சிறுகதை-அம்மாவுக்கு டிப்ஸ்
அம்மா மெதுவாகக் காரிலிருந்து இறங்கினாள்.எழுபது வயசுக்கு மீறிய தள்ளாமை உடலில், முகத்தில். “வரேன்பா...” என்றவளிடம் “இரும்மா. நானும் வரேன்...” என்றான் சேது.
“வேண்டாம்பா. நீ கெளம்பு. நான் போய்க்கிறேன்...” என்றாள் அம்மா.என்றாலும் சேது இறங்கி அவளுடைய பையை எடுத்துக் கொண்டான்.பை என்று அவளுக்கு என்ன பெரிதாக இருந்து விட்டது? நாலு புடவை, ஜாக்கெட், பிரஷ், கண்ணாடி, விபூதி பொட்டலம் அவ்வளவுதான்.அவளுக்கென்று அதிகமான உடைமைகள் கிடையாது, தன்னைத் தவிர.சேது சிறிது குற்ற உணர்ச்சியில் தவித்தான்.
அம்மாவைக் கொண்டு வந்து ஹோமில் விடுவதே ஒரு உறுத்தலாக இருந்தது என்றாலும், வேறு வழி இல்லை.அம்மாவுக்கும் சுகன்யாவுக்கும் ஒத்துப் போகவில்லை.“உங்க அம்மாவுக்கு என் பொண்ணு என்ன வேலைக்காரியா?” என்று கேட்டார் மாமனார்.
அம்மாவுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் ஆகி, காலைச் சிறிது சாய்த்து, சாய்த்துதான் நடப்பாள்.அவளால் வேலைகளைச் செய்ய முடியாது என்றாலும், அவளும் தன்னால் முடிந்த வரை இத்தனை வருடங்கள் உழைத்து விட்டாள்.“முதியோர் இல்லத்திற்கு போம்மா...” என்றதுமே அதை எதிர்பார்த்து இருந்தவள் போல் சரி என்று சொல்லிவிட்டாள்.
சுகன்யாவின் அலட்சியமும் , இரண்டு பக்கமும் பேச முடியாமல் சேது தவிப்பதையும் அம்மா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.
என் கணவன், என் குடும்பம், என் வருமானம் என்ற உணர்வு சுகன்யாவுக்கு. நீ இதில் தேவையில்லை என்பது அவளின் மௌனக்கூச்சல்.அது அம்மாவுக்குப் புரிந்தது.
வீடு நரகமாக இருந்தது.எனவேதான் அவளை ஹோமில் கொண்டு வந்து விட்டு விட்டான் சேது.சுகன்யா காரிலேயே அமர்ந்திருந்தாள் மொபைலில் மூழ்கி.ஏற்கனவே வந்து ரூம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்த்துவிட்டுத்தான் போயிருந்தான்.ஒரு ரூம், அட்டாச்டு பாத்ரூம். போதும் என்றுதான் சொன்னாள் சுகன்யா. இதற்கு அம்பதாயிரம் அட்வான்ஸ்? என்று புலம்பினாள் சுகன்யா.சாப்பாட்டுக்கு மட்டும் மாதம் அஞ்சாயிரம் என்றபோது அவ்வளவு எல்லாம் எங்க மாமியார் சாப்பிட மாட்டாங்க என்றாள் சுகன்யா. “இல்லமா. அஞ்சாயிரம்தான். ஃபிக்ஸடு...” என்று கூறிவிட்டார் நிர்வாகி.
“கொஞ்சம் அமைதியா இரு சுகன்யா...” என்றபிறகும் சுகன்யா குமுறிக்கொண்டே இருந்தாள். இத்தனைக்கும் சேதுவுக்கு மாசத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் சம்பளம். சுகன்யாவும் அதே ஐடியில் வேலை பார்க்கிறாள். பணத்திற்கு குறைச்சல் இல்லை. என்றாலும் அம்மாவுக்குத் தருவதில் ஆதங்கம்.
அம்மா எதுவும் பேசாமல் மௌனமாக வந்தாள்.அம்மாவைக் கொண்டு வந்து ரூமில் விட்டான். அவள் கையில் பணம் கொடுத்தான். “எனக்கு எதுக்குடா பணம்?” “இல்லமா. கையில வச்சுக்கோ. ஏதாவது தேவைன்னா யார்கிட்ட கேட்ப?” “எனக்கு என்ன தேவை இருக்கு?” - அம்மா. அவள் குரல், பார்வை, பேச்சு எல்லாவற்றிலும் ஒரு விரக்தியும், வெறுமையும் தெரிந்தது.இருக்காதா பின்னே? ஒரே மகனின் மூன்று வயதில் கணவன் இறந்து, ஒற்றை ஆளாக நின்று வளர்த்து ஆளாக்கியவள். கூலி வேலை, கட்டட வேலை, வீட்டு வேலை என்று செய்து ஒவ்வொருவரிடம் யாசகம் கேட்டுத்தான் மகனை வளர்த்தாள்.
சொந்த பந்தங்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலையில் தன் உழைப்பை மட்டுமே நம்பி, ஓடாக உழைத்து மகனைப் படிக்க வைத்து இன்ஜினியர் ஆக்கினாள். அவனுக்கு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தபோது அவளின் மகிழ்ச்சி கரை கடந்து போனது.அவன் தனக்குச் செய்வான் என்பதை விட தன் மகன் இனி கஷ்டமில்லாமல் வாழ்வான் என்ற உணர்வுதான் அவளிடம் அதிகம் இருந்தது.
சேதுவும் அம்மாவிடம் அன்பாகத்தான் நடந்தான். சுகன்யா திருமணம் ஆகி வந்தாள். அம்மாவின் மகிழ்ச்சி காணாமல் போனது. அம்மாவை அவள் ஒரு அவமானச் சின்னமாக, வேண்டாத பொருளாக நினைத்தாள். சுகன்யாவின் வீடு வசதி. நகர வாழ்க்கை. அவர்கள் மத்தியில் படிக்காத கிராமத்து, கூலியாள் அம்மா கேவலமாக இருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவை அவமானப்படுத்த ஆரம்பித்தாள் சுகன்யா.
அம்மாவாக சமையலறையில் நுழைந்து, தனக்கென்று எதையும் செய்ய முடியாது. சுகன்யா கொடுக்கும்போதுதான் காபி, டீ, சாப்பாடு எல்லாமே.வெளியில் போகும்போது சமையலறையைப்பூட்டிவிட்டுப் போவாள் சுகன்யா. அம்மாவுக்கு சாப்பாடுமே அளந்துதான் கொடுத்தாள்.“நிறைய சாப்பிட்டு முடியாமல் படுத்தா யார் பார்க்கிறது?” என்பாள.
நடுவில் அம்மாவுக்கும் கால் உடைந்து ஆஸ்பத்திரி செலவு ஆனபோது அவள் கத்தித் தீர்த்தாள். ஒவ்வொரு நிமிஷமும் மூணு லட்சம் செலவு என்று குத்திக் காட்டிக்கொண்டே இருந்தாள். “நீங்க இருக்கிறது எங்களுக்கு ரொம்ப சிரமமாக இருக்கிறது...” என்று முகத்திற்கு நேராகவே பேசினாள். அவளுடைய அப்பா, அம்மா வரும்போது அம்மா வெளியில் வராமல் தன் அறைக்குள்ளேயே முடங்கி விடுவாள்.
சேதுவிடம் அருகில் உட்கார்ந்து பேச முடியாது. அவன் முகத்தைப் பார்க்க முடியாது. சேதுவும் சுகன்யாவிற்குப் பயந்து அம்மா என்று அருகில் வரமாட்டான். மெதுவாக அம்மா தன்னை ஒரு வேண்டாத பொருளாக நினைக்க ஆரம்பித்தாள்.அவளேதான் சொன்னாள். “என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துடேன்...”“என்னம்மா சொல்ற?”“ஆமாம்பா. எனக்கும் வயசாயிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் வெளியில போறீங்க. எனக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு நீங்க கவலைப்படணும். அதனால முதியோர் இல்லத்தில் விட்றுங்க...” என்றதுமே சுகன்யா மடமடவென்று வேலையை ஆரம்பித்து விட்டாள்.
இருப்பதிலேயே மிகக் குறைவான தொகை வாங்கும் இல்லமாகப் பார்த்து அம்மாவைக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.“பார்த்து இருந்துக்கோமா. என் போன் நம்பர் இருக்குல்ல?”சேது கேட்க தலையாட்டினாள் அம்மா. “வரேன்...” - சேது கிளம்ப அம்மா பின்னாடி வரவில்லை என்பது சிறிது ஏமாற்றமாகத்தான் இருந்தது.ஆனால், அம்மா அனைத்தையும் வெறுத்து விட்டாள் என்பது புரிந்தது.ஒரே பையன். படித்து வளர்ந்து, தன்னை வைத்துக் காப்பாற்றுவான். தன்னுடைய மரணத் தருவாயில் தன்னுடன் இருப்பான் என்று நினைத்தவள் தலையில் உயிருடன் கொள்ளி வைத்து விட்டான்.அவன் தளர்ந்து நடந்து காரில் ஏறினான்.
“என்ன சொன்னார்?”“ஒண்ணும் சொல்லல...”“அவங்க கோவத்துல இருப்பாங்க. இருக்கட்டும். நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அத நாம அனுபவிக்கவேண்டாமா? அத புரிஞ்சுகிட்டு இவங்க நடக்கணும்...” என்ற சுகன்யா “நைட் வீட்ல டிபன் வேண்டாம்.
ஹோட்டலுக்குப் போலாம்...” என்றாள்.சுகன்யாவுக்கு ஹோட்டலில் சென்று சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஹோட்டலில் அவள் சொன்ன ஆர்டர் பார்த்து வியப்பாகத்தான் இருந்தது. ஆடம்பரமான வாழ்க்கை சுகன்யாவுக்கு. அந்த வாழ்க்கைக்குள் அம்மா நுழைய முடியவில்லை. அம்மா நுழைவதை சுகன்யாவும் விரும்பவில்லை.
இந்த மாதிரி பெண்கள் எல்லாம் தங்கள் ஆடம்பரத்துக்கு ஒத்து வரும் குடும்பத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். சேது படித்திருக்கிறான். இரண்டு லட்சத்திற்கு மேல் சம்பளம். இன்னும் சிறிது காலத்தில் யுஎஸ் கிளம்பி விடுவான் என்று திட்டம் போட்டு அவள் அப்பா சேதுவைப் பிடித்தார்.அம்மாவும் எந்த கண்டிஷனும் போடவில்லை.
நல்ல பெண்ணாக இருந்தால் போதும் என்றாள். திருமணத்தின்போதே அம்மாவை அலட்சியப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அம்மா தூரமாகத்தான் நின்றிருந்தாள். அவள் சாப்பிட்டாளா தூங்கினாளா என்று எதுவும் கேட்க முடியவில்லை சேதுவால். அவனைச் சுற்றி மாமனாரின் ஆடம்பர கும்பல் அலட்டிக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தது.சேதுவும் அதில் மயங்கி விழுந்து விட்டான் என்பதுதான் உண்மை. அவன் நண்பர்கள் வரும்போது அம்மா எட்டிப் பார்த்தாலே ‘‘என்னம்மா...’’ என்று கேட்பான்.அதில் உள்ள கடுமையை உணர்ந்து “ஒண்ணும் இல்லப்பா...” என்றபடி அம்மா ரூமுக்குள் போய்விடுவாள்.உள்ளே ஒரு சிறைவாசம், தனிமை என்று அனுபவித்ததால்தான் அம்மா போகிறேன் என்று சொல்லிவிட்டாள். மனதிற்குள் ஏதேதோ சிந்தனைகள். சுகன்யா பேசியது காதில் விழவில்லை.பில் வந்ததும் “நான் கார்டு போடுகிறேன்...” என்றான் சேது.
“ஓகே. ஒரு டிவென்டி ரூபீஸ் குடுங்க...” “எதுக்குமா?”
“சர்வர் டிப்ஸ் வைக்க வேண்டாமா?”
‘‘ஓ...’’ என்றவன் அவள் கையில் இருபது ரூபாய் கொடுத்தான்.இருவரும் வெளியில் வந்து காரில் ஏறி அமர்ந்ததும் “இன்னைக்குத்தான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...” என்றாள் சுகன்யா.
“இன்றைக்குத்தான் என்னுடைய ஆனந்தம் எல்லாம் பறிபோனது” என்றான் சேது.“என்ன சொல்றீங்க?”“அம்மாவுடைய வருமானத்தில் நான் கணக்கு போட்டேன்.
படிச்சேன். என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கிட்டேன். ஆனால், நான் அவளுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு அம்மா என்னை அனாதை இல்லத்தில் விடவில்லை. தன்னுடைய இரத்தத்தை உருக்கி என்னைப் படிக்கவச்சு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கா. அவ பணத்தை நான் செலவு பண்ணேன். ஆனா, பெற்ற பிள்ளையான எம் பணத்துல வாழறதுக்கு அவளுக்கு உரிமை இல்லாமப் போச்சு பாத்தியா?” - சேது. “...”“ஹோட்டலில் ஒருநேர டிபன் கொண்டு வந்து வைத்த சர்வருக்கு இருபது ரூபாய் டிப்ஸ் கொடுக்கிறோம். காலம் பூராவும் எனக்காக உழைத்து ஓடாய் தேய்ந்த அம்மாவுக்கு நன்றின்னு ஒரு டிப்ஸ் கூட குடுக்கல பாத்தியா?”சேது பேசப் பேச அவன் கண்கள் கலங்கின.தான் செய்தது தவறு என்று அவன் மனம் உறுத்தியது.சுகன்யா தலை குனிந்து இருந்தாள்.சேது காரைக் கிளப்பினான். “காரை ஹோமுக்குத் திருப்புங்க...” என்றாள் சுகன்யா.
ஜி.ஏ.பிரபா
|