திருப்பு முனை சாந்தி ரங்கநாதன்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                             ‘‘போன ஆண்டைவிட இந்த ஆண்டு மது விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிற செய்தியைப் படிக்கும் போதெல்லாம் அடிவயிறு திகீர் என்றடிக்கிறது. போன ஆண்டை விட இந்த ஆண்டு குடிநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதே அந்தச் செய்தியின் வெளிப்படையான அர்த்தம். இளைஞர்களுக்கு ரிசார்ட்டில் மது விருந்து வைப்பதை அலுவலகங்களே செய்கின்றன. கூடவே, பள்ளி மாணவர்கள் முதல் பெண்கள் வரை குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்கிற யதார்த்தம் சுடுகிறது’’ என ஆதங்கத்தோடு பேசுகிற சாந்தியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சமூகத்தின் மீதான அக்கறையும், சக மனிதர் மீதான அன்புமே நிறைந்து வழிகிறது.

குடிக்கு இப்போது கிடைக்கிற சமூக அங்கீகாரம் அச்சம் தருகிறது. ‘கெட்ட பழக்கம்’ என்று ஒதுக்கியது மாறி, வரன் தேடும் விளம்பரங்களில் ‘மணமகன் அவ்வப்போது குடித்தால் பரவாயில்லை’ என்று சொல்வது அதிகமாகி வருகிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகளில், வாகனம் ஓட்டுபவர்களைவிட அப்பாவி பொதுமக்களே அதிகம் பலியாகின்றனர். எல்லா வகை குற்றச் செயல்களிலும், அதைச் செய்பவர்கள் பெரும்பாலும் போதையிலேயே செய்கின்றனர். குடி வன்மத்தைத் தராவிட்டாலும், குற்றம் செய்வதற்கான தைரியத்தை அளிக்கிறது.

குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் குடும்பங்கள், கணவனை இழந்த இளம்பெண்கள் என பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிற குடியை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தன்னந்தனிப் பெண்ணாக எதிர்த்துப் போராடியதுதான் சாந்தி ரங்கநாதனின் பெருமை. குடி நோய் கணவரைக் கொன்றதும் முடங்கிப் போகாமல், தன்னம்பிக்கையோடும் பொது நலத்தோடும் எழுந்து நின்றார். அந்தக் கம்பீரத்தின் அர்த்தமுள்ள அடையாளமாகி இருக்கிறது, சென்னை அடையாறில் உள்ள ‘டி.டி.கே. ரங்கநாதன் நினைவு மருத்துவமனை’.

‘‘ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் வர்த்தகம் செய்கிற குடும்பத்தின் மருமகள் நான். பணம் மட்டுமின்றி, பாரம்பரியமும் குடும்ப கௌரவமும் பெரிய சொத்து. என்னைச் சுற்றி எல்லாமே இருந்தது. ஆனால், நான் மிகவும் நேசித்த, என்னை மிகவும் நேசித்த என் கணவர் இல்லை. இளமையும் கனவும் நிறைந்த வாழ்க்கை, அவர் மறைந்ததும் மொத்தமாக இருட்டிவிட்டது. குடி என்கிற அரக்கன் என் அத்தனை நிம்மதியையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போனான். 

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஇந்த சோதனைக்கு என்னை ஏன் கடவுள் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி எனக்குள் சின்ன வெளிச்சத்தை ஏற்படுத்தியது. என் மாமியார் வாரந்தோறும் பகவத் கீதை வகுப்பெடுப்பார். ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற கீதா சாரத்தை, கணவரின் மரணத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்வது சிரமமாகவே இருந்தது. ஒரு சராசரிப் பெண்ணாக சாதாரண குடும்பத்தில் வாழ்க்கைப்பட வேண்டியவளை, வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட வைத்து, எந்த சந்தோஷத்தையும் முழுமையாக அனுபவிக்க விடாமல் ஏன் பறித்துக் கொண்டார் என்கிற கேள்வியிலிருந்து என் தேடல் தொடங்கியது. என்னைப் போல பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களுக்கு என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்ற கேள்வியாக அந்தத் தேடல் மாறியது.

நான் வீட்டுக்குள் முடங்கி தன்னம்பிக்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று நினைத்த மாமியார், என்னை கம்பெனி நிர்வாகத்தைக் கவனிக்கச் சொன்னார். நானும் முயற்சி செய்தேன். படிப்பும் ஆளுமைத் திறனும் நிர்வாகம் செய்ய உதவினாலும், ‘குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்ய நல்ல மருத்துவமனை உருவாக்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் கடவுள் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார். பிசினஸில் ஆர்வம் இல்லை என்கிற முடிவைச் சொன்னதும், ‘உனக்கு விருப்பமானதைச் செய்’ என மாமியார் ஊக்கப்படுத்தினார்.

குடிநோய் குறித்து முறைப்படி அறிந்து கொள்ள முயற்சி எடுத்தேன். இந்தியாவில் அதற்கான படிப்பு எதுவும் இல்லை; அமெரிக்கா போய் படித்தாக வேண்டும். துணைக்கு என் அக்காவைக் கூட்டிக்கொண்டு கிளம்பினேன். குடியின் தன்மை, இயல்பு, விபரீதம், உடல்ரீதியான பாதிப்புகள், மனரீதியான பாதிப்புகள், சிகிச்சை முறைகள், குடி நோயாளியின் குடும்பங்களைத் தயார்படுத்தும் நிலை என எல்லாம் புரிந்துகொண்டேன்.

 குடியை ‘பழக்கம்’ என்று புரிந்துகொண்டிருக்கும் சமூகத்தில், ‘குடி என்பது ஒரு நோய்’ என்று புரிய வைக்கிற சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என மலைப்பாக இருந்தது. மாற்றங்களை வேறு யாரோ வந்து செய்வார்கள் என நம்பிக்கொண்டு சும்மா இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? கணவரைக் காப்பாற்றத் தேடியலைந்தபோது கற்ற பாடங்கள், முறையான படிப்பு, குடும்பத்தின் அன்பான ஒத்துழைப்பு, சமூகத்தில் நல்ல மனிதர்களின் ஆதரவு எல்லாம் இருந்தும், ‘நாம் செய்யாமல் போனால், வேறு யார் செய்வார்கள்?’ என்கிற கேள்வி என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தது.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஈஸ்வரன் ஐயர் என்பவரின் உதவியோடு, 1980ல் சென்னையில் ஒரு சிறிய வீட்டிலிருந்து தொடங்கியது புதிய பயணம். எந்தச் சூழ்நிலையிலும் ‘பணம் சம்பாதிக்கிற வழியாக’ மருத்துவ மனையை நடத்தி விடக் கூடாது என்பதே முதல் குறிக் கோள். விளம்பரம் எதுவும் இல்லாமலேயே மக்கள் தேடி வந்தனர். ‘கணவனிடம் குடிப் பழக்கம் ஒழிந்து வாழ்க்கையில் மறு மலர்ச்சி ஏற்பட்டு விடாதா’ என்கிற ஏக்கத்தோடு என்னைத் தேடி வரும் ஒவ்வொரு பெண்ணின் கண்ணிலும் என்னை நான் பார்த்தேன். குடித்துவிட்டு நிலை தெரியாமல் விழுந்து கிடக்கிறவர் அவமானம் அடைகிறாரோ இல்லையோ, அவருடைய குடும்பம், குழந்தைகள், உறவினர்கள் அவமானம் அடைகிறார்கள். குடித்த நிலையில் இதை உணராமல் போனாலும், தெளிந்த பிறகு அநேகர் இதை உணரவே செய்கிறார்கள். விடுபட நினைத்தாலும், குடி நோய் அவர்களை விடுவது இல்லை.

மருத்துவர்கள், மனநல நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள். நோயாளிகளின் வருகை அதிகமாகவே, தனக்குச் சொந்தமான பெரிய வீட்டை மருத்துவமனையாக்கினார் என் மாமியார். ஐந்து வருடங்களில் அந்த இடமும் போதவில்லை. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து நிலையை விளக்கினேன். குறைந்த விலையில் 20 கிரவுண்ட் நிலத்தை ஒதுக்கினார்.

 டி.டி.கே. குழுமம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்தது. அந்தப் பணத்தில் கட்டிடம் கட்டினோம். அனைத்து வசதிகளுடன் இந்தியாவிலேயே குடிநோயாளிகளுக்கான முதல் மருத்துவமனை, 70 படுக்கைகளுடன் உருவானது. குடிநோயாளி ஏழையாக இருப்பின் முற்றிலும் இலவச சிகிச்சை அளிப்பதோடு, அவருடைய மனைவிக்கு தொழிற்பயிற்சியும் அளிக்கிறோம். மற்ற நோயாளிகளிடம் மிகக்குறைந்த கட்டணத்தைப் பெறுகிறோம். எய்ட்ஸ் போன்ற நோய்கள் உயிர்க்கொல்லி நோய்கள் எனில், குடி நோய் குடும்பக்கொல்லி நோய். குடிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போதே, அவர்களின் குடும்பத்தாருக்கும் கவுன்சலிங் செய்கிறோம்.

விழிப்புணர்வுதான் குடிநோயின் முதல் மருந்து. குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவீதத்தினர் மோசமான குடிநோயாளியாக மாறுகின்றனர். இதில் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், முதலாளி, தொழிலாளி என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. குடிநோயாளியால் குடியின் அளவைக் குறைக்க முடியாது. ‘எவ்ளோ அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்’ என பொய்யாக நம்புவார்கள். மதுவின் தேவையும், அளவும் அதிகரிப்பதுதான் குடிநோயின் ஆரம்பநிலை. குடித்த மறுநாள், நேற்று நடந்த சம்பவங்களை கோர்வையாக நினைவுபடுத்த முடியாது. குடும்பத்தினரையும், வேலையையும், சூழ்நிலைகளையும், கஷ்டங்களையும் காரணம் சொல்லி தொடர்ந்து குடிப்பது அபாய கட்டத்தின் இரண்டாவது நிலை. அவமானங்களையும், இழப்புகளையும் பொருட்படுத்தாத நிலை இது. குடிப்பதற்காக திருடுதல், பொய் சொல்லுதல், ஏமாற்றத் துணிதல், கடன் வாங்குதல் போன்ற அறிகுறிகள் குடிநோயின் இறுதிக்கட்டம். குடி இல்லாமல் இவர்களால் செயல்படவே முடியாது. 

குடிக்கு அடிமையானவர் அதிலிருந்து மீள்வதற்கு மன உறுதி அவசியம். தொடர்ந்து சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்த பின்னால், மீண்டும் ஒரு முறை குடித்தாலும் குடிநோய் தொற்றிக்கொள்ளும். எங்கள் மருத்துவ மனையில் ஒரு பழக்கம் உண்டு. குடிநோயிலிருந்து குணமடைந்தவர் தொடர்ந்து ஒரு வருடம் குடிக்காமல் இருந்தால், அதுதான் அவரின் முதல் வயது. குடியை விட்ட அவரின் பிறந்த நாளை மற்ற குடிநோயாளிகளுடன் கொண்டாடுவார். மற்றவர்களுக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தும். ஒரு முறை குடித்திருந்தாலும், மீண்டும் முதலில் இருந்து அவரது வயது தொடங்கும். சுய நினைவே இன்றி குடித்தவர்கள்கூட முழுமையாக மீண்டு, இருபது ஆண்டுகள் குடிக்காமல் இருக்கிறார்கள்.

எனக்குத் துன்பம் கொடுத்து, மற்றவர்களுக்கு உதவுகிற வாழ்க்கையை அளித்தார் கடவுள். கணவரைக் கவனித்துக்கொண்டு சாதாரண குடும்பப் பெண்ணாக வாழ்ந்து முடிந்திருக்க வேண்டிய என்னை, ஆராய்ச்சி மாணவியாக்கி பி.எச்.டி. வரை கொண்டு வந்து நிறுத்திய வாழ்க்கை. ஐ.நா சபை அங்கீகாரம் போன்ற பல கௌரவங்கள் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இப்போ எம் புருஷன் குடிக்கிறது இல்லை. நல்லா இருக்கேம்மா’ என பெண்கள் வந்து சொல்லும் ஒவ்வொரு முறையும், இந்த ஜென்மத்திற்கான பலனை அடைந்த நிறைவு கிடைக்கிறது. இந்தப் பெருமை, அங்கீகாரம், வாழ்த்துகள் அனைத்தையும் கணவருக்கே காணிக்கையாக்குகிறேன்’’ என்கிற சாந்தியின் அர்த்தமுள்ள வாழ்வால் இன்னும் வாழ்கிறார் அவரது கணவர்.
(திருப்பங்கள் தொடரும்...)
- படங்கள்: புதூர் சரவணன்
த.செ.ஞானவேல்