் திடல் இல்லை. ஒரு கட்டிடம் மட்டுமே பள்ளி என்றாகிவிட்டது. தரம் குறைந்த பள்ளி, குழந்தைகளின் தரத்தையும் குறைத்து விடுகிறது.

‘‘என் தாய்மொழியை அறிந்து கொள்வதன் மூலமாகத்தான் நான் என்னை யாரென்று உணர்ந்துகொள்ள முடிகிறது’’ என்றார் ஞானபீட விருது கொண்ட மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை. மொழி என்பது ஒரு கலாசாரத்தை ஏற்றிச் செல்கிற வாகனம். ஆங்கில மொழி நம்மையறியாமலே அதன் கலாசாரத்தையும் நம்மிடம் திணித்திருக்கிறது. அன்று ஆங்கிலேயருக்கு அடிமைகளாக இருந்தோம்; அதற்காக அவர்களின் ஆங்கிலத்தைப் படித்து நமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டோம். இன்று அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களுக்கும் உணவுக்கும் ஆட்பட்டிருக்கிறோம்; அவர்கள் பேசும் மொழியும் ஆங்கிலம்தான். இந்த ஆங்கிலத்தின் ஆதிக்கத்திலிருந்து எப்படி விடுபடுவதென்றே தெரியவில்லை.

திருமதி மிஷேல் ஒபாமா ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அமெரிக்காவின் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனத்தின் உணவுப் பொருள்களில் கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதால் அதைக் குறைத்துக் கொள்ளக் கேட்டிருக்கிறார். அடுத்த தலைமுறை உடல் பருமனால் அவஸ்தைப்படாமல் ஆரோக்கியமாக இயங்க வேண்டும் என்று தனது விருப்பத்தை அதில் தெரிவித்திருந்தார். அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் உணவுகள்தான் இங்கே நமது நடுத்தர வர்க்கத்தையும் சுவையால் அடிமைப்படுத்தியிருக்கின்றன. மெக்டொனல்ட்ஸ், கே.எஃப்.சி, டோமினோஸ், மேரி பிரௌன் போன்ற நிறுவனங்கள் இங்கே நமது கைகளில் பீட்சாவையும் பர்கரையும் கோக்கையும் பெப்சியையும் தந்து, நமது உணவுக் கலாசாரத்தையே மாற்றி வைத்திருக்கின்றன. மது நமது சமூகப் பழக்கமாக ஆனதும் ஆங்கில மொழியின் கலாசார ஆதிக்கம்தான்.

செந்நெல் மாற்றிய சோறும்  பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை  கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன் மதுரஞ்செய் கிழங்கு  காணில்
நாவிலினித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா!  உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

பாரதிதாசனின் நாவூறும் இந்தப் பாடலை உணர்ந்து படித்து உள்வாங்கும்போதுதான் அந்நிய மொழிக்கும் அதன் சுவைக்கும் நாம் அடிமையாகியிருக்கும் அவலத்தை உணர முடியும்; நமது அமுதினிய தமிழ்ச் சுவையை அறிந்து கொள்ள முடியும்.

இரண்டு மொழிகளைப் படித்து வைப்பது தப்பில்லை. தாய்மொழியில் நம் குழந்தைகளைப் படிக்க வைக்காததுதான் தப்பு. ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்று யாரோ ஒரு பேதை உரைத்தான் என்று வருத்தப்பட்ட பாரதி, கண்கள் சிவக்க நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து இனிமேலாவது மீள வேண்டும் நானும் நீங்களும்!
(சலசலக்கும்...)
பழநிபாரதி