நீரூற்றில் பணமும் கொட்டும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                       பணக்கார வீடுகளில் பார்த்திருப்பீர்கள். வீட்டு வரவேற்பறையின் ஓரத்தில் பெண் உருவ பொம்மையோ, மலை மாதிரியான வடிவமைப்போ இருக்கும். அதிலிருந்து ஊற்று மாதிரி சலசல சத்தத்துடன் தண்ணீர் கொட்டியபடி இருக்கும். இரவில் கூடுதல் கவர்ச்சிக்காக அதிலேயே விளக்கும் எரியும். 'நிறைய பணம் கொடுத்து வெளிநாட்லேர்ந்து வாங்கி வச்சிருப்பாங்க’ என்று நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம்... இந்த செயற்கை நீரூற்றுகள் பணக்காரர்கள் வீடுகளை மட்டுமே அலங்கரிக்கக் கூடிய ஆடம்பரம் இல்லை. கையைக் கடிக்காத பட்ஜெட்டில் இவற்றை வாங்கி யாரும் வீட்டை அழகு படுத்தலாம். செய்யக் கற்றுக் கொண்டு முழு நேர பிசினஸாகவும் செய்யலாம்.

சென்னையைச் சேர்ந்த சவுமியா ராகவன், விதம் விதமான நீரூற்றுகள் செய்வதில் நிபுணி: ‘‘13 வயசுலேருந்து கைவினைக் கலைப்பொருள்கள் பண்றேன். கொஞ்ச நாள் அமெரிக்கால இருந்தேன். அங்க உள்ள கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடைகள்ல ஃபவுன்டன் பார்த்தேன். அப்பல்லாம் நம்மூருக்கு இது வரலை. அமெரிக்காவுலயே செய்யக் கத்துக்கிட்டு, இந்தியா வந்ததும் செய்து பார்த்தேன். செய்து வைக்கிற அத்தனை பீஸ்களும் வித்துத் தீர்ந்துடும். இத்தனை வருஷங்கள்ல மவுசு குறையாத ஒரே கலைப்பொருள் இதுதான்’’ என்கிற சவுமியா, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘தெர்மகோல் ஷீட், ஒயிட் சிமென்ட், பசை, பெயின்ட், மோட்டார், அலங்காரப் பொருள்கள்... எல்லாத்துக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் முதலீடு.’’

எத்தனை மாடல்?
என்ன ஸ்பெஷல்?
‘‘வளைஞ்சு, நெளிஞ்ச பாதைகள் கொண்ட மலை வடிவம் ரொம்பப் பிரபலம். கோயில் மாடலும், அதையொட்டின குளமும் நிறைய பேருக்குப் பிடிக்கும். கற்பனைக்குத் தான் இதுல வேலையே. என்ன மாடல்ல வேண்டுமானாலும் பண்ணலாம். ‘இதை வீட்ல வைக்கிறது வாஸ்துபடி நல்லது’ங்கிற நம்பிக்கை சிலருக்கு இருக்கு. தண்ணியோட சலசல சத்தம் மனசுக்கு அமைதியைக் கொடுக்கும். வாஸ்து நம்பிக்கை இல்லாதவங்க, அழகுக்காக வாங்கி வைக்கிறாங்க.’’

ஒரு நாளைக்கு எத்தனை?
விற்பனை வாய்ப்பு?
‘‘ஒரே நாள்ல மொத்தமா முடிக்க முடியாது. ஒரு ஃபவுன்டனை முழுக்க முடிக்க 2 - 3 நாளாகும். ஒண்ணு செய்யறதுக்கான அடக்க விலை ஆயிரம் ரூபாய்னா, அதை 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கலாம். கல்யாணம், கிரகப் பிரவேசம்னு எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்கலாம். நவராத்திரி சீசன்ல நிறைய விற்பனையாகும்.’’

பயிற்சி?
‘‘3 நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களோட சேர்த்து, கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்