2025ல் இந்திய சினிமாவின் மொத்த வசூல் ரூ.11 ஆயிரம் கோடி!



‘டிக்கெட் விலை இன்னும் குறைக்கலாம்...’, ‘பார்க்கிங் சார்ஜ் அதிகம்...’, ‘என்னப்பா ஒரு பாப்கார்ன் இவ்வளவு விலை விற்கிறார்கள்?’, ‘காபி ரூ.350தா..?’, ‘அட போங்கப்பா..!’ 
இப்படி நாம் எவ்வளவு சலித்துக்கொண்டாலும் ஒவ்வொரு வருடமும் திரைப்பட வசூல், முந்தைய ஆண்டை விட அதிகமாகத்தான் இருக்கிறது; அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இதோ 2025ம் ஆண்டு இறுதியில் இந்திய சினிமா வசூலித்துள்ள தொகையும் அப்படித்தான். இவை துல்லியான தொகை அல்ல. உண்மையில் இதைவிட அதிகமாகத்தான் வசூல் நிலவரம் இருக்கும்.

சரி... என்ன வசூல், எந்தப் படங்கள் டாப், எந்த மொழியில் அதிக வருமானம்... என ஒரு எட்டு பார்ப்போமா? 

இந்திய சினிமா வசூல் 2025ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இதுவரை இந்திய சினிமா ரூ.12, 995 கோடி வசூலித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ரூ.13,000 கோடி. உடன் டிக்கெட் வரி கழித்து கணக்கிட்டால் ரூ.11,023 கோடி. எனில் அரசுக்கு ரூ. 1,972 கோடி சினிமா மூலம் வருமானம் கிடைத்திருக்கிறது. இது 2024ம் ஆண்டு வசூலை விட 12% அதிகம். 

இதற்கு முக்கிய காரணம் இந்த வருடம் வெளியான ரூ.1000 கோடி வசூல் குறிக்கோள் கொண்ட படங்கள்தான் என்கிறது sacnilk  என்ற பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரிப்போர்ட் இணையதளம். 
2025ம் ஆண்டுக்கான வசூல் தொகையில் குறிப்பாக ஐந்து படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் மிகப்பெரும் பங்கு வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

துரந்தர்

ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம்.
வசூல்: ரூ. 901 கோடி.

காந்தாரா : சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படம்.

வசூல்: ரூ. 900 கோடி.

சவ்வா

லக்ஷ்மண் உத்தேகர் இயக்கத்தில் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா, அக்‌ஷய் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம்.
வசூல்: ரூ. 797 கோடி.

சைய்யாரா

மோகித் சூரி இயக்கத்தில் ஆஹான் பாண்டே, அனித் பத்தா நடிப்பில் வெளியான இந்தி காதல் திரைப்படம்.

வசூல்: ரூ. 579 கோடி.

கூலி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த், நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா, சௌபின் சாகிர், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.

வசூல்: ரூ. 515 கோடி.

இவை மட்டுமின்றி ‘வார் 2’ (இந்தி), ‘மகாவதார் நரசிம்மா’ (கன்னடம்), ‘லோகா: சாப்டர் 1 சந்திரா’ (மலையாளம்), ‘தே கால் ஹிம் ஓஜி’ (தெலுங்கு), ‘ஹவுஸ்ஃபுல் 5’ ( இந்தி) உள்ளிட்ட படங்கள் டாப் வசூல் படங்களாக இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. 

இந்த இந்தியத் திரைப்படங்களுடன் ஆங்கிலத் திரைப்படங்களான ‘F1’, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷஸ்’, ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபெர்த்’, ‘மிஷன் இம்பாசிபிள்: த ஃபைனல் ரெகார்னிங்’, ‘சூப்பர் மேன்’, ‘ஃபைனல் டெஸ்டினேஷன்: பிளட் லைன்’... உள்ளிட்ட படங்கள் இந்தியாவில் கணிசமான வசூலை செய்திருக்கின்றன. 

குறிப்பாக பல ஹாலிவுட் திரைப்படங்கள் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியானதால் சொற்ப திரையரங்கங்கள் இருந்தாலும் இந்தத் திரைப்படங்கள் ஓடிய காலமும் வசூலித்த தொகையும் அதிகம். 

பொதுவாக ஐமேக்ஸில் ஒரு டிக்கெட் விலை குறைந்தது ரூ.400 என்கிற விதத்தில் இந்திய சினிமாவின் வசூலில் ஐமேக்ஸ் பங்கு இந்த வருடம் மிகப்பெரிது எனலாம்.
2025ம் ஆண்டில் மொழி வாரியான வசூல் (தோராயமாக, Sacnilk தரவுப்படி)

மொத்த வசூல்: ரூ.11,034 கோடி (1572 படங்கள்).
இந்தி: ரூ.4,825.3 கோடி (234 படங்கள்).
தெலுங்கு: ரூ.1,986.63 கோடி (282 படங்கள்).
தமிழ்: ரூ.1,554.3 கோடி 
(291 படங்கள்).

மலையாளம்: ரூ.947.05 கோடி (191 படங்கள்).
கன்னடம்: ரூ.442.39 கோடி 
(240 படங்கள்).
ஆங்கிலம்: ரூ.678.47 கோடி 
(141 படங்கள்). 

இவற்றில் கன்னடத்தில்தான் ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியானது. வசூலோ ரூ.900 கோடி! ஆனால், ‘ஏன் நான்காம் இடம்’ என்னும் கேள்வி எழலாம். அதாவது படம் வெளியானது கன்னடத்தில்தான். என்றாலும் அப்படத்தின் மொத்த வசூல் கன்னட பிரதேசத்தைக் காட்டிலும் இந்தி, தமிழ், மலையாள மொழிகளில்தான் அதிகம் என்பதை இது குறிப்பதால் இந்த நான்காமிடம்.

தென்னிந்திய மொழிகள் வசூல் நிலவரம்

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே தென்னிந்திய மொழித் திரைப்படங்கள், வட இந்திய சினிமாவுக்கு நிகராக வசூலிக்கின்றன; விமர்சன ரீதியாக வெற்றிகளைப் பெற்று வருகின்றன. 
இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியா முழுக்க மொத்த வசூல் ரூ.11, 034 கோடி. இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த திரையுலகின் வசூல் மட்டும் ரூ.4,928 கோடி.

தெலுங்கு - ரூ.1,986 கோடி.
தமிழ் - ரூ.1,554 கோடி.
மலையாளம் - ரூ.946 கோடி.
கன்னடம் - ரூ.442 கோடி. 

2024ம் ஆண்டு கணக்கீட்டின்படி தென்னிந்திய மொழிகளின் மொத்த சினிமா வசூல் ரூ.4,493 கோடி. எனில் இந்த வருடம் ரூ. 433 கோடி அதிக வருமானத்தை தென்னிந்திய மொழிகள் கொடுத்திருக்கின்றன. 

2023ம் ஆண்டு கணக்கீட்டின் படி ரூ.4,133 கோடி வசூல் தென்னிந்திய சினிமாவிலிருந்து இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கிறது. எனில் கடந்த மூன்று வருடங்களாகவே தென்னிந்திய மொழிகளின் சினிமா வசூல் கணிசமான உயரத்தை பெற்று வருகின்றது.

நல்ல கதையுடன் பார்வையாளரை இருக்கையில் கட்டிப்போடும் தொழில்நுட்ப வசதியும் இணைந்த திரைப்படங்களின் வருகை அதிகரித்தால் நிச்சயம் இந்தியத் திரையுலகின் மொத்த வசூல் சர்வதேச நாடுகளை மிரள வைக்கும் அளவுக்கு இருக்கும். 

ஏனெனில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மனித சக்தி - பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்.பார்க்கலாம்... கடந்த 2025ம் ஆண்டின் மொத்த வசூலை இந்த 2026ம் ஆண்டு முறியடிக்குமா? எந்தெந்த மொழிகளில் என்னென்ன திரைப்படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்த காத்திருக்கின்றன..? காத்திருப்போம்.

ஷாலினி நியூட்டன்