2025 தமிழ்நாடு... இந்தியாவின் தனிக்காட்டு ராஜா..!



‘‘இந்தியாவிேலயே வளர்ச்சியில் தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா. தமிழ்நாட்டில் 11.19 சதவீதம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, மொத்த உள்நாட்டு உற்பத்தி என அனைத்திலும் நாம்தான் முதலிடம்...’’ என சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் பேசியுள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாகவே திராவிட மாடல் திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களும், செய்த சாதனைகளும் நிறைய. 

மகளிருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் தொடங்கி மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், தொழில்துறையில் முதலிடம், தொல்லியல் துறையில் சாதனைகள், அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள்... என இதனை அடுக்கிக்கொண்டே போகலாம்.கடந்த 2025ம் ஆண்டிலும் இந்தச் சாதனைகள் தொடர்ந்தன. இவற்றில் சிலவற்றை மட்டும் கொஞ்சம் பார்ப்போம். 

இரும்பு காலம்

கடந்த 2025ம் ஆண்டின் தொடக்கமே, ‘தமிழ் நிலப்பரப்பில் இருந்தே இரும்பு காலம் தொடங்கியது’ என்ற பெருமித அறிவிப்பில் இருந்து ஆரம்பித்தது. 
கடந்த ஜனவரி மாதம், ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழ் நிலத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது.

இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகமாகி இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். 

இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை இந்நிகழ்ச்சி வாயிலாக அறிவிக்கிறேன்...’’ எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

குறிப்பாக இந்த விஷயம் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் வழியே தெரிய வந்தது. இந்நிலையில் 2025ம் ஆண்டின் முடிவில் டிசம்பர் 20ம் தேதி நெல்லையில் ரூ.56.36 கோடியில் உருவான தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் பிரம்மாண்ட பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
இதில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி பகுதிகளில் அகழாய்வுகளின் போது கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இத்துடன் பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆழ்கடல் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.  

ஒரு ட்ரில்லியன் டாலர்

கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற வேண்டும் என்ற மகத்தான கனவுடன் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. 
இதனால் முதல்வரே நேரடியாக வெளிநாடுகளுக்குப் பயணித்து முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான முன்னெடுப்புகளைச் செய்தார். அந்தவகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான தொழில்மயமாக்கலையும் சிறப்பாகச் செய்தது தமிழ்நாடு அரசு. குறிப்பாக டயர் 2, டயர் 3 நகரங்களிலும் நிறைய தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.இதுமட்டுமின்றி 2025ம் ஆண்டு ஸ்டார்ட்அப் தொழில்களுக்கான சூழலை உருவாக்கும் பொருட்டு கோவையில் உலக புத்தொழில் மாநாடும் நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு வளர்கிறது என முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையிலும், ஓசூரிலும் நடத்தப்பட்டன.  

எலக்ட்ரானிக்ஸ் ஹப் 

பொதுவாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு, ‘டெட்ராய்ட் ஆஃப் ஆசியா’ என்ற பெயருண்டு. இதற்குக் காரணம், இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் முன்னணியில் இருப்பதுதான்.இந்நிலையில் கடந்த 2025ல் அரசின் முன்னெடுப்பால் தமிழகம் மின்னணுத் துறையிலும் முன்னணி இடத்திற்கு வந்தது. குறிப்பாக மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்தது. 

அதாவது 2024-25 நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தைத் தொட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாகும்.கடந்த 2023-24 நிதியாண்டில் இதே மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 9.56 பில்லியன் டாலர்களை எட்டியிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 81 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்திருந்தது.

இப்போது தமிழ்நாடு 14.65 பில்லியன் டாலராக மேலும் உயர்ந்து புதிய சாதனையைப் படைத்தது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23 சதவீதமாகும்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு கடந்த ஆண்டைவிட 2024-2025  நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் 53 சதவீதம் அதிகமான வளர்ச்சியை எட்டியது. இதனை பெருமையுடன் குறிப்பிட்டார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

அத்துடன் அவர், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இது சாத்தியமாகி இருக்கிறது. விரைவில் மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் டாலர் என்கிற இலக்கை தமிழகம் எட்டும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.  

அமெரிக்க நிறுவனங்களான சிஸ்கோ, ஜேபில், தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான், இந்தியாவின் டாடா உள்ளிட்ட பல முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. இதனால் அந்த இலக்கை நோக்கி பயணித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

கல்வி 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம் முறையே 2022ல் 93.76 சதவீதமாகவும், 2023ல் 94.03 சதவீதமாகவும், 2024ல் 94.56 சதவீதமாகவும் இருந்தது. இது 2025ம் ஆண்டு 95.03 சதவீதமாக அதிகரித்தது. 

கடந்த 2024ம் ஆண்டு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 397 ஆக இருந்தது. இது 2025ம் ஆண்டு 436 ஆக அதிகரித்தது. தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் சிறப்பான உயர்வைக் கண்டு வருகிறது. இதற்குக் காரணம் தமிழக அரசின் முன்னெடுப்புகள்தான். 

குறிப்பாக காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், இதேபோல் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், மாதிரி பள்ளிகள் திட்டம் ஆகியவை மாணவர்களின் கல்வியை முன்னேற்றி உள்ளன.

இத்துடன் நான் முதல்வன் திட்டமும் அவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. இதன்படி ஆண்டுக்கு பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பிலும், அறிவிலும், சிந்தனையிலும், ஆற்றலிலும், திறமையிலும் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது. அதாவது இதன்மூலம் அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனவும் இதில் வழிகாட்டப்படுகிறது. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

அப்படியாக 2025ம் ஆண்டு அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் படிக்க தேர்வாகினர். இப்படி ஒட்டுமொத்தமாக கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, தமிழின் தொன்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான் முதல்வர் குறிப்பிட்டது போல் தமிழகத்தை இந்தியாவின் தனிக்காட்டு ராஜாவாக ஆக்கியுள்ளது.

பேராச்சி கண்ணன்