தமிழகத்தில் தயாராகும் ரோபோ போர்வீரன்!



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

        ‘‘ஹீ இஸ் சிட்டி... த ரோபோ! இந்திய ராணுவத்துக்கு என்னோட சமர்ப்பணம்’’

 ‘எந்திரன்’ படத்தில் சூப்பர்ஸ்டார் பேசிய இந்த டயலாக் இத்தனை சீக்கிரம் உண்மையாகும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். யெஸ்! நிஜமாகவே இந்திய ராணுவத்தில் உயிர்ச் சேதத்தைத் தடுக்க உருவாகி வருகிறான் சக்தி வாய்ந்த ஒரு ரோபோ போர் வீரன். அவன் பெயர் மன்ட்ரா!

அது என்ன மன்ட்ரா?

‘மிஷன் அன்மேன்டு ட்ராக்’ என்பதன் சுருக்கமே ‘மன்ட்ரா’. அதாவது, ‘ஆளில்லா ரோபோட்டிக் வாகனம்’! இந்திய போர் ஊர்தி தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இது ரெடியானால், போர்களில் கும்பல் கும்பலாக வீரர்கள் எல்லையில் நின்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. எதிரிகளின் இலக்குக்கு ஆளாகி சாக வேண்டியதும் இல்லை. அந்த வேலையை மன்ட்ரா செய்துவிடும். மொத்த இந்தியாவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மன்ட்ரா, தற்போது தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் சென்னையை அடுத்த ஆவடிக்கு ஒரு விசிட் அடித்தோம்.

‘‘இது நம்ம இந்திய ராணுவத்துக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அடுத்த கட்டம்!’’ என்று துவங்கினார் மன்ட்ராவை கவனிக்கும் ஸ்பெஷல் அதிகாரி, ஸ்வர்ணா ரமேஷ்.

‘‘உலகமே அமைதியைத்தான் விரும்புது. ஆனாலும் எந்த நேரத்துல எது நடக்கும்னு சொல்ல முடியுதா? ‘தற்காப்புக்காக நம்ம ஆயுதங்களை மேம்படுத்தணும்’ங்கிறதுதான் ராணுவத்தை பலப்படுத்தற ஒவ்வொரு நாடும் சொல்ற டயலாக். அதனால நாமளும் அதையே சொல்லிக்கலாம்; தப்பில்லை.

‘தீ’ன்னு சொன்னதும் சுட்டுடாது. ஒருவேளை சண்டை வந்துடுச்சுன்னு வச்சுக்கோங்க... அறிவியல் முன்னேற்றத்தை அங்கேயும் காட்டத் துடிக்கிறான் மனுஷன். புதுசு புதுசா தினுசு தினுசா சண்டை போட்டாதான் ஜெயிக்க முடியும்னு எல்லாருமே நினைக்கிறாங்க. போர்னு வந்தா ‘என்ன பண்ணணும்’, ‘என்ன பண்ணக்கூடாது’ன்னு முன்னால எல்லாம் நிறைய மரபுகள் இருந்திருக்கு. இன்னிக்கு அதெல்லாம் காத்துல பறந்துடுச்சு. எப்படி வேணும்னாலும் போர் செய்யலாம், ஜெயிக்கறதுதான் முக்கியம்னு ஆயிடுச்சு. ‘பயாலஜிகல் வார்’ங்கிற பேர்ல காத்துல விஷத்தைக் கலந்து சம்பந்தமில்லாத அப்பாவி மக்களைக்கூட கூட்டம் கூட்டமா கொல்றாங்க.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineகளத்துல நேருக்கு நேரா நின்னு சண்டை போடறவங்களுக்கும் ஏகப்பட்ட ரிஸ்க். ஏன்னா, போர் ஆயுதங்கள் இன்னிக்கு அவ்வளவு அட்வான்ஸா, படு டெக்னிக்கலா இருக்கு. ஆயுத கம்பெனிகள் இன்னும் இன்னும் அதை வலிமையாக்கிட்டே போறதுனால உயிரிழப்புகள் சர்வசாதாரணமாயிடுது. ‘நாட்டுப் பற்று’ன்னு என்னதான் சொல்லிக்கிட்டாலும் போர் வீரர்களுக்கும் கிடைக்கிறது ஒரு வாழ்க்கைதானே! எல்லா நாடுகளும் இப்படி யோசிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. ‘என்ன ஆராய்ச்சி வேணாலும் பண்ணலாம்... எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல... ஆனா, சண்டையில வீரர்கள் சாகாம இருக்கணும்’ங்கிறதுதான் இன்னிக்கு உலக நாடுகளோட ஒரே குறிக்கோள்.

தொடர் ஆராய்ச்சிகள் மூலமா அதுக்கு கிட்டத்தட்ட தீர்வும் தேடிட்டாங்கன்னுதான் சொல்லணும். ‘ரோபோ’க்கள்தான் அந்தத் தீர்வு. உருவானபோது அதுங்களைப் போர்ல பயன்படுத்த நினைச்சாங்களானு தெரியலை. ஆனா, வருங்காலங்கள்ல ரெண்டு நாடுகளுக்கிடையில சண்டை வந்தா போர்க்களத்துல மோதப் போறதென்னவோ இந்த ரோபோ வீரர்கள்தான்னு உறுதியாச் சொல்லலாம். இப்பவே சில நாடுகள்ல ‘ரோபோ வீரர்கள்’ பயிற்சி எடுத்துட்டிருக்கிறதா நியூஸ் கிடைச்சிருக்கு’’ என்கிற ஸ்வர்ணாவிடம் மன்ட்ரா பற்றிக் கேட்டால், உற்சாகமாகி விடுகிறார்...

‘‘மன்ட்ரா முழுக்க முழுக்க இந்தியாவோட தயாரிப்பு. போர்க் களத்துல நம்ம வீரர்களால போக முடியாத ஹை ரிஸ்க் ஏரியாவுக்குள்ள நுழையறதுதான் இதோட முதல் வேலை. எதிரி வீரர்கள் ஒளிஞ்சிருக்காங்களான்னு கண்டுபிடிக்கறதும், கண்ணிவெடிகள் இருந்தா கண்டுபிடிச்சு செயலிழக்கச் செய்யறதும் அடுத்தடுத்த வேலைகள். இந்த வேலைகளுக்குத் தேவையான கேமரா, சென்ஸார்னு எல்லா வசதிகளும் ‘மன்ட்ரா’ல இருக்கு. இது, களத்துக்குத் தனியா போனாலும், இயக்கறது ஒரு கமாண்டர்தான். அவர் பல கிலோமீட்டர்கள் தூரத்துல, ஒரு பேஸ் ஸ்டேஷன்ல இருப்பார். ரெண்டு பேருக்கும் ரிமோட் தொடர்பு இருக்கும்.
டிரான்ஸ்மிட்டர், சாட்டிலைட் தொடர்புனு எல்லாமே பக்காவான செட்டப். அதனால வெயில், மழை, காத்துன்னு எந்த இடைஞ்சலும் பிரச்னை இல்ல’’ என்று பெருமை பொங்குகிறார் ஸ்வர்ணா.

பரிசோதனைகள் உள்ளிட்ட சில நடைமுறைகள் இன்னும் பாக்கியிருப்பதால், அவை முடிந்த உடன் ‘மன்ட்ரா’ ராணுவத்தில் சேரத் தயார். அதற்குள் மன்ட்ரா பற்றிய எதிர்பார்ப்பு நாடு முழுவதும் பற்றிக் கொள்ள, இந்திய ராணுவத்தில் வீரர்கள் முதல் தளபதிகள் வரை பலரும் ஆவடிக்கு வந்து ‘மன்ட்ரா’ தரிசனம் முடித்து ஆச்சரியத்தோடு திரும்பினார்களாம்.

‘‘இன்னிக்கு மன்ட்ரா ஒரு வாகனம்தான். நாளைக்கு இதே மன்ட்ரா கை கால் முளைச்ச இயந்திர மனுஷனா களத்துல துப்பாக்கி தூக்கற அதிசயத்தை நாம பார்க்கத்தான் போறோம்!’’ என்று நம்பிக்கை தருகிறார் ஸ்வர்ணா.

புதிய மனிதா பூமிக்கு வா!
 அய்யனார் ராஜன்
படங்கள்: தினேஷ்