ராயல் கோஸ்ட் பிரபாஸ்... இது இந்தியாவின் பிரம்மாண்டமான ஹாரர் படம்!



பான் இந்தியா, ரூ.1000 கோடி வசூல், ‘பாகுபலி’, ‘கல்கி’ படங்களின் நாயகன்... இதெல்லாம்... இந்த கெத்தெல்லாம் இல்லாமல் பயந்து, நடுங்கி, விளக்குக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் விண்டேஜ் கலகல பிரபாஸ் டீசரில் ஆச்சரியப்படுத்துகிறார். ‘ரிபெல் ஸ்டார்’ என கொண்டாடப்படும் பிரபாஸ் நடிப்பில் முதல் ஹாரர் படமாக உருவாகியிருக்கும், ‘த ராஜா சாப்’ பொங்கல் - தெலுங்கில் சங்கராந்தி விழா சிறப்பாக வெளியாகிறது.

இத்தனை வெற்றிகள், மார்க்கெட்,  பிரமாண்டங்களைக் கடந்து எப்படி இந்த படத்தை பிரபாஸ் ஒப்புக் கொண்டார்? இந்தியாவின் மிகப்பெரும் சினிமா செட் என பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் மாருதி தசரி.‘‘ஒரு உண்மையைச் சொல்லவா? பிரபாஸ் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவர். ஆனால், அதை உடைத்துதான் முன்னாடி அவர் நிறைய படங்கள் செய்தார். 

இந்த பான் இந்தியா மார்க்கெட், கதை ,கதாபாத்திர எல்லைகள் இப்படியெல்லாம் அவர் கரியரில் மாறிய பின்னாடி திரும்பவும் அந்தக் கூச்ச சுபாவி அவருக்குள்ளே வந்துட்டாருன்னு நினைக்கிறேன். சமீப காலமாகவே ஒரு வட்டத்திற்குள் கதை செய்ய ஆரம்பிச்சிட்டார். அதேபோல் மேடைகளிலும் கூட நிறைய பேசுவதும் கிடையாது. அதையெல்லாம் உடைச்சு திரும்ப பழைய கலாட்டா, கலகல காதல் மன்னன் பிரபாஸ் கேரக்டரை இந்தப் படத்தில் காண்பிக்க நினைச்சேன். 
முன்பே ஒரு முறை ‘இப்படி ஒரு கதை வேணும்’ அப்படின்னு அவர் சொல்லியிருந்தார். ஆரம்பத்தில் ஓகே சொல்வார் அப்படின்னு எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கதையை முழுக்க கேட்டுட்டு தயங்காம ஓகே சொன்னார்.
சினிமா மார்க்கெட்டில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கார். அவருக்கு ஒரு கதை செய்யணும் என்பதே எனக்கு ரொம்ப பெரிய சவாலா இருந்துச்சு. 

ஆனால், ‘எதையும் மனதில் ஏத்திக்காம, ஒரு நல்ல காமெடி ஹாரர் படம் செய்வோம்’ அப்படின்னு எனக்கு பிரபாஸ் சார் நம்பிக்கை கொடுத்தார்.
பிரபாஸ் நடிப்பில் ஹாரர் காமெடி... மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கிறோம் எனத் தோன்றியதா?

பிரபாஸ் சார் இருக்கும் பொழுது எந்த ரிஸ்க்கும் இல்லை. நாம என்ன பட்ஜெட் எடுத்து வைத்தாலும் அதைவிட பல மடங்கு அவருடைய மார்க்கெட் பெருசு. அதை நம்பி என்ன கதையும் செய்யலாம். ஒன் மேன் ஆர்மியாக படத்தை இந்தியா முழுக்க கொண்டு போய் சேர்த்திடுவார். இப்பதான் பிரபாஸ் சார் பான் இந்தியா ஸ்டார்... இப்படிக் கதைதான் செய்வார் என்கிற எல்லைகள் எல்லாம். ஆனால், முன்னாடி நிறைய காமெடி, காதல் , ஃபேமிலி படங்கள்தான் செய்திட்டு இருப்பார். 

அந்த பிரபாஸை திரும்ப ஒருதடவை பார்க்கணும்னு நினைச்சேன். அதனால்தான் அவருடைய லுக் முதற்கொண்டு முந்தைய படங்களில் இருந்தது போல மாத்தியிருக்கோம்.
வில்லனாக சஞ்சய் தத்... படத்தின் மற்ற கேரக்டர்கள் குறித்து சொல்லுங்கள்?பிரபாஸ் சார் ஹீரோ எனில் எதிரில் இருக்கும் வில்லன் இன்னும் வலிமையானவரா இருக்கணும். 

அதற்கு பெஸ்ட் மேட்ச் சஞ்சய் தத் சார்தான். உடன் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்திக் குமார்... இவங்க தவிர யோகி பாபு சந்து கேரக்டரில் நடிச்சிருக்கார், அப்புறம் விடிவி கணேஷ் சார்... இப்படி தமிழ் நடிகர்கள் கொலாபரேஷனும் இருக்கு.

டெக்னிக்கல் டீம் நிறைய பேர் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவங்கதான். ஒளிப்பதிவு கார்த்திக் பழனி. இதற்கு முன்பு ‘பென்குயின்’, ‘வாரிசு’ படம் செய்த பாண்டிச்சேரிவாசி. என்கூடவே இதற்கு முன்பு ‘பிராண்ட் பாபு’ படத்தில் வேலை செய்திருக்கார். இது மட்டுமில்லாமல் இசை தமன். அவர் மியூசிக்கில் பாடல்கள் ஏற்கனவே டிரெண்ட்ல இருக்கு. பேக்ரவுண்ட் ஸ்கோர் கூட பயமுறுத்தும். 

சொன்னா நம்பமாட்டீங்க... 41,256 சதுர அடில ஒரு பிரம்மாண்ட ஹாரர் செட் டிசைன் செய்தோம். அதற்கு முழுமையான மூளை ஆர்ட் டைரக்டர் ராஜீவன் நம்பியார் சார்தான். சென்னை மற்றும் தமிழ் சினிமாவில் இருந்து எங்களுக்கு கிடைத்த இன்னொரு திறமையான டெக்னீசியன். 

இந்தப் படத்துக்காக ஒரு செட் கிடையாது... மொத்தம் நான்கைந்து செட் போட வேண்டியதாக இருந்தது. தலைகீழாக ஒரு அரண்மனை செட், வெறும் வெளிப்புறத் தோற்றம் மட்டும் ஒரு செட், பிரமாண்ட அரண்மனை, அதுவே முழுக்க பாழடைந்து ஹாரர் செட்டாக ஒரு அரண்மனை... இப்படி நிறைய வெர்ஷன் எங்களுக்கு தேவைப்பட்டது. அத்தனைக்கும் ராஜீவன் சார் ஈடு கொடுத்தார்.

எத்தனையோ ஹாரர் திரைப்படங்கள்... அதில் ‘த ராஜா சாப்’ எப்படி வித்தியாசப்படும்?

2012ம் ஆண்டு ‘பிரேம் கதா சித்ரா’ படம் தெலுங்குல வெளியாச்சு. அதன் கதை மற்றும் திரைக்கதையில் நான் வேலை செய்திருந்தேன். ஒரு சின்ன பட்ஜெட், அதில் ஒரு காமெடி ஹாரர், சரியான பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் இருந்தால், இந்தக் கதை எந்த பட்ஜெட்டிலும் ஜெயிக்கும் என்பது அன்னைக்குதான் எனக்குப் புரிந்தது. 

‘த ராஜாசாப்’ படத்தைப் பொறுத்தவரை பிரபாஸ் சார் கதையின் நாயகன் என்கிறதே பெரிய வித்யாசம்தான். கதையின் போக்கில் எங்கேயும் அவர் தலையிட மாட்டார். டைரக்டரின் நாயகன். இந்தக் கதைக்கு நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை டெடிகேஷனாக செய்து கொடுத்திருக்கார். 

என்னைப் பொருத்தவரை இவ்வளவு ஆயிரம் கோடி வெற்றிகளுக்கு பிறகு ஒரு நடிகர் திரும்ப இறங்கி வந்து ஒரு ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக்கிறதே ரொம்ப வித்தியாசம்தான்.
ரூ.1000 கோடி வசூல் அழுத்தம் இருக்கா? ஆடியன்ஸ் என்ன எதிர்பார்த்து வரணும்?

எந்த அழுத்தமும் எங்களுக்கு இல்லை. குறிப்பா பீப்பிள் மீடியா ஃபேக்டரி, டி.ஜி.விஷ்வ பிரசாத் சார்தான் படத்துக்கு தயாரிப்பாளர். எங்கேயும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கலை. 
அத்தனை செட், அவ்வளவு புரொடக்‌ஷன் வொர்க்... எதையும் அவர் கேள்வி கேட்கலை. முக்கியமா பிரபாஸ் எங்களுக்கு அவருடைய மார்க்கெட் அழுத்தத்தைக் கொடுக்கலை. அவரே அந்த எல்லையை உடைக்கத்தான் இந்தப் படத்தை விரும்பிச் செய்யறார்.

வசூல் எல்லாம் நாங்க யோசிக்கலை. மீண்டும் பழைய ஸ்டைல் பிரபாஸ் சார், விண்டேஜ் 2000 லுக்... அவருடைய ரசிகர்களை நிச்சயம் இந்தப் படம் உற்சாகப்படுத்தும். அதிலும் லாங் ஹாலிடேஸுக்கு இந்தப் படம் கச்சிதமான என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். ஃபேமிலியா வரலாம். ஜாலியா சிரிச்சுட்டுப் போகலாம்.

ஷாலினி நியூட்டன்