இந்தியாவை மிரளவைத்த மாண்புமிகு மருத்துவர்!



சமீபத்தில் நாடு முழுவதும்  வெளியான பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பிடித்த ஒரு பெயர், லட்சுமி பாய். தனது வாழ்க்கை முழுவதும் சேகரித்த, 3.4 கோடி ரூபாயை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார் லட்சுமி. 
அதுவும் தனது 100வது பிறந்த நாளில் வழங்கியிருக்கிறார். இந்த தன்னலமற்ற செயலால்தான் நாடு முழுவதும் போற்றும் ஒரு பெண்மணியாகப் புகழடைந்திருக்கிறார், லட்சுமி.யார் இந்த லட்சுமி பாய்?

சரியாக 100 வருடங்களுக்கு முன்பு, ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெர்ஹாம்பூரில் பிறந்தார், லட்சுமி. பெண்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்த காலம் அது. ஆனால், சிறுமி லட்சிமியோ மருத்துவராகி, சமூகத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். 

அவரது கனவுக்குக் குடும்பமும் ஆதரவு தந்தது. ஒரு பக்கம் இந்தியா சுதந்திரத்துக்காக ஆங்கிலேயரிடம் போராடிக் கொண்டிருந்தது. வீட்டைவிட்டு வெளியில் கூட வரமுடியாத நிலையில் பெண்களின் சூழல் இருந்தது. இன்னொரு பக்கம் தனது கல்வி உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தார் லட்சுமி. 

பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த லட்சுமி, 1945ம் வருடம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டார். அக்கல்லூரியில் எம்பிபிஎஸ்ஸின் முதல் பேட்ச்சில் இடம்பிடித்த பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். அப்போது இதுஒரு மாபெரும் சாதனை. எம்பிபிஎஸ் முடித்த பிறகு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்டி மற்றும் டிஜிஓ (மகளிர் நலவியல் மற்றும் மகப்பேறு மருத்துவம்) பட்டத்தைப் பெற்றார் லட்சுமி. 

மருத்துவப் பயிற்சிகளுக்காகப் பல ஊர்களுக்குச் சென்றார். அப்போதே லட்சுமிக்கு அமெரிக்காவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் எம்பிஹெச் (Master of Public Health) பயில ஒரு வருட உதவித்தொகை கிடைத்தது. 

பல நாடுகளில் மருத்துவப் பணி செய்வதற்கான அழைப்புகளும் வந்தன. தவிர, நாட்டிலேயே முக்கியமான மருத்துவர்களில் ஒருவராக உயர்ந்த பிறகும் கூட, சொந்த ஊர் மக்களுக்கும், குறிப்பாக பொருளாதார வசதியற்ற பெண்களுக்காகவும்தான் மருத்துவம் பார்த்தார் லட்சுமி. 
குறிப்பாக ஏழைப் பெண்களுக்கான மருத்துவ சேவையை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தார். 

கடந்த 1950ம் வருடம் ஒடிசாவில் உள்ள சுந்தர்கரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் தனது மருத்துவப் பணியை ஆரம்பித்தார் லட்சுமி. பிறகு ஒடிசாவின் எம்கேசிஜி மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலவியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி, ஓய்வு பெற்றார். 

தனது  36 வருட மருத்துவ சேவைக்காக ஏராளமான விருது களையும் வாங்கியிருக்கிறார் லட்சுமி. இந்தியாவின் சிறந்த குடிமகன், பாரத் ஜோதி விருது, இன்டர்நேஷனல் ஃபிரண்ட்ஷிப் சொசைட்டி விருது போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. 

கடந்த டிசம்பர் 5ம் தேதி, தனது 100வது பிறந்த நாளில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பெண்களுக்கான புற்றுநோய் பிரிவுக்கு 3.4 கோடி ரூபாயைக் கொடையாக வழங்கியிருக்கிறார். புற்றுநோய் சிகிச்சை  பெற வசதியில்லாத பெண்களுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்தும்படி வேண்டுகோளும் வைத்திருக்கிறார். லட்சுமிக்கு நாலாப் பக்கமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

த.சக்திவேல்