குறி வைக்கப்படும் வட இந்தியர்கள்... புதிய குற்றப்பரம்பரை?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                 தமிழகத்தின் சாயல் இல்லாத எந்த முகத்தையும் சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள் மக்கள். மாலை 6 மணிக்குப் பிறகு மேல் தெருக்களில் தனித்து நடமாடும் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ ‘தமிழகத்தில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் வடமாநில இளைஞர்கள்தான் காரணம்’ என்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. வங்கிக் கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, எந்த குற்றப் பின்னணியும் இல்லாத லட்சக்கணக்கான வடமாநில மக்களின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது.

பீகார், ஒடிஸா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் போதிய தொழில் வாய்ப்புகள் இல்லை. உள்ளூர் கிராமியத் தொழில்கள் நசிந்துவிட்ட நிலையில், இருக்கும் வாய்ப்புகளை படித்த மேல்தட்டு மக்கள் பறித்துக்கொள்கிறார்கள். படிக்காத அடித்தட்டு இளைஞர்கள் வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங் களுக்கு இடம்பெயர வேண்டிய நெருக்கடி. கடந்த 20 வருடங்களாக இந்தச்சூழல் நீடிக்கிறது.

தொடக்கத்தில் மும்பைதான் இவர்களின் போக்கிடம். டீக்கடை தொடங்கி, கட்டுமான நிறுவனங்கள் வரை கிடைக்கும் வேலையை, கிடைத்த கூலிக்குச் செய்தார்கள். சில வருடங்களாக அங்கு பிற மாநில மக்களுக்கு எதிராக வன்முறை வலுவடைந்து வருகிறது. அதனால் மெல்ல மெல்ல அங்கிருந்து வெளியேறும் அவர்களின் அடுத்த இலக்கு தமிழகம்தான். காரணம், தமிழகம் அமைதிப் பூங்கா. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவு. வேலைவாய்ப்புகளுக்கும் குறைவில்லை.

ஆரம்பத்தில் இவர்களை யாரும் நம்பவில்லை. மொழியும் பிரச்னையாக இருந்தது. காலப்போக்கில் இவர்களின் உழைப்புத்திறனைப் பார்த்து செங்கல் சூளைகள், உணவகங்கள், டீக்கடைகளில் சேர்த்துக் கொண்டார்கள். கால நேரம் பார்க்காத உழைப்பு, முகம் சுளிக்காத வேலை, குறைந்த கூலிக்கும் வருவது என உள்ளூர்த் தொழிலாளர்களிடம் கிடைக்காத பல பலன்கள் அவர்களிடம் கிடைத்ததால் காலப்போக்கில் பெரும் கட்டுமான நிறுவனங்களும் அவர்களை வேலைக்கு அமர்த்தின. ஒருகட்டத்தில் தேவை அதிகரிக்க, வடமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கென்றே ஏஜென்டுகள் முளைத்தார்கள்.

பீகார், ஒடிஸா இளைஞர்கள் கட்டுமான வேலைக்கு... மணிப்பூர், மிசோரம் இளைஞர்கள் உணவகங்களுக்கு... இப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு தகுதி நிர்ணயித்து ஆட்களைப் பிடிக்கிறார்கள். அடித்தட்டு மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று, கிராமத் தலைவரை ‘கவனித்து’, அவர் மூலமாகவே ஆட்களைப் பிடிக்கிறார்கள். இலவச ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் இவர்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதம் ஏஜென்ட் கமிஷனாம். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஏஜென்டுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரே ஒருமுறை அலைந்ததைத் தவிர வேறு எதுவும் செய்யாத இவர்களின் மாத வருமானம் பல லட்சங்களைத் தாண்டும்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineவேலை நடக்கும் இடத்திலேயே தகரத்தால் ஆன வீடு. சமைத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். 12 மணி நேர வேலை... சில இடங்களில் கூடுதலாக கணக்கில் எழுதிவிட்டு குறைந்த சம்பளம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உண்டு. மாதம் முடிந்தால் அதிகபட்சம் கையில் கிடைப்பது 3000 முதல் 4500 ரூபாய் வரைதான். வருடத்துக்கு ஒருமுறை ஊருக்குச் சென்று குடும்பத்தைப் பார்க்கலாம். இதுதான் இவர்களின் வாழ்க்கைச் சரிதம்.  

‘‘தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்’’ என்கிறார் மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் அ.மார்க்ஸ். ‘‘இந்தத் தொழிலாளர்கள் மத்தியிலும் குற்றவாளிகள் இருக்கலாம். அவர்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், வடமாநிலத்தவர் என்றாலே குற்றவாளிகள் என்ற எண்ணத்தை உருவாக்கி விடக்கூடாது. தற்போது இனவாரிக் கணக்கெடுப்பு போல வெளி மாநிலத்தவரின் தகவல்களைச் சேகரிக்கிறார்கள். கைரேகை பதிவு செய்யப்படுகிறது. கல்விக்கூடங்களில் கணக்கெடுக்கிறார்கள். 5 பேர் சுடப்பட்ட சம்பவத்தில் ஒட்டப்படுகிற சுவரொட்டிகள் வட மாநிலத்தவரை மோசமாக சித்தரிக்கின்றன. உண்மையில் பெரும்பாலான வடஇந்தியத் தொழிலாளர்கள் பசியோடு போராடுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களை முறைப்படுத்த நினைத்தால், தொழிலாளர் நலத்துறை மூலம் பதிவுசெய்து அடையாள அட்டை வழங்கலாம். அப்படி அட்டை வைத்திருப்பவர்களுக்கே நிறுவனங்கள் வேலை தரவேண்டும். இவர்களின் உழைப்பைச் சுரண்டும் ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...’’ என்று கூறும் மார்க்ஸ், ‘‘உலகம் முழுவதும் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இப்படியொரு சூழல் வந்தால் நாம் பொறுத்துக் கொள்ளமாட்டோம். ‘தென் மாநிலத்தவரால்தான் மகாராஷ்டிராவில் குற்றங்கள் பெருகிவிட்டன’ என்று பால் தாக்கரே கூறியபோது எல்லோரும் கொதித்தெழுந்தோம். அதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது...’’ என்கிறார்.

‘‘பிற மாநில மக்களை சகோதர உணர்வோடு ஏற்றுக் கொள்ளும் மாநிலம் தமிழகம். ஆனால் இப்போதைய சூழ்நிலை மிகவும் கவலை யளிக்கிறது...’’ என்கிறார் ‘தமிழக பீகார் அசோசி யேஷன்’ தலைவர் ஷோபாகாந்த் தாஸ். ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, அண்ணா போன்ற பெருந்தலைவர்களுடன் இணைந்து அரசியல் பணியாற்றியுள்ள சுதந்திரப் போராளி இவர்.

‘‘வாழ வழியில்லாத நிலையில்தான் வடமாநில மக்கள் இங்கே வருகிறார்கள். இங்குள்ள சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி வாழப் பழகிக்கொள்கிறார்கள். 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்தாலும் குறைந்த கூலிதான் கிடைக்கிறது. இவர்களது பெயரைச் சொல்லி பலர் வாழ்கிறார்கள். குற்றங்களைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பது சரிதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறி வைப்பது போல அதைச் செய்யக்கூடாது. இதனால் மக்கள் மத்தியில் பீதி உருவாகியிருக்கிறது. பிற மாநிலத்தைச் சேர்ந்தவர் தெருக்களில் நடந்தாலே ஒருமாதிரி பார்க்கிறார்கள்.

இங்குள்ள அதிகாரிகள் பீகாரிலும், பீகாரில் உள்ள அதிகாரிகள் இங்கும் வேலை செய்கிறார்கள். இங்கிருந்தும் பல தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் போய் வேலை செய்கிறார்கள். மகாராஷ்டிராவில் பிற மாநில மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பெரும்பாலானவர்கள் வெளியேறி விட்டார்கள். அதனால் அங்கு பல தொழில்கள் முடங்கி விட்டன. அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சகோதரத்துவமும், பண்பாடும் கொண்ட தமிழ்நாட்டை நம்பி வந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு நாம்தான் பாதுகாப்பு. காவல்துறையின் நடவடிக்கைகள் அவர்களை புண்படுத்தி விடக்கூடாது’’ என்று அக்கறையாகப் பேசுகிறார் ஷோபாகாந்த் தாஸ்.   
 
இந்திய சரித்திரத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் என்றொரு கரும்புள்ளி உண்டு. மக்களை இனம்பிரித்து, குறிப்பிட்ட சமூகத்தையே குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி நசுக்க 1871ல் ஆங்கிலேய அரசு கொண்டுவந்த கொடூர சட்டம் அது. இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இனங்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும். இப்போதைய நடவடிக்கைகள் புதிய குற்றப் பரம்பரையை உருவாக்கி விடக்கூடாது என்பதுதான் மனித உரிமையாளர்களின் கவலை.

அந்தக் கவலையில் நியாயமிருக்கிறது!
    வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்