விஜயா டீச்சர்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               (இதுவரை...முப்பதுக்கும் மேலான வரன்கள் வந்து பார்த்தும், திருமணம் கைகூடாத முப்பது வயது ஆசிரியை நம் ஹீரோயின் விஜயா. அப்பா கோபாலகிருஷ்ணன் காரைக்குடியில் ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கிறார். திருமணமான அண்ணன் சோமசுந்தரம், அக்கா மங்கை, அவள் கணவர் ரத்னவேல், இரட்டைத் தங்கைகள் ராதா - சீதா, தம்பி ஆனந்த் என பெரிய குடும்பம். வீட்டில் யாரும் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காததால், தன் ஆதங்கங்களை விஜயா பகிர்ந்துகொள்வது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வனிடம் மட்டுமே! வசதியாக வாழ ஆசைப்படும் ராதாவை விரும்பி வந்து பெண் கேட்கிறான் மெடிக்கல் ரெப் சுகுமார். ராதாவுக்கு விருப்பமில்லை என்றாலும் குடும்பமே சம்மதிக்கிறது. விஜயாவுக்காக மாமா ரத்னவேல் பார்த்த பைனான்ஸியர் மாப்பிள்ளை வடிவேல், 'தங்கை சீதாவைப் பிடிச்சிருக்கு’ என்கிறான். இரண்டு திருமணங்களுக்கும் நாள் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அதேசமயம் விஜயாவின் ஜாதகத்தை அலசவும் தீர்மானிக்கிறார் அப்பா. விஜயாவின் சக ஆசிரியை ஈஸ்வரியின் கணவருக்கு விபத்து நேர்கிறது. இனி...)

விஜயா பின்னால் உட்கார்ந்திருக்க, வண்டியை விரட்டிக் கொண்டு போனார் கலைச்செல்வன். ரொம்பவே அசந்தர்ப்பமான சூழல்தான் என்றாலும், கலைச்செல்வனின் வண்டியில், அவருக்குப் பின்னால் உட்கார்ந்து செல்வதில் விஜயாவுக்குக் கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. லேசான வியர்வை மணமும் பவுடர் வாசமும் கலந்து ஒரு புதுமையான வாசனை அவர்மேல் அடித்தது. இதுவரை பலமுறை கலைச்செல்வனின் அருகில் நின்று பேசியிருந்தாலும், இந்த வாசனையை அவள் உணர்ந்ததில்லை.

இருவருக்கும் நடுவே ஒரு இடைவெளி இருந்தது என்றாலும், இருவர் மனதிலுமே ஒருவித நெருக்கம் ஏற்பட்டிருந்தது. சூழலை வளர்க்க விரும்பாமல் கலைச்செல்வன், ‘‘பத்து நிமிஷம் முன்னாடிதான் என் ரூமுக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தாங்க... பொம்பளைங்க வாழ்க்கை ரொம்பக் கஷ்டம்னு! அதுக்குள்ளே இப்படி ஒரு செய்தி... உண்மையிலேயே பொம்பளைங்க நீங்க எல்லாம் ரொம்ப பாவங்க... ரெண்டு வாழ்க்கை வாழவேண்டியிருக்கு’’ என்றார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘டென்ஷன் ஆகாம, பார்த்து ஓட்டுங்க... ஆக்ஸிடென்ட் ஆனவரைப் பார்க்கப் போறோம். நம்மளை யாராவது பார்க்க வர்ற மாதிரி ஆகிடப் போகுது. ஈஸ்வரிக்கு கொஞ்ச நாளா அவ வீட்ல நிம்மதி இல்லை. வீட்டுக்காரர் ரொம்ப படுத்தறார்னு புலம்பிக்கிட்டு இருப்பா. ஆனா, இன்னிக்கு அவ முகத்தில் தெரிஞ்ச கலவரம் இருக்கே... எல்லாத்தையும் மீறி அந்தாளு மேல அவளுக்கு இருந்த பாசம் அதுல தெரிஞ்சது! இப்படி லெப்டில் திரும்புங்க... இந்த ரோட்லதான் ஈஸ்வரி பையன் படிக்கற ஸ்கூல் இருக்கு...’’ என்றாள்.

பள்ளிக்கூட வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு கலைச்செல்வன் காத்திருக்க, விஜயா உள்ளே போய் விவரம் சொல்லி பையனை அழைத்துக் கொண்டு வந்தாள். அவனை மடியில் வைத்துக் கொண்டு விஜயா அமர்ந்து கொள்ள... மறுபடியும் பயணம் தொடங்கியது. அவர்கள் பயணத்தைக் கொஞ்சம் தள்ளியிருந்து பார்த்தால், கணவன் - மனைவி தங்கள் குழந்தையோடு வண்டியில் செல்வது போலத் தோற்றம் இருக்கும். விஜயா மனதுக்குள் அப்படி தள்ளியிருந்து அந்தக் காட்சியைப் பார்த்தாள்.

இனிமையான அந்தக் கற்பனையைக் கலைப்பது போல வண்டியை நிறுத்தினார் கலைச்செல்வன். விஜயா கலைந்து எதிரில் பார்த்தாள். சின்னதாக ஒரு மெஸ் கண்ணில் பட்டது.

‘‘மேடம்... பையனுக்கு ரெண்டு இட்லி வாங்கி ஊட்டி விட்டுடுங்க. ஆஸ்பத்திரிக்குப் போறோம்... என்ன சூழ்நிலைன்னு தெரியாது... இவனைக் கவனிக்க நேரமில்லாமப் போயிரும்... குழந்தை பசிக்குதுன்னு சொன்னாகூட யாருக்கும் கவனிக்க நேரம் இருக்காது. நான் எதுக்கும் ரெண்டு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்திடுறேன்’’ என்றார்.

விஜயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒரு மனிதனால் எல்லோர் மீதும் பிரியமாக இருக்க முடிகிறது. எல்லோருடைய தேவைகளைப் பற்றியும் யோசிக்க முடிகிறது. எனக்கு எண்ணமெல்லாம் ஈஸ்வரி கணவனுக்கு என்ன ஆனதோ என்றே இருக்க, இவர் மட்டும் மற்றவர்களைப் பற்றியும் எப்படி யோசிக்கிறார் என்று எண்ணியபடியே இட்லியை வாங்கி அவனுக்கு ஊட்டத் தொடங்கினாள்.

கையில் பிஸ்கெட் பாக்கெட்களுடன் வந்த கலைச்செல்வன், கூடவே ஒரு பொட்டலமும் வைத்திருந்தார். ‘‘மேடம்! இந்தாங்க... உங்க ஃபேவரிட் காரக் கடலை. ஈஸ்வரி மேடம், அவங்க வீட்டுக்காரர், ஆக்சிடென்ட் எல்லாத்தையும் ஒதுக்கி ஓரமா வெச்சுட்டு இந்தக் காரக்கடலையை சாப்பிடுங்க...’’ என்று கொடுத்தார்.

விஜயாவுக்கு ஆச்சரியம் இன்னும் கூட, கண்களில் அது பிரமிப்பாக வெளிப்பட்டது.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஆஸ்பத்திரி வளாகமே பர பரப்பாக இருந்தது. பஸ் மீது நேருக்கு நேராக படுவேகத்தில் வந்து மோதி யிருக்கிறது மணல் லாரி. யார் மேல் தப்பு... யார் செய்தது குற்றம்... என்றெல்லாம் யோசிக்க முடியாத அளவுக்கு இருந்தது சேதம். ஈஸ்வரியின் கணவர் உட்பட பதினேழு பேர் படு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஐ.சி.யு. வாசலில் கவலையோடு உட்கார்ந்திருந்தாள் ஈஸ்வரி. மகனைப் பார்த்ததும் ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். ஓவென்று அழுதாள். பையன் புரியாமல் குழம்பி அம்மாவின் முகத்தையும் விஜயாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

விஜயா அவள் தலையைத் தடவிக் கொடுத்தபடி, ‘‘ஏய் ஈஸ்வரி... நீ அழறதைப் பார்த்து பையன் ரொம்ப அப்செட் ஆகிடப் போறான். முகத்தைத் துடை... ஒண்ணும் ஆகாது...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரியின் மாமியாரும் கதறலோடு நாத்தனாரும் ஓடிவந்தார்கள்.

கலைச்செல்வன் ஈஸ்வரியை தனியே அழைத்தார். பையில் இருந்து சில ரூபாய் தாட்களை எடுத்து அவள் கையில் கொடுத்தார். ‘‘என்ன தேவை இருந்தாலும் கூப்பிடுங்க...’’ என்று சொல்லி செல் நம்பரைக் கொடுத்துவிட்டு விஜயாவிடம் திரும்பி, ‘‘மேடம்... நீங்க கூட இருக்கறீங்களா? நான் ஸ்கூல் வரைக்கும்போய் ஹெட் மாஸ்டருக்கு விவரம் சொல்லிட்டு வர்றேன்...’’ என்றார். விஜயா சரியென்று தலையாட்ட, புறப்பட்டுப் போனார்.
காரைக்குடி காய்கறிச் சந்தைக்குப் பின்புறம் இருந்த ரோட்டில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்று கொண்டி ருந்தார்கள் ரத்னவேலும் வடிவேலும்.

எதிர் வரிசை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மாடியில் இருக்கும் ஒரு கடையைச் சுட்டிக் காட்டியபடி, ‘‘தம்பி... அந்தக் கடை நம்ம ஃபைனான்ஸுக்கு தோதா இருக்கும். பெரும்பாலும் நம்ம தொழிலு இந்த மார்க்கெட் ஆட்களை நம்பித்தான்! அதனால் இப்படி ஒரு இடம் கிடைக்கறது சரியா இருக்கும். வி.ஆர். ஃபைனான்ஸ்னு பேர் எழுதக் கொடுத்துடட்டுமா..?’’ என்றார் ரத்னவேல்.

‘‘சரிங்கண்ணே... முடிச்சுடுங்க! ஆனா, இந்த இனிஷியல் எல்லாம் வேண்டாம். நல்ல பேரா வைப்போம்... ஏதாவது சாமி பேரா..!’’ என்றான் வடிவேல்.

ஒரு நொடிகூட யோசிக்கவில்லை ரத்னவேல். ‘‘அப்போ நம்ம பழனி முருகன் பேரை வச்சிருவோம்... ‘வேல் ஃபைனான்ஸ்’. கச்சிதமா இருக்கும். உன் பேரும் வந்த மாதிரி ஆச்சு... நீ ஆசைப்பட்ட மாதிரி சாமி பேரும் வச்ச மாதிரி ஆச்சு’’ என்றார்.

அவரை தீர்க்கமாகப் பார்த்து சிரித்த வடிவேல், ‘‘எப்படியோ உங்க பேரை உள்ளே நுழைச்சுட்டீங்க... சரி, அதையே வச்சுக்குவோம்! உங்க போனைக் கொஞ்சம் குடுங்க...’’ என்று வாங்கி, அதில் மங்கை என்ற பெயரைத் தேடி டயல் பண்ணினான்.

‘‘ஹலோ அண்ணி... அண்ணன் இல்லே. நான்தான் வடிவேலு பேசுதேன்... சும்மாதான் கூப்பிட்டேன்... சாப்டாச்சா... அப்புறம், சீதா என்ன பண்ணுதா..?’’ என்றான்.

‘‘ம்... நல்லாயிருக்கேன்! அவ வெளியில் போயிருக்கா... நான் போனை வச்சுடட்டுமா? அடுப்பிலே கொஞ்சம் வேலையா இருக்கேன்...’’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள். ரத்னவேல் மீது எரிச்சல் முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு!

அழுகை ஓய்ந்து களைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் ஈஸ்வரி. தூக்கு போணியில் வாங்கி வைத்த காபி ஆறிப் போயிருந்தது. கையில் பையோடு உள்ளே நுழைந்தார் கலைச்செல்வன்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘மேடம்... இதிலே ரெண்டு சாப்பாடு இருக்கு. ஈஸ்வரி மேடத்தைக் கூட்டிட்டுப் போய் கொஞ்சமாவது சாப்பிட வைங்க... நான் பையனைப் பார்த்துக்கறேன்’’ என்று பையை விஜயாவிடம் கொடுத்தார்.

‘‘பட்டினி கிடந்து ஒண்ணும் ஆகப் போறதில்ல... ஒரு வாய் சாப்பிடு’’ என்று வற்புறுத்தி ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு கேன்டீன் நோக்கி நடந்தாள் விஜயா. மனசே இல்லாமல் உட்கார்ந்திருந்த ஈஸ்வரிக்கு கொஞ்சமாக ரசம் ஊற்றி பிசைந்து வைத்துவிட்டு, தானும் ஒரு இலையை நகர்த்தி கொஞ்சம் சாதம் போட்டுக் குழம்பை ஊற்றினாள். தூரத்தில் வராண்டாவில் கையில் பையனை வைத்துக் கொண்டு கலைச்செல்வன் நின்றிருப்பதைப் பார்த்தாள். அவரிடம் நர்ஸ் வந்து ஏதோ சொல்வதையும், அவர் தங்களை நோக்கி நடந்து வருவதையும் பார்த்தாள்.

ஈஸ்வரி சின்னதாக ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்தாள். ‘‘இப்படி சாப்பிட்டா எப்போ முடிக்கறது? ம்... சாப்பிடுங்க’’ என்று உரிமையாக ஒரு அதட்டல் போட்டு அவளை வேகமாகச் சாப்பிட வைத்தார் கலைச்செல்வன்.

ஈஸ்வரி எழுந்து கைகழுவப் போன நேரம், ‘‘மேடம்... அவங்களைக் கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க... அவங்க வீட்டுக்காரர் நிலைமை ரொம்ப கவலைக்கிடமா இருக்குன்னு நர்ஸ் வந்து சொல்லிட்டுப் போனாங்க. நாளைக்கு பொழுது போனால்தான் எதையும் உறுதியாச் சொல்லமுடியுமாம். அதான் சாப்பிட்ட பிறகு சொல்லலாம்னு பார்த்தேன்...’’ என்ற கலைச்செல்வன் மீது விஜயாவுக்குக் காதல் பெருகியது.

‘நாளையே என் காதலை உன்னிடம் சொல்லப் போகிறேன் என் நண்பனே... என்னை ஏற்றுக் கொள்வாயா..!’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் விஜயா.
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்