இது ராகுல் காந்தியின் தோல்வியா?



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

         ‘அடுத்த பிரதமர்’ என காங்கிரஸில் எல்லா பெரிய தலைகளும் ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தியின் இமேஜை அப்படியே புரட்டிப் போட்டிருக்கிறது உத்தரப் பிரதேசத் தேர்தல். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் மணிப்பூர் தவிர வேறெந்த மாநிலமும் காங்கிரஸுக்கு உற்சாகம் தரவில்லை. கோவாவில் ஆட்சியை இழந்தது. பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கும் எதிர்பார்ப்பு கரைந்தது. உத்தரகாண்டில் இழுபறி.

என்றாலும் எல்லோரது எதிர்பார்ப்பும் உ.பியில்தான்! கடந்த 2009 முதலே உ.பியைச் சுற்றிச் சுற்றி வந்தார் அவர். தலித் வீடுகளில் சாப்பிட்டார். மாயாவதி அரசால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு விசிட் அடித்தார். அம்மா சோனியா, சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வடேரா, அவர்களது குழந்தைகள் என பெரிய டீம் வந்து பிரசாரம் செய்தும் நான்காவது இடத்தையே பிடித்தது காங்கிரஸ்.

தோல்விக்கு என்ன காரணம்? தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரனும் காரசாரமாக விவாதிக்கிறார்கள்.

ஞானதேசிகன்

‘‘இந்தத் தேர்தல் முடிவுகளை வச்சு வரப்போற நாடாளுமன்றத் தேர்தலைக் கணிக்கறது தப்புங்கிறதை முதல்லயே சொல்லிடறேன். அப்படி யாராச்சும் கணிச்சாங்கன்னா, அவங்க ஏமாறத்தான் போறாங்க. ஏன்னா, உ.பி.யில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை குறைவா இருந்த காலத்துலயே அதிக எம்.பி. சீட்டுகளைப் பிடிச்சிருக்கு காங்கிரஸ். தவிர, கடந்த தேர்தலைவிட அங்க இந்த முறை கூடுதலாகவும் சீட் பிடிச்சிருக்கோம். அதுவும்போக ‘உத்தரப் பிரதேசத்துல ஆட்சியைப் பிடிப்போம்’னு ஒருகாலத்துலயும் நாங்க சொன்னதில்லை. இந்திரா காந்தி, ராஜீவ் மேல பாசம் காட்டினவங்க உ.பி. மக்கள். அவங்களை பாசத்தோட சோனியாவும் ராகுலும் அணுகுனாங்க. ஆனா மாயாவதி ஆட்சியில பட்ட அவஸ்தை மக்களை ஒட்டுமொத்தமா இன்னொரு பக்கம் திரும்ப வச்சிடுச்சு.

ரேபரேலியிலயே காங்கிரஸ் ஜெயிக்கலைன்னு சொல்றாங்க. ‘யாரும் ஜெயிக்கலாம்; யாரும் தோற்கலாம்’ ங்கிறது நல்ல ஜனநாயகத்துக் கான அறிகுறி தானே? இந்திரா காந்தி, காமராஜர், அண்ணா, இப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா... இவங்கல்லாம் தோல்வியைச் சந்திக்கலையா? அன்னிக்கு அங்க என்ன சூழ்நிலையோ அதுதான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்குது. ஐந்து மாநில முடிவுகளைப் பொறுத்தவரைக்கும், கோவாவுல மட்டும்தான் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு. அதுவும் உள்ளூர் அரசியல் காரணங்களால! மத்த மாநிலங்கள் எல்லாத்துலயும் காங்கிரஸ் கடந்த தேர்தலைவிட அதிகமாவே ஓட்டு வாங்கியிருக்கு. அதனால இந்த முடிவுகள் இப்போதைய மன்மோகன் சிங் ஆட்சிக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலைங்கிறதுதான் நிஜம்.’’

சி.மகேந்திரன்

‘‘யாரும் எப்படி வேணும்னாலும் சப்பைக்கட்டு கட்டலாம். உண்மை என்னன்னா... காங்கிரஸ், பாரதிய ஜனதா ரெண்டு கட்சிகளுக்குமே இந்த முடிவுகள் அதிர்ச்சி வைத்தியம்தான். பஞ்சாப்லயும் கோவாவுலயும் ஏறுமுகம்னு பாரதிய ஜனதா சொல்லுதுன்னா, அதுக்கு அந்தந்த மாநிலங்கள்ல இருக்கற தலைவர்கள் மீதான மக்களோட நம்பிக்கைதான் காரணமா இருக்கமுடியும். கொள்கை ஜெயிச்சதா சொல்ல முடியாது. ‘அயோத்தி’ங்கிற இடத்தை வச்சே அரசியல் பண்ணிட்டிருந்த அவங்களை, அந்தத் தொகுதி மக்களே தூக்கி எறிஞ்சிருக்காங்களே! இனிமே எப்படி அந்த விவகாரத்தைக் கையில எடுக்கறாங்கன்னு பார்க்கலாம்.

இந்தப் பக்கம் காங்கிரஸ்... ராகுல் காந்தியும் பிரியங்காவும் உத்தரப்பிரதேசத்துல போகாத ஊரே இல்லைங்கிற அளவுக்கு பிரசாரம் பண்ணுனாங்க. அதுலயும் ராகுலோட பிரசாரத்தை மீடியாக்கள்கூட பரபரப்பா கவர் பண்ணுச்சு. அவரும் என்னென்னமோ ஆச்சரியங்கள் நிகழப்போற மாதிரிதான் பேசுனார். ஆனா ரிசல்ட்? அவரோட அமேதி தொகுதியிலயே முழுசா ஜெயிக்க முடியலையே. அதைவிட சோனியா காந்தியோட ரேபரேலி தொகுதியில காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்கலையே. இது மோசமான தோல்வி இல்லையா? ‘நேரு குடும்பம்ங்கிற ஒரு அடையாளத்தை வச்சுக்கிட்டு இனி அரசியல் பண்ணமுடியாது’ங்கிறதை மக்கள் காங்கிரசுக்கு தெளிவா உணர்த்தியிருக்காங்க. ஐந்து மாநிலங்கள்லயும் அவங்க யதார்த்தத்துக்கு ஓட்டு போட்டிருக்காங்க. உள்ளூர் பிரச்னைகளால ஏற்படற பாதிப்பைப் பார்த்திருக்காங்க. மாயாவதி ஆட்சி மீதான அதிருப்திதான் சமாஜ்வாடியை ஜெயிக்க வச்சிருக்கு.

கம்யூனிஸ்ட் கட்சிகள் என்னத்த சாதிச்சதுன்னு சிலர் கேக்கலாம். தேர்தல் நடந்த சில மாநிலங்கள்ல அமைப்பு ரீதியா கொஞ்சம் பலவீனமாத்தான் நாங்க இருக்கோம். அதோட கூட்டணியும் சரியா அமையாததால் தனித்தே போட்டியிட வேண்டிய நிலை. அதனால ஓரளவுக்கு ஓட்டு வாங்குனோம். அதேநேரம், இந்த தேர்தல் முடிவுகள் வரப்போற நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமா அமைஞ்சிருக்குங்கிறதும் உண்மை. வரும் தேர்தல்ல காங்கிரஸ், பாரதிய ஜனதா ரெண்டு கட்சிகளுக்குமே மெஜாரிட்டி கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. பன்முகத்தன்மை கொண்ட ஒரு அரசாங்கம்தான் வேணும்னு மக்கள் நினைக்கறாங்க. அப்படியொரு அரசு அமையறதுல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எப்பவுமே உடன்பாடுதான்!’’
 அய்யனார் ராஜன்