அதிர்ச்சி ஏற்படுத்திய கமல் படம்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   ''எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சிங்கமுகம் தெரியும் அசோக ஸ்தூபி போல பன்முகம் கொண்ட கலைஞன் கமல். அவருக்குள் ஒரு பிரமாதமான போட்டோகிராபரும் இருக்கிறார்...

நான் பத்திரிகை போட்டோகிராபராக இருந்த சமயத்தில் ஆர்.சி.சக்தி இயக்கிய படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கமல். ஆர்மோனியப் பெட்டிக்கும் விரல்களுக்கும் ஓய்வுகொடுத்துவிட்டு இளையராஜா ரிலாக்ஸாக உரையாடுவதென்பது அத்திபூத்தாற் போன்ற நிகழ்வு. அப்படி ஒரு அரிதான பொழுதில் கலைஞானியும் இசைஞானியும் பேசிக்கொண்டிருந்ததை நான் க்ளிக்கிய படம்தான் நீங்கள் பார்ப்பது... ரெக்கார்டிங் தியேட்டரில் கோல்டு ஸ்பாட்டும் கையுமாக ராஜா அமர்ந்திருக்கும் இந்தப் படம்தான், போட்டோகிராபர் கமலைப் பற்றிய நினைவுகளை எனக்குள்ளிருந்து கொண்டு வருகிறது.

எங்கு போனாலும் கேமராவை கையில் எடுத்துச்செல்வது கமலின் பழக்கம். திரும்பி வரும்போது அந்த ஃபிலிம் ரோலில் அரிய காட்சிகள் சிறைபட்டுக் கிடக்கும். நல்ல நடிகர் என்ற முகம் தாண்டி, மிகச்சிறந்த போட்டோகிராபராகவும் அவரை உணர்ந்தபிறகே, கமல் மீதான என் காதல் அதிகமானது. மற்றவர் பார்வையிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான படங்களை எடுக்கவேண்டும் என்ற எண்ணமும், உத்வேகமும் எனக்கு அவரிடமிருந்துதான் கிடைத்தது.

சும்மா பொழுதுபோக்கிற்காக புகைப்படங்கள் எடுத்தார் என்று போட்டோகிராபர் கமலுக்கு சாதாரணமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது. ஒருமுறை நேபாளத்திற்கு சென்றிருந்த கமல், எருமை மாடு வெட்டப்படும் ஒரு படத்தை எடுத்து வந்தார். அந்தப் படத்தில் நிரம்பிக் கிடந்த அதிர்ச்சியை அவ்வளவு எளிதாக விவரிக்க முடியாது. இன்னொரு சமயம் குரங்கு கோல்டு ஸ்பாட் குடிக்கும் ஒரு படத்தை எடுத்துவந்து காட்டினார். பல வருடங்களுக்கு முன் எடுத்த படம் அது. அந்தக் குரங்கு எப்போதோ இறந்திருக்கலாம். ஆனால் கமல் எடுத்த போட்டோவில் இன்னும் அது வாழ்ந்து கொண்டிருக்கிறது.

புகழ்பெற்ற போட்டோ கிராபர்களே ஃபிலிம் ரோல் உள்ள கேமராக்களே வைத்திருந்த நேரத்தில், முதல்முறையாக டிஜிட்டல் கேமரா வாங்கியவர் கமல்தான். அவரைப் பார்த்துத் தான் நானும் லண்டன் சென்று டிஜிட்டல் கேமரா வாங்கி வந்தேன். சினிமா நட்சத்திரங்களையும் மாடல்களையும் புகைப்படம் எடுப்பதற்காக சென்னையில் இன்று எத்தனையோ ஸ்டுடியோக்கள் வந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பிரபலங்களை போட்டோ ஷூட் செய்ய ஸ்டுடியோ தொடங்கியது நான்தான். இதற்குக் காரணமும் கமல்தான். 'ரவி... நீ ஏன் வெளிநாடுகளில் உள்ளது போல ஸ்டுடியோ தொடங்கக்கூடாது’ என்று என்னை உற்சாகப்படுத்தி, அதனைச் செய்யவும் வைத்தார்.

எனது புகைப்படப் பயணத்தில் அந்த ‘ராஜபார்வை’ காட்டிய வழி ஒளிமயமானது.
  நெக்ஸ்ட் ஷாட்
தொகுப்பு: அமலன்