மார்க் ல எவ்வளவு மார்க்..?
‘‘ஷூன் 27, என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ஏனெனில் அன்றுதான் நான் நடித்த ‘மார்கன்’ படம் வெளியானது. அதே நாளில்தான் இப்போது வெளியாகி உள்ள ‘மார்க்’ படத்தில் நடிக்க அழைப்பும் வந்தது...’’ புன்னகை கலந்த ஆச்சரியத்துடன் பேச ஆரம்பித்தார் தீப்ஷிகா.
 ‘மார்க்’ல எவ்வளவு மார்க் எடுக்க முடிந்தது?
நிறைய! எனக்கு அழுத்தமான வேடம். படம் பார்த்தவங்களுக்கு இது தெரியும். வழக்கமாக நாயகிக்காக எழுதப்படக்கூடிய இலக்கணத்தை மீறி எழுதப்பட்ட வேடமே ‘மார்க்’ படத்தில் அமைந்தது.சினிமாவில் நாயகிக்கு மாஸ் எலிமெண்ட்’ ரோல் கிடைப்பது அபூர்வம். அதை எனக்கு சாத்தியமாக்கிய இயக்குநர் விஜய் கார்த்திகேயா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். சுதீப் சார் நடித்த ‘மேக்ஸ்’ படத்தில் ஹீரோயின் கேரக்டர் ரொம்ப பிரமாதமாக இருக்கும்.
 அந்தப் படம் பார்த்த பிறகு அந்த மாதிரி படம் பண்ண வேண்டும் என்று விரும்பினேன்.அந்த டீம்ல இருந்து எனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கேரக்டர் பற்றி சொன்னதும், என்னால் செய்ய முடியுமா என்று யோசித்தேன். நிறைய உழைப்பு தேவைப்படக்கூடிய கேரக்டர். அதற்காக மார்ஷல் ஆர்ட்ஸ், சண்டைப் பயிற்சி என நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன்.
 அதனால்தான் என்னால் டூப் இல்லாமல் நடிக்க முடிந்தது. உடலில் சில காயங்கள் ஏற்பட்டுச்சு. ஆனால், அதை கஷ்டமாக பார்க்காமல் எனது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக பார்த்தேன்.இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனெனில் மாஸ் படங்கள் பார்க்க எனக்குப் பிடிக்கும். முதல் முறையாக நான் அப்படி ஒரு மாஸ் படத்தில் நடித்திருக்கிறேன் என்பது பெருமைதான். சுதீப் சார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர். படத்துக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு மொழியைத் தொடர்ந்து இப்போது கன்னட சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தது மகிழ்ச்சி.  சீனியர் நடிகரான சுதீப்புடன் நடிக்கும்போது அழுத்தம் இருந்ததா?
சுதீப் சார் ரொம்ப கனிவாக நடந்து கொள்வார். ஸோ, டென்ஷனுக்கு இடமில்லை. அவருக்கு பிரமாதமாக சமைக்கத் தெரியும். நேரம் கிடைக்கும் போது மொத்த யூனிட்டுக்கும் அவர் கையால் சாப்பாடு கிடைக்கும்.அதுமட்டுமல்ல, அவர் ஒரு கேப்டன் ஆஃப் தி ஷிப். சினிமா கிராஃப்ட் முழுமையாகத் தெரிந்தவர். கடந்த ஆண்டு ஜூலை தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் படத்தை நிறைவு செய்ததற்கு காரணம், அவருடைய ஒத்துழைப்புதான். இந்த மாதிரி ஒரு டீமுடன் வேலை செய்யும்போதுதான் டெடிக்கேஷன், டைம் மேனேஜ்மென்ட் என பல்வேறு விஷயங்களை கத்துக்க முடியும்.
 அவர் நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநர். என்னுடைய கேரக்டர் பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் சுதீப் சார். அவர் கொடுத்த சில ஐடியாக்களை அப்ளை பண்ணியதால் என்னுடைய நடிப்பில் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.
நவீன் சந்திரா..?
அப்புறம் ஆக்டிங் ஹங்கர் என்று நவீன் சந்திராவை சொல்லலாம். எவ்வளவு அழுத்தமான வேடம் கொடுத்தாலும் அதற்கு நியாயம் செய்து விடுவார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் வியக்கும்படி அவருடைய பெர்ஃபாமன்ஸ் வேற லெவலில் இருக்கும். சினிமாவில் இப்போதுதான் ஒரு குழந்தை போல் அடியெடுத்து, நடக்க ஆரம்பித்துள்ளேன். நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன். நிறையபடங்கள் பண்ண வேண்டும் என்றெல்லாம் யோசித்ததில்லை.
எனக்கு இப்போது 25 வயசு. எனக்கான நேரம் இருக்கிறது. இன்னும் என்னால் சிறப்பாக பண்ண முடியும். அதற்கான தளம் சினிமாவில் இருக்கிறது. நிறைய உழைப்பு, தியாகம் தேவைப் படுகிறது. தற்போது சினிமாவில் நடிக்க டப்மாஷ், ரீல்ஸ் மூலம் எளிதாக சான்ஸ் கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்..?
எல்லோருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் நடந்து செல்லலாம் அல்லது மோட்டார் சைக்கிள், கார், படகு, விமானம் என்று ஏதோ ஒரு வாகனத்தில் செல்லலாம். எந்த வாகனத்தில் போகப் போகிறோம் என்பது ஒரு சாய்ஸ். எனவே அந்த சாய்ஸை யாரும் மிஸ் செய்ய வேண்டாம்.2 கே கிட்ஸ், பெரியோர்களுக்கு மதிப்பு தருவதில்லை என்று சொல்லப்படுகிறது... நீங்க 2 கே கிட்தானே?
ஆமா. ஆனால், ஒருபோதும் என்னை 2 கே கிட்டாக நினைத்ததில்லை. இங்கு வயசு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அனுபவம்தான் தேவை. எந்த ஜெனரேஷனைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவரவர் தங்கள் வேலைகளை செய்யும்போது அது கவனிக்கப்படும். அதற்குரிய அங்கீகாரம் உண்டு.2 கே கிட்ஸை பொறுத்தவரை தங்களுடைய திறமையை யாரும் மதிப்பதில்லை அல்லது குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்கின்ற மனநிலையில் இருக்கிறதைப் பார்க்க முடியும்.
அந்த வகையில் அர்ப்பணிப்போடு வேலை செய்யும்போது நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். எந்த வேலை செய்யும்போதும் மனப்பூர்வமாக செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்து..?தெலுங்கில் ‘ரமணி கல்யாணம்’ செய்துள்ளேன். என் மனதுக்கு நெருக்கமான படம் என்று சொல்லலாம். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். போட்டி அதிகமாகியுள்ள தற்போதைய சூழ்நிலையில் ஒரு நடிகையாக தொடர்வதற்கு என்ன ரகசியத்தை கண்டுபிடித்திருக்கிறீர்கள்..?
அந்த சக்சஸ் ஃபார்முலா உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அதை எடுத்துக் கொள்கிறேன். ஒருவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. சில நேரம் நாம் எடுக்கும் முடிவு தவறாக முடியும். அதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வோம். எல்லாமே கற்றலுக்கான அனுபவம். துணிச்சலாக இருக்கும்போது உள்ள மனநிலை வேறு. ‘நீ பண்ணுவது சரி, தொடர்ந்து முன்னேறு’ என்று சொல்லும்.சில நேரம் ‘இதைச் செய்யாதே’ என்று சொல்லும். நம்முடைய உள் மனசு என்ன சொல்லுகிறது என்பதை கொஞ்சம் கேட்க வேண்டும் .
பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சொன்னால் அதை விட்டு விட வேண்டும். மற்றபடி மனசு சொல்றதைக் கேட்கலாம். இது சினிமாவுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு வேலைக்கும் பொருந்தும். யாருடன் நடிக்க ஆர்வம்?
சினிமாக்கு வரும்போது ரஜினி சாருடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அது எப்போது நடக்கும் என்பது தெரியாது. அது நடந்தால் சந்தோஷமாக இருக்கும். ‘மண்டேலா’ மடோன் அஸ்வின் படங்கள் பிடிக்கும். அவருடைய படங்களில் கதையும் இருக்கும், காமெடியும் இருக்கும். அந்த மாதிரி இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும்.
தீப்ஷிகாவுக்கு சினிமா தவிர வேறு என்ன தெரியும்?
என்ன பண்ணலாம்னு தேடிட்டு இருக்கிறேன். நாலு ஹாபிஸ் வெச்சுக்கலாம்னு கிடார் வாங்கினேன். அது வீட்டில் ஒரு மூலையில் தூங்குது. ஆனால், அடுத்த முறை நீங்க என்ன பேட்டி எடுக்கும்போது கண்டிப்பா அது என் ஹாபியாக இருக்கும். எப்படியாவது கத்துக்க முயற்சி செய்வேன்.
எஸ்.ராஜா
|