வாராரு வாராரு கருப்பரு வாராரு...
15. சபரிமலை ஐயப்பனும் நிறைபுத்தரிசி பூஜையும் கோட்டைவாசல் கருப்பண்ணசாமியும்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமல்ல... ஐயப்பன் குறித்து தெரிந்த அனைவருக்குமே நிறைபுத்தரிசி பூஜைபற்றி தெரியும். செய்தித்தாள்களில் அல்லது செய்தி சேனலில் ஆண்டுதோறும் இந்தப் பூஜை குறித்து வருவதை எல்லோருமே பார்க்கலாம்.
 அது என்ன நிறைபுத்தரிசி பூஜை?
விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி இந்த நிறைபுத்தரிசி பூஜை ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற்று வருகிறது.
‘நிறை’ என்றால் முழுமை, நிறைவு, செழிப்பு என்று பொருள். ‘புத்தரிசி’ என்றால் புத்தம் புதிய அரிசி / புதிய அறுவடை என்று அர்த்தம். அதாவது, புதிய அறுவடையின் முதல் பலனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் செயலே ‘நிறைபுத்தரிசி பூஜை’.தமிழக, கேரள வேளாண் சமூகங்களில் தைப்பொங்கல், மகர சங்கராந்தி, அறுவடைத் திருவிழா ஆகியவற்றுக்கும் இந்த ‘நிறைபுத்தரிசி பூஜை’க்கும் இருக்கும் தொடர்பு உண்மையிலேயே சிலிர்க்க வைப்பவை. இவற்றுடன் சபரிமலை ஐயப்பனுக்கு இருக்கும் சம்பந்தம் மலைக்க வைப்பவை.  சபரிமலை ஐயப்பன், மகாசக்தி வாய்ந்த தெய்வம் மட்டுமல்ல... வேட்டைக்காரர், யோகி, தர்ம சாஸ்தா, வனவாசி தெய்வம், வேளாண் நிலம் - காடு - தர்மம் ஆகியவற்றின் சங்கமம். எனவேதான் புதிய விளைச்சலை வன தெய்வமான ஐயப்பனுக்கு படைத்து நன்றி செலுத்தும் வழிபாடாக ‘நிறைபுத்தரிசி பூஜை’யை மேற்கொள்கிறார்கள். புதிய அரிசி, அவல் / அரிசி சார்ந்த நைவேத்யம், தேங்காய், நெய், தீபம்... இவையெல்லாம் முதலில் இறைவனுக்கே என்ற சங்ககால மரபின் தொடர்ச்சியே இந்த பூஜை.
சபரிமலை ஐயப்பன் என்றால் மகர விளக்கு சட்டென்று நம் நினைவுக்கு வரும். மகர விளக்கு என்பது, சூரியன் மகர ராசியில் நுழையும் காலம்; அறுவடை முடியும் நேரம்; வனவாசம் முடிந்து சமூக வாழ்வுக்கு திரும்பும் பொழுது... இந்தச் சூழலில்தான் ‘நிறைபுத்தரிசி பூஜை’ அர்த்தமுள்ளதாகிறது.“உனக்குக் கிடைத்தது உன் உழைப்பால் மட்டுமல்ல... இயற்கை, சமூகம், தர்மம் ஆகிய முக்கூட்டின் பலன். எனவே அகம்பாவம் கொள்ளாதே... நன்றியோடு இரு.
பகிர்ந்து வாழ்...’’இதுதான் ‘நிறைபுத்தரிசி பூஜை’ உணர்த்தும் செய்தி. சபரிமலை ஐயப்பனுக்கான நிறைபுத்தரிசி பூஜை, ஒரு சடங்கு மட்டுமல்ல. அது விவசாயி செலுத்தும் நன்றி, வனத்தின் மீதான மரியாதை, தர்மத்தின் நினைவு... என எல்லாம் சேர்ந்த ஒரு பண்பாட்டு ஆன்மிக அறிவிப்பு. இதைத்தான் சபரிமலையில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பிட்ட நாள் அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து மேல்சாந்தி நெற்கதிர்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு செல்வார். அதன்பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.இந்த பிரசாத நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும்... தீய சக்திகள் விலகும்... குடும்பத்தினரின் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.
சபரிமலை ஐயப்பனுக்கு படைக்கப்படும் இந்த நெற்கதிர்களை ‘நிறைபுத்தரிசி பூஜை’க்கு முதல் நாள்தான் அறுவடை செய்வார்கள். அதுவும் அச்சன்கோயில் ஐயப்பன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில், தேவசம் போர்டு அதிகாரிகளும் மேல்சாந்தியும் சேர்ந்து அறுவடை செய்வார்கள்.
இப்படி அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கோட்டை வாசல் கருப்பண்ணசாமி ஆலயத்திலும், ஆரியங்காவு ஐயப்பன் கோயிலிலும் பூஜைகள் செய்த பிறகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு செல்வார்கள்.கண்கண்ட தெய்வமான கருப்பண்ணசாமி, இந்த இடத்திலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். திருவிதாங்கூருக்கு உட்பட்ட கோட்டைவாசலில் வீற்றிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மெளனமாக நிற்கும் இடம். தமிழகமும் கேரள மாநிலத்தின் வாசலான திருவிதாங்கூரும் ஒரே காற்றை பகிர்ந்து கொள்ளும் எல்லை. அந்த எல்லையில், ஒரு கோட்டைவாசல்.
அந்த வாசலில் ஒரு காவலன்.அவரே திருவிதாங்கூர் கோட்டைவாசல் கருப்பண்ணசாமி.அந்தக் காலத்தில், திருவிதாங்கூர் அரசின் எல்லை கல்லால் மட்டுமல்ல, நம்பிக்கையாலும் கட்டப்பட்டது. அந்த நம்பிக்கைக்கு ஒரே அர்த்தம்தான். ‘கருப்பண்ணசாமி’.இரவுகளில் காற்றுக்கு அழுத்தம் கூடும்; கனக்கும். குறிப்பாக வாசல் அருகே ஏற்றி வைக்கப்பட்ட தீபங்களும் தீப்பந்தங்களும் அசையும். நடனமாடும். ஆழிக் கூத்தாடும்.அப்படியொரு நாள் காவலுக்கு நின்ற வீரனின் நெஞ்சுக் கூடு ஏறி இறங்கியது. மூச்சுத் திணறியது.
‘‘பயப்படாதே... நம் அண்ணன்... நம் தெய்வம்... கருப்பண்ணன் வருகிறார். காவல் காக்க... இந்த எல்லையைக் காப்பாற்ற... தைரியமாக இரு...’’ அனுபவம் வாய்ந்த மூத்த வீரர், அச்சத்தில் நடுங்கும் வீரனை அணைத்தபடி சொல்லிவிட்டு அகன்றார்.அந்த வீரன் விழித்தான். ‘பெரியண்ணனா... யார் அது..?’ அவன் மனதில் கேள்வி எழுந்தது. அவனுக்கு சொல்லப்பட்டதெல்லாம் வரி வசூல் செய்த அதிகாரி இரவு கோட்டை வாசலைக் கடந்து திருவிதாங்கூர் செல்வார் என்பதுதான்.
அந்த அதிகாரிக்காக அந்த வீரன் காத்திருந்தபோதுதான் காற்றுக்கு அழுத்தம் கூடியது.மூத்த வீரர் சொன்னது போலவே பெரியண்ணன்... கருப்பண்ணன் வந்தார். குதிரை ஒலியோடு அல்ல. பறை ஒலியோடும் அல்ல. அமைதியோடு. காற்றுடன் விளையாடியபடி கருப்பு நிறத்தில் வந்தார். கையில் வாள். ஆனால், முகத்தில் கோபம் துளிகூட இல்லை. மாறாக சாந்தம்; அமைதி. அவர் வாசலின் முன் நின்றதும், கோட்டை ஓர் உயிர் போல சுவாசித்தது.
சரியாக வரி வசூலுடன் அந்த அதிகாரி வந்தார்.“இந்த வாசல் அரசுக்கல்ல... இது நீதிக்கான வாசல்...” பெரியண்ணன்... நம் அண்ணன்... கருப்பண்ணன் சொன்னார்.அநியாய வரி கொண்டு வந்த அதிகாரியால் கோட்டை வாசலைக் கடக்க முடியவில்லை. கற்சிலையென அந்த அதிகாரியின் கால்கள் நின்றுவிட்டன. நகர முடியவில்லை. வாயைத் திறந்து பேச இயலவில்லை. பொழுது விடிந்தது. ஆணவத்தின் உருவமாக முந்தைய நாள் வரை இருந்த அநியாய வரி வசூலித்த அதிகாரியின் கண்களில் நிரந்தரமாக பயம் குடியேறியிருந்தது.
மிகையில்லை. வரலாற்றில் பதிவாகாத, ஆனால், மக்களின் மனதில் நிரந்தரமாக தங்கிவிட்ட உண்மைச் சம்பவம் இது. இன்றும் வாய்மொழியாக இந்நிகழ்வை அப்பகுதி மக்கள் பகிர்ந்து வருகிறார்கள். அநியாயமாக வரி வசூலித்த அந்த அதிகாரி, கோட்டை வாசலை கடக்க முற்பட்ட அதே இரவில் -திருவிதாங்கூர் அரசர் ஒரு கனவு கண்டார்.
ஒரு கருப்பு வீரன், கோட்டைவாசலில் நின்று கர்ஜித்தான்... “நான் உன் சேவகர் அல்ல. நான் எல்லையின் சேவகர். இந்த வாசல் பலம் பொருந்தியவனுக்காக அல்ல. நியாயமானவனுக்காக...”சட்டென அரசர் விழித்தெழுந்தார். தென்றல் தழுவியபோதும் அவருக்கு வியர்த்தது. பெரியண்ணன்... கருப்பண்ணன்... நம் அண்ணன்... முணுமுணுத்தார். சட்டென்று அந்த நள்ளிரவில் அமைச்சரை அழைத்து கட்டளை பிறப்பித்தார். “கோட்டை வாசலில் கருப்பண்ணனுக்கு தீபம் தொடர்ந்து எரியட்டும்...” அன்றிலிருந்து கருப்பண்ணசாமி கோயிலுக்குள் அடைக்கப்படவில்லை. அவர் வாசலிலேயே நிற்கிறார். யுத்தம் வந்தால், வீரர்களுக்கு முன்னால் முதல் ஆளாக அவரே வருவார். வறட்சி வந்தால், மழையை அவரே கொண்டு வருவார். அதனால்தான் மக்கள் பயபக்தியோடு சொல்கிறார்கள்... “கோட்டை வாசல் மூடினாலும் நம் அண்ணன்... பெரியண்ணன்... கருப்பண்ணன் விழித்தே இருப்பார்...”இன்றும் உறங்காமல் கருப்பண்ணன் கோட்டைவாசல் அருகே பகலிலும் இரவிலும் மக்களைக் காத்து வருகிறார்.
காற்று திடீரென நின்றால், விளக்கு அசையாமல் எரிந்தால், மக்கள் கைகூப்பி வணங்குவார்கள். “கருப்பண்ணசாமி கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்...” இது வரலாற்று உண்மை அல்ல; சரித்திர, பண்பாட்டு உணர்வு.இந்த கோட்டை வாசல் கருப்பண்ணன் தமிழனுக்கான தெய்வம் மட்டுமல்ல. மலையாளிக்கான தெய்வம் மட்டுமல்ல. அவர் எல்லையின் தெய்வம்.அநியாயம் நடக்கும் இடத்தில் வாள் உயர்த்தும் ஒரே காவலன்.எல்லை என்பது கோடு அல்ல. ஆம். வரலாற்றில் எல்லை என்பது வரைபடத்தில் இழுக்கும் கோடு மட்டுமல்ல.அது அதிகாரம், பயம், வணிகம், மொழி, வழிபாடு... என சகலமும் சங்கமிக்கும் - மோதும் இடம்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், திருவிதாங்கூரும் தமிழகமும் சந்திக்கும் இடத்தில் அப்படித்தான் கோட்டைவாசல் இருக்கிறது.அந்த வாசலின் முன்னால் எந்தவொரு அரச சின்னத்தையும் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த வாசலுக்கு கருப்பண்ணசாமிதான் ஒரே காவல்.18 - 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானம், இந்திய துணைக்கண்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.வரி வசூல், எல்லைக் காவல், படை கட்டமைப்பு, வணிகப் பாதைகள்... எல்லாம் கணவாய் வழிகளின் மீது சார்ந்திருந்தன. தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி பாண்டிய மரபுப் பகுதிகளிலிருந்து மிளகு, தேங்காய், மிளகாய், துணி ஆகியவை திருவிதாங்கூருக்குள் இந்தப் பாதை வழியாகவே சென்றன.
இதே வழியில் சாதாரண மக்கள் முதல் சித்தர்கள், வியாபாரிகள், கிளர்ச்சியாளர்கள், மிராசுதார்களிடமிருந்து தப்பிச் சென்ற விவசாயிகள்... என எல்லோரும் நடந்தார்கள். பொதுவாகவே எல்லை என்றால் எந்தவொரு அரசுக்கும் பயம்தான். மன்னர் காலத்தில் மட்டுமல்ல... இன்றைய செயற்கை நுண்ணறிவு காலம் வரை எல்லைப் பிரதேசம் என்பது எப்பொழுதுமே அதிகாரத்தை அச்சுறுத்தும் பகுதிதான்.
ஆனால், இந்த கோட்டை வாசல் அன்றும் சரி... இன்றும் சரி... பயமேற்படுத்தும் இடமல்ல. அது மக்களின் முழு நம்பிக்கையும் திரண்டெழுந்த பிரதேசம். திருவிதாங்கூர் கோட்டை வாசல்கள் உயர்ந்த சுவர்களோடு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அதே வரலாற்றுக் குறிப்புகளில், ஒரு விசித்திரமான தகவலும் இருக்கிறது. “வாசலில் ஓர் உள்ளூர் தெய்வத்துக்கு தீபம் எரிந்தது...”அந்த தெய்வம் அய்யனாரும் இல்லை; சாஸ்தாவும் இல்லை. கருப்பண்ணசாமி.
ஏனெனில் கருப்பண்ணசாமி என்பது ஓர் அரச தெய்வமல்ல. ஓர் எல்லைத் தெய்வம். அவர் கோயில் உள்ளே அமரமாட்டார். கருவறை வேண்டாம். எல்லை, மரம், பாறை, வாசல்.. இவையே அவரது இருக்கை.இப்படிப்பட்ட அண்ணன்... பெரியண்ணன்... கருப்பண்ணனை திருவிதாங்கூர் - தமிழக எல்லையில் நிறுத்தியது சர்வ நிச்சயமாக ஆன்மிகத் தேர்வல்ல. அரசியல் - பண்பாட்டு அறிவு.
அரசரின் படை தூங்கலாம். ஆனால், தெய்வம் தூங்காது! திருவிதாங்கூருக்கு உட்பட்ட கோட்டை வாசலில் வீற்றிருக்கும் கருப்பண்ணசாமி, எல்லைச் சாமி அல்ல. அவர் எல்லையில் நிற்கும் மனசாட்சியின் வடிவம்.அதனால்தான் மக்கள் தினமும் அவரை வணங்குகிறார்கள். தென் தமிழகம் வழியாக சபரிமலை செல்பவர்கள், கோட்டைவாசல் கருப்பண்ணனை தொழுதுவிட்டே பம்பைக்கு நகர்கிறார்கள். சபரிமலை ஐயப்பனின் நிறைபுத்தரிசி பூஜை, இவரால் முழுமையடைகிறது.ஓம் கருப்பண்ணசாமியே நம:
(கருப்பர் வருவார்)
- கே.என்.சிவராமன்
|