நேற்று உதவி பெண் இயக்குநர்... இன்று நடிகர்கள் சப்புக்கொட்டி சாப்பிடும் ஹோட்டல் ஓனர்!
ரவி மோகன், நயன்தாரா, அமலாபால், ஆர்.ஜே.பாலாஜி என சினிமா பிரபலங்களின் ஃபேவரைட் உணவகமாக மாறியுள்ளது சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ‘சட்டி கறி உணவகம்’. இதன் உரிமையாளர்களில் ஒருவரான காயத்ரி சினிமா உதவி இயக்குநர் என்பது சிறப்பு தகவல். இவர் இயக்குநர்கள் பாண்டிராஜ், பிரதீப் ரங்கநாதன் போன்றவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
 இவருடைய கணவர் பிரதீப் ஈ.ராகவ், ‘லவ் டுடே’, டிராகன்’, ‘தலைவன் தலைவி’ உட்பட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியவர். விரைவில் வெளியாகவுள்ள ‘ எல்.ஐ.கே’, ‘ப்ரோ கோட்’ போன்ற படங்களுக்கும் இவர்தான் எடிட்டர். இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ள இவர்கள் விரைவில் இயக்குநராகவும் களமிறங்கவுள்ளார்கள். இந்த நிலையில் வருங்கால இயக்குநர் காயத்ரியிடம் பேசினோம்.
 யார் இந்த காயத்ரி?
எனக்கு சொந்த ஊர் சென்னை. எத்திராஜ் கல்லூரியில் படித்தேன். சினிமா பேஷன் என்றாலும் எனக்கு சினிமா பேக்ரவுண்ட் கிடையாது. படிக்கும்போதே ஆக்டிங் கோர்ஸ் முடித்தேன். நடிக்கணும் என்பதைவிட சினிமா கிராஃப்ட் கத்துக்கணும் என்ற ஆர்வம் இருந்துச்சு. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பயணம் ஆரம்பிச்சது. சில காரணங்களால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. ஆனாலும் என்னுடைய பேஷனை விட்டுகொடுக்கக்கூடாது என்பதால் டெக்னீஷியன் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இயக்குநர் பாண்டிராஜ் சாரிடம் ‘கதகளி’ படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தேன். ‘கடைக்குட்டி சிங்கம்’ வரை அவரிடம் இருந்தேன். பிரபுதேவா சார், பிரதீப் ரங்கநாதன் ஆகியோரிடமும் ஒர்க் பண்ணியிருக்கிறேன்.
 முன்னணி இயக்குநர்களிடம் வேலைசெய்த பிறகு டைரக்ஷன் பண்ணாமல் ஹோட்டல் பக்கம் வந்துட்டீங்க?
சினிமாவில் இருந்தாலும் எல்லோரும் சைட்ல ஒரு பிசினஸ் வெச்சிருப்பாங்க. சினிமா என்னுடைய பேஷன். பிசினஸ் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஆரம்பிச்சது. சேஃப்டிக்காக என்றும் சொல்லலாம். தற்போது ஆன் லைனில் ‘நூல் கம்பெனி’ என்ற பொட்டிக் ஷாப் நடத்துகிறேன். சம்பாதிக்கும் பணத்தில் சேமிப்பு முக்கியம். அப்படிதான் பிசினஸைப் பார்க்கிறேன். டெக்னாலாஜி ஏஐ வரை வளர்ந்தாலும் உணவும், உடையும் அவசியம். அப்படி தேவையுள்ள துறையை தேர்வு செய்து பிசினஸ் பண்ணுகிறேன். பிசினஸ் ஆரம்பிச்சாலும் என்னுடைய கவனமெல்லாம் சினிமா மீதுதான்.  உங்கள் ஹோட்டலில் என்ன ஸ்பெஷல்?
ஷூட்டிங் போகும்போது நிறைய டிராவல் பண்ணுவேன். என்னுடைய கணவர், ஹோட்டல் பங்குதாரரும், தயாரிப்பாளருமான அஸ்வின் உட்பட எங்கள் ஃப்ரெண்ட்ஸ் டீம் அனைவரும் உணவுப் பிரியர்கள்.ஈரோடு பக்கம் அடிக்கடி டிராவல் பண்ணுவோம். அங்கு கிடைக்கும் கொங்கு ஸ்டைல் உணவுக்கு நாங்கள் அடிமை. அந்த உணவில் பெரியளவில் மசாலா சேர்க்கமாட்டார்கள். சின்ன வெங்காயம், மிளகாய் என சில பொருட்களை சேர்த்து சமைப்பார்கள். ஆனால், சுவை பிரமாதமாக இருக்கும்.
மாநகரங்களைப் பொறுத்தவரை ஹோட்டல் உணவை சாப்பிட்டபிறகு, அந்த நாள் முழுவதும் மந்தமாக இருப்பதுபோல் தோன்றும். செரிமானப் பிரச்னை இருக்கும். ஈரோடு பக்கம் உள்ள உணவு அப்படியல்ல. சாப்பிட்ட சில மணிநேரங்களில் பசி எடுக்க ஆரம்பிச்சுடும். அது எங்களுக்கு அட்ராக்ஷனை கொடுத்துச்சு. அந்த ஃபுட்டுக்காகவே வருஷத்துல நாலைஞ்சு தடவை டிராவல் பண்ணுவோம். அப்போது அங்கிருந்தவர்களிடம் ரெசிபி கேட்டு, வீட்ல சமைச்சுப் பார்த்தோம். அது அப்படியே ஹோட்டலாக மாறிடுச்சு.
மாநகரங்களில் உள்ள ஹோட்டலைப் பொறுத்தவரை மசாலா அதிகமாக சேர்த்திருப்பார்கள். நாங்கள் ஹோட்டல் ஆரம்பிச்சதும் அஜினோமோட்டோ, செயற்கை நிறமிகள், பாக்கெட் மசாலா தூள் என எதையும் யூஸ் பண்ணக்கூடாது என்று முடிவெடுத்தோம். எல்லாமே ஃப்ரெஷ்ஷாக அரைச்சு சமைத்துக் கொடுக்கிறோம். சாப்பாடு சில ஹோட்டல்களில் வெள்ளை நிறத்தில் இருக்கும். எங்கள் ஹோட்டலில் வீட்ல சமைக்கிற நிறத்தில்தான் இருக்கும். சில கஸ்டமர்ஸ் ரைஸ் கலர் கம்மியாக இருப்பதாக சொன்னார்கள். சிலர் சோடாமாவு யூஸ் பண்ணச் சொன்னார்கள்.
கலர் குறைவாக இருந்தாலும் குழந்தைகளுடன் சாப்பிட வருகிறவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக செயற்கையாக எதையும் சேர்ப்பதில்லை. சமையலைப் பொறுத்தவரை செக்கு எண்ணெய் பயன்படுத்துகிறோம். சினிமா பிரபலங்கள் நிறையப் பேர் உங்கள் வாடிக்கையாளர் என்று கேள்விப்பட்டோமே?
ஆமா. எங்கள் ஹோட்டலை ரவிமோகன் சார்தான் திறந்து வைத்தார். நயன்தாரா, அமலா பால், ஆர்.ஜே பாலாஜி, ‘சின்னத்திரை’ கோபிநாத் உட்பட பலர் எங்கள் ரெகுலர் கஸ்டமர்ஸ்.
ஒருமுறை இயக்குநர் விக்னேஷ் சிவன் எங்கள் ஹோட்டலில் சாப்பிட வந்தார்.
அந்த அனுபவத்தை நயன்தாரா மேடத்திடம் ‘உங்க அம்மா சமைக்கிற மாதிரியே இருக்கு’ என்று சொல்லியுள்ளார். இரவு ஹோட்டல் மூடும் நேரத்தில் நயன்தாரா மேடம் அவருடைய ஃபேவரைட் ஃபுட் ‘ப்ரட் அண்ட் ஸ்டியூ’ ஆர்டர் பண்ணிச் சாப்பிட்டார். விக்னேஷ் சிவன் பழைய சாதத்தையும், ஆர்.ஜே.பாலாஜி சைவ உணவையும், அமலாபால் கொத்து பரோட்டோவையும், ரவிமோகன் பருப்புபொடி, நெய் என ஃபுல் மீல்ஸையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். உங்கள் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிகராக முத்திரை பதித்துள்ளார். அவர் நடிக்க வருவார் என்று எதிர்பார்த்தீர்களா?
பிரதீப் சாரிடம் ‘கோமாளி’யில் ஒர்க் பண்ணினேன். நடிகராக ஷார்ட் ஃபிலிம் காலத்திலேயே கலக்கியிருப்பார். சினிமா தெரிந்த கலைஞர். அவரிடம் ஒரு மணி நேரம் பேசினால் 59 நிமிஷம் சினிமாவைப் பற்றிதான் பேசுவார். மிச்சமிருக்கும் ஒரு நிமிஷத்துலதான் ‘எப்படியிருக்கீங்க, சாப்பிட்டீங்களா’ என்று கேட்பார்.
டைரக்ஷன் எப்போது?
ஹோட்டல் இப்போது சுமுகமாக நடக்கிறது. காதல் கலந்த காமெடி கதை ரெடி பண்ணி வைத்துள்ளேன். நானும் என் கணவரும் சேர்ந்து அந்தப் படத்தை இயக்கவுள்ளோம். எடிட்டர் பிரதீப் எப்படி கணவராக மாறினார்?
‘கதகளி’ படத்தில் நான் உதவி இயக்குநர் என்பதால் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதுவேன். என்னுடைய கணவருக்கு எடிட்டராக அதுதான் முதல் படம். எடிட்டிங் ரிப்போர்ட்டுடன் லவ் ரிப்போர்ட்டும் எழுத ஆரம்பிச்சோம். சினிமா எங்களை சேர்த்து வெச்சிருக்கு. டைரக்ஷன்தான் எங்கள் அடுத்த இலக்கு.
எஸ்.ராஜா
|