2026ல் உலகம் முழுக்க சோஷியல் மீடியாவுக்கு தடை!



இந்த 2026ம் ஆண்டு உலகம் எப்படியிருக்கும், உங்கள் வாழ்க்கை எப்படி மாறும் என்றெல்லாம் ஜோதிடக் கணிப்புகள் பரபரக்கின்றன.ஆனால், இந்தக் கணிப்புகளை எல்லாம்விட இந்த 2026ம் ஆண்டு உலகின் ஒட்டுமொத்த 16 வயதுக்குட்ட சிறுவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகப் போவதாகச் சொல்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். 
காரணம், சமூக ஊடகங்களைப் பல்வேறு நாடுகளும் தடைசெய்யப் போகின்றன என்பதுதான். இதற்கு முத்தாய்ப்பாக சமீபத்தில் உலகில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அங்கே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இனி ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட பத்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாது. இதற்காக கடந்த 2024ம் ஆண்டே ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் அங்கே கொண்டு வரப்பட்டது. இந்தச் சமூக ஊடகத் தளங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தச் சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்திருக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் துணிச்சலான இந்த முயற்சியை இப்போது பல நாடுகளும் பின்பற்றுவது குறித்து பரிசீலித்து வருகின்றன. ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த நவம்பரில் இதேபோல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை கொண்டு வர அழைப்பு விடுத்தது.கடந்த அக்டோபரில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவைப் போல சட்டம் கொண்டு வர நாடாளுமன்றக் குழு ஆராய்ந்து வருவதாகவும், அதன் அறிக்கை வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது.  
மலேசியா, இந்த 2026ம் ஆண்டு முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. இதேபோல் ஃபிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடையும், 15 டூ 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு பத்து மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை பயன்படுத்தத் தடை பற்றியும் பரிசீலித்து வருகிறது. 

ஏற்கனவே ஃபிரான்ஸ் கடந்த 2023ம் ஆண்டு பெற்றோரின் சம்மதம் இல்லாமல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் கணக்கைத் தொடங்க முடியாது என்றது. ஆனால், அது அமலாக்கப்படவில்லை. இப்போது தீவிரமாக யோசித்து வருகிறது. 

ஜெர்மனியிலும் இதே நிலை தொடர்கிறது. நார்வேயும் கடந்த ஜூலை மாதம் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்தது. டென்மார்க்கும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.இங்கிலாந்தும் கடந்த ஜூலை மாதம் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் பார்ப்பதிலிருந்து பாதுகாக்க புதிய நடவடிக்கைகளைக் கொண்டு வந்தது. 

அதாவது உள்ளடக்கத்தைப் பார்க்க மக்கள் தங்கள் வயதை நிரூபிக்க வேண்டும். முக ஸ்கேன், புகைப்பட ஐடி, கிரெடிட் கார்டுகள் சரிபார்ப்பு போன்ற பாதுகாப்பான முறைகளைக் கொண்டு தங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்கின்றன. இந்தியா தடை செய்யவில்லை என்றாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை குறைப்பதற்கான நடைமுறைகளை ஆராய்ந்து வருகிறது. இதனால் 2026ல் புதிய கட்டுப்பாடுகள் வரலாம்.   

ஆனால், தென்கொரியா போன்ற சில நாடுகள் இதை தவிர்க்கவும் செய்கின்றன. தென்கொரியா குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை ஆதாரிக்கவில்லை. இருந்தும் அந்நாடு, குழந்தைகள் இந்த 2026ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செல்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை வகுப்பறைகளில் பயன்படுத்துவதைத் தடை 
செய்கிறது. 

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஜப்பானின் டோயோகே நகர மேயர் மசாஃபுமி கோகி, கடந்த அக்டோபரில் அனைத்து வயதினரும் ஒருநாளில் இரண்டு மணிநேரம் மட்டுமே ஸ்மார்ட்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். பெரியவர்கள் இதனை பின்பற்றவில்லை என்றால் குழந்தைகளும் விதிகளை மதிக்கமாட்டார்கள் என்றார் கோகி. 

இதனால் 2026ம் ஆண்டு பல நாடுகள் சமூக ஊடகங்களின் தடையை நோக்கி பயணிக்கின்றன. அல்லது அதில் கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கின்றன. 

இதுகுறித்து, ‘சமூக ஊடக வரலாறு’ என்ற நூலை எழுதியிருக்கும் எழுத்தாளர் சைபர் சிம்மனிடம் பேசினோம். அவர், ‘தடையைவிட சமூக ஊடகக் கல்வியறிவே இப்போதைய தேவை’ என்கிறார். ‘‘பொதுவாக தடை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வல்ல. தடை விதிப்பது அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதைவிட, புதிய பிரச்னைகளையும், சிக்கல்களையுமே கொண்டு வரும். 

சமூக ஊடக பயன்பாட்டைப் பொருத்தவரை, மோசமான மற்றும் தீய உள்ளடக்கம் இளம் வயதுடையவர்களின் மனதை பாதிக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இளம் தளிர்களின் மனநலனை பாதிப்பதோடு, சைபர் புல்லிங் எனும் இணைய சீண்டல் உள்ளிட்ட பலவித இணைய தாக்குதல்களுக்கு அந்த வளர் இளம் பருவத்தினர் இலக்காகும் அபாயமும் இருக்கிறது. 

இதனால் சமூக ஊடகம் ஏற்படுத்தக்கூடிய பாதகமான விளைவுகளுக்கு எதிராக பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தேவை. ஆனால், சமூக ஊடக தடை இதற்கு தீர்வாகும் என்பது கேள்விக்குறியே...’’ என்றபடி தொடர்ந்து பேசினார்.  ‘‘ஏனெனில், இளம் வயதினர் சமூக ஊடக சேவைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தேவையானது எனக் கருதினாலும், நடைமுறையில் அதைச் செயல்படுத்துவது மிகவும் சிக்கலானது. 

சமூக ஊடகத் தடையை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப நோக்கிலான சிக்கல்கள் இருப்பதோடு, வயதை நிரூபிக்க தகவல்களை சமர்ப்பிப்பதும், தரவுகள் சேகரிக்கப்படுவதும் புதிய கவலைகளை உண்டாக்கும். 

மேலும், எல்லா வகையான சமூக ஊடக பயன்பாடும் பாதகமானதல்ல. சமூக ஊடக பயன்பாடு பல நல்ல பலன்களையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே சமூக ஊடகத் தடை, குழந்தைகள் சமூக ஊடகம் மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் திறன் கல்வியறிவை பாதிக்கலாம்.

மேலும் சமூக ஊடக விலக்கல், குழந்தைகளிடம் தனிமை எண்ணத்தை ஏற்படுத்தி, வேறு விதமான உள்ளடக்கத்தை நாட வைக்கலாம்.அதனால் இந்தச் சூழலில், சமூக ஊடகக் கல்வியறிவே நமக்கு முதன்மையாகிறது. சமூக ஊடகச் சேவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும், அதன் சாதக பாதக அம்சங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து, அதன் சரியான சேவைகளை, சரியான முறையில் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.  

பொதுவாக சமூக ஊடகக் கல்வியறிவு என்பது இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப திறன், சிந்தனை த்திறன் மற்றும் உணர்வுத் திறனை உள்ளடக்கியது.
ஆனால், இந்தக் காலத்து குழந்தைகள் தொழில்நுட்பத் திறனில் சிறந்து விளங்கினாலும், சிந்தித்து பயன்படுத்துவது மற்றும் உணர்வு நோக்கில் அணுகுவது ஆகிய திறன்களில் போதாமையை கொண்டுள்ளனர்.

இந்த இடத்தில்தான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் அவசியமாகிறது. பெற்றோர், பிள்ளைகளுக்கு சமூக ஊடக சேவைகளின் தன்மையை எடுத்துக்கூறி, அவற்றை பயன்படுத்த வழிகாட்ட வேண்டும். சமூக ஊடக சேவைகளின் இரு பக்கங்களையும் எடுத்துக்கூற வேண்டும்.

பிள்ளைகளும் குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் வழிகாட்டுதலில் சமூக ஊடக சேவைகளை பயன்படுத்த வேண்டும். அதேநேரம், சமூக ஊடக பயன்பாட்டில் பெற்றோரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொடர்ந்து பெற்றோர் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். தங்கள் பிள்ளைகளுடன் நிறைய உரையாடி, மனித உரையாடலின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். 

இதில் பெற்றோர் மட்டுமல்ல, சமூகத்தின் மற்ற பிரிவினருக்கும் பொறுப்பு இருக்கிறது. சமூக ஊடகம் தொடர்பான ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கி, ஆக்கபூர்வமான பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.பிழைத்தகவல்கள், வெறுப்பு சார்ந்த கருத்துக்களுக்கு மாறாக நல்ல உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். 

முக்கியமாக குழந்தைகள் டிஜிட்டல் திரையில் செயல்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும். அதற்கேற்ப நிஜ உலக தொடர்புகளையும், ஈடுபாட்டையும் அதிகரிக்க வேண்டும். இதனைவிடுத்து சமூக ஊடகங்களையே தடை செய்வது என்பது ஒரு தீர்வாக இருக்காது...’’ என்கிறார் சைபர் சிம்மன்.

பேராச்சி கண்ணன்