இது கதையல்ல... நிஜம்!
டப்பிங் தியேட்டரில் வேலை முடித்து டாக்ஸியில் பயணம் செய்துகொண்டிருந்த போது, பைகுலா பகுதியில் சாலையோர குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருந்த ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டார் சல்மா. இந்தச் சம்பவம் நடந்தபோது இவர் பெயர் அனுபமா. இந்தித் திரையுலகின் நடிகை.காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். அழுகை வந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அதிர்ந்தார்.அப்பொழுதுதான் பிறந்த பச்சிளம் குழந்தை. பிரசவநேர ரத்தம் கூட இன்னும் சுத்திகரிக்கப்படவில்லை.
 பதறிப் போய் சுற்றிலும் பார்த்தார். சலனமே இல்லாமல் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள்.யோசிக்கவேயில்லை. அப்படியே அக்குழந்தையை தன் கையில் அள்ளினார். காரில் ஏறினார். வீட்டுக்கு வந்தார்.அனுபமாவை வரவேற்ற அவரது கணவர், தன் மனைவியின் கரங்களில் இருந்த பச்சிளங் குழந்தையைப் பார்த்தார்.‘‘சல்மா... யார் குழந்தை இது..? நீ ஏன் நம் வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறாய்?இன்னும் ரத்தம் கூட துடைக்கப்படவில்லையா?’’ மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
‘‘அதுதான் சலீம் செய்தியே...’’ என்ற அனுபமா, நடந்த விவரங்களை அப்படியே சொன்னார்.கேட்ட சலீமுக்கு திகைப்பும், அதிர்ச்சியும் ஒருசேர எழுந்தது. எண்ணற்ற இந்தித் திரைப்படங்களுக்கு சலீம் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஸ்கிரிப்ட் ரைட்டர் அவர்தான்.மிகையில்லை. இந்தியாவையே அதிர வைத்த ‘ஷோலே’ படத்துக்கு திரைக்கதை அமைத்த சலீம் - ஜாவேத் இரட்டையர்களில் ஒருவரான சலீம்தான் இவர்.
 ‘‘குழந்தையை பத்திரமா கொண்டு வா சல்மா... ஆனால், சட்டப்படி நாமே இக்குழந்தையை வைத்துக்கொள்ள முடியாது. பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்...’’ ‘‘பெற்றோர் யா ரென்றே தெரியவில்லையே சலீம்?’’
‘‘தேடுவோம் சல்மா...’’தேடினார்கள். அந்தப் பச்சிளங்குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்தார்கள். குழந்தையுடன் அப்பெற்றோர் வசித்து வந்த குடிசைக்குச் சென்றார்கள். “பிறந்த குழந்தையை ஏன் குப்பையில் வீசினீர்கள்?’’ ஆற்றாமையுடன் சலீம் அப்பெற்றோரைப் பார்த்துக் கேட்டார். “வசதியில்லை. உணவுக்கு வழியில்லை...’’
‘‘அவ்வளவுதானே? நாங்கள் பொருளாதாரரீதியாக உதவி செய்தால் இந்தக் குழந்தையை நீங்கள் பாதுகாப்பீர்களா?”
கேட்ட சலீமுக்கு அப்பெற்றோர் எந்த பதிலையும் அளிக்காமல் மவுனமாக நின்றனர்.சலீமுக்கும் சல்மாவுக்கும் கோபம் வந்தது. திரும்பி தன் கணவரைப் பார்த்தார் சல்மா. புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக, கொண்டு வந்திருந்த பணக் கட்டை எடுத்து அப்படியே அந்தப் பெற்றோரிடம் கொடுத்தார்.
“உங்களுக்கும் இந்தக் குழந்தைக்குமான உறவு இந்தக் கணத்தில் முடிந்துவிட்டது. இனி இந்தக் குழந்தையைத் தேடி நீங்கள் வந்தால், நான் உங்களை சுட்டுக் கொன்றுவிடுவேன்...” கர்ஜித்த சலீம், அக்குழந்தையுடனும் தன் மனைவி சல்மாவுடனும் காரில் ஏறினார். ஏற்கனவே சலீமுக்கும் சல்மாவுக்கும் மூன்று மகன்கள் இருந்தனர். என்றாலும் குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுத்த அந்தப் பெண் குழந்தையை தங்கள் மகளாக வளர்க்க முடிவெடுத்தனர்.
ஆனால், இதைக் குடும்பமும் சமூகமும் விரும்பவில்லை. அனைவரும் எதிர்த்தனர்.மத ரீதியாக தடைவிதிக்கப்பட்டு சலீம், சல்மா மற்றும் அவர்களது மூன்று மகன்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். தன் சொந்த சகோதரியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சலீமை அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.இவை எதையும் சலீமும் சல்மாவும் பொருட்படுத்தவில்லை. இவர்களது மூன்று மகன்களும் தங்கள் சகோதரியாகவே அக்குழந்தையைத் தாலாட்டினர்.
இப்படி கண்டெடுக்கப்பட்ட அப்பெண் குழந்தையின் பெயர், அர்ப்பிதா சலீம் கான்!‘‘எனக்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி...’’ என பெருமையுடன் சலீம் - சல்மாவுக்கு பிறந்த மூன்று மகன்களையும், மகளையும் அர்ப்பிதா சுட்டிக் காட்டுவார்.ஆம். சலீம் - சல்மாவுக்கு ஒரு மகள் பிறந்திருந்தார். அவர் பெயர் அல்விரா கான். அர்ப்பிதாவின் மூன்று சகோதரர்களும் இன்று இந்தித் திரையுலகில் கோலோச்சுகிறார்கள்.
அவர்கள் யார் தெரியுமா?
‘சல்லு பாய்’ என செல்லமாக அழைக்கப்படும் சல்மான் கான், மற்றும் அர்பாஸ் கான், சோஹைல் கான் ஆகிய மூவரும்தான் அர்ப்பிதாவின் சகோதரர்கள்.நிறத்திலும் குலத்திலும் எந்த ஒற்றுமையும் இல்லாதபோதிலும், அர்ப்பிதாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் இன்றும் சீராட்டுகிறார்கள். மட்டுமல்ல... உரிய வயதில் சகோதரிக்கு சீர் செய்து உலகமே வியக்குமளவுக்கு அர்ப்பிதாவுக்கு திருமணமும் செய்து வைத்தனர்! அர்ப்பிதாவின் கணவர் பெயர் என்ன தெரியுமா? ஆயுஷ் சர்மா!கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் அர்ப்பிதா சலீம் கான்!
காம்ஸ் பாப்பா
|