வெளிநாட்டில் வித்தியாசமான புது வருடக் கொண்டாட்டங்கள்!
உலகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், வாழ்த்துகளைப் பரிமாறியும், கோலாகலமாக புத்தாண்டைக் கொண்டாடினார்கள். ஆனால், சில நாடுகளில் வித்தியாசமான முறையில் புத்தாண்டை வரவேற்றிருக்கின்றனர். அதைப் பற்றிப் பார்ப்போம்.
 சோஃபாவில் ஏறி குதிக்கவும்! (டென்மார்க்)
புது வருடம் ஆரம்பிக்கும் நள்ளிரவின்போது, டென்மார்க்வாசிகள் வீட்டிலிருக்கும் சோஃபா அல்லது நாற்காலியின் மீது ஏறி, கீழே குதிக்கின்றனர். இப்படிக் குதிப்பதைப் புது வருடத்துக்குள் குதிப்பதைப் போலவும், அதிர்ஷ்டம் என்றும் நினைக்கின்றனர். ஒருவேளை நாற்காலியில் ஏறி குதிக்காவிட்டால் துரதிர்ஷ்டம் தேடி வரும் என்றும் நம்புகின்றனர்.
 இதுபோக புது வருடத்தன்று தட்டுக்களை உடைப்பதை ஒரு மரபு போல பின்பற்றுகின்றனர். இப்படி உடைப்பதால் எதிர்மறையான எண்ணங்கள் நீங்கும் என்பது டென்மார்க்வாசிகளின் நம்பிக்கை.
 ஆரஞ்சு, திராட்சை, தர்ப்பூசணியை சாப்பிடவும்! (பிலிப்பைன்ஸ்)
 புத்தாண்டில் உருண்டை வடிவம் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் என்று பிலிப்பைன்ஸ் மக்கள் நம்புகின்றனர். அதனால் புது வருடத்தன்று ஆரஞ்சு, திராட்சை, தர்ப்பூசணி என உருண்டை வடிவிலுள்ள பழங்களை அதிகமாக உண்கின்றனர். தாங்கள் அணியும் ஆடைகளில் கூட உருண்டை வடிவத்தில் ஏதாவது இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். இதுபோக குழந்தைகளை உயரமாக ஜம்ப் செய்யச் சொல்கின்றனர். அப்படி ஜம்ப் செய்வதால் சீக்கிரமாக வளர முடியும் என்பது பிலிப்பைன்ஸ் மக்களின் நம்பிக்கை.
12 நொடி மவுனமாக இருக்கவும் (ரஷ்யா)
புத்தாண்டு ஆரம்பிக்கும் நள்ளிரவுக்கு முன்பு கடந்த வருடத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை ரஷ்யர்கள் எண்ணிப் பார்க்கின்றனர். புத்தாண்டு ஆரம்பிக்க ஒரு நிமிடம் இருக்கும்போது, 12 நொடிகள் மௌனமாக இருக்கின்றனர். அந்த மௌனத்துக்குப் பிறகு புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். பொது இடங்களில் பட்டாசு வெடித்தும் கொண்டாடுகின்றனர்.
விநோத மனிதனை கண்டுபிடிக்கவும்! (ஸ்பெயின்)
ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள ஊர்களில் வித்தியாசமான முறையில் புது வருடத்தைக் கொண்டாடுகின்றனர். புது வருடத்துக்கு சில நாட்கள் இருப்பதற்கு முன்பு, விநோதமான வேடமிட்ட ஒரு மனிதர் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பார்.
புது வருடத்துக்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ, அவ்வளவு மூக்குகள் அவரது முகத்தில் இருக்கும். அதாவது, புது வருடத்துக்கு 3 நாட்கள் இருந்தால், அவரது முகத்தில் 3 மூக்குகள் இருக்கும். அவரைக் கண்டுபிடித்தால், அவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பார். அவ்வளவு சீக்கிரத்தில் அவரைக் கண்டுபிடிக்க இயலாது. அவரைக் கண்டுபிடிக்கச் சொல்லிக் குழந்தைகளை ஊக்குவிப்பார்கள். புது வருடத்துக்கு சில நாட்கள் இருக்கும்போது, அவரைக் கண்டுபிடித்து குழந்தைகள் ஆசீர்வாதம் வாங்குவார்கள். புது வருடத்துக்கு ஒரேயொரு நாள் இருக்கும்போது, அவருக்கு ஒரு மூக்கு மட்டும்தான் இருக்கும். அப்போது யாராலும் அவரைக் கண்டுபிடிக்க முடியாது. இந்த விநோத புத்தாண்டு கொண்டாட்டம் பல ஆண்டுகளாக ஸ்பெயினில் தொடர்கிறது.
வீட்டுச் சுவரில் ரொட்டியைத் தட்டவும்! (அயர்லாந்து)
அயர்லாந்தில் புது வருடத்தை பல விதமாக கொண்டாடுகின்றனர். இருந்தாலும் இரண்டு விஷயங்களை அனைத்து அயர்லாந்து வீடுகளிலும் கடைப்பிடிக்கின்றனர். புது வருடம் ஆரம்பிக்கும் நாளன்று தங்களின் வீட்டை முழுமையாக சுத்தம் செய்து, வெளிப்புறத்தில் உள்ள சுவரின் மீது ரொட்டியைக் கொண்டு தட்டுகின்றனர். இதனால் கெட்ட சக்திகளும், துரதிர்ஷடங்களும் விலகி, நல்லதிர்ஷ்டம் தேடி வரும் என்று அயர்லாந்துவாசிகள் நம்புகின்றனர்.
தவிர, புது வருடம் தொடங்கும்போது இரவு உணவை அருந்தும் மேசையில் கூடுதலாக ஒரு காலி தட்டை வைக்கின்றனர். இறந்துபோன அன்புக்குரியவர்களை நினைவுகூர்வதற்காக அந்த காலி தட்டை உணவு மேசையில் வைக்கின்றனர்.
புது தாயத்து அணியவும்! (ஜப்பான்)
நாடு முழுவதும் புது வருடத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். புது வருடத்தின் முதல் நாளின்போது ஜப்பானியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருக்கும் கோயிலுக்குச் செல்கின்றனர். அங்கே பழைய அதிர்ஷ்ட தாயத்துகளைக் கழற்றிவிட்டு, புது தாயத்து களைக் கட்டுகின்றனர்.
அத்துடன் புது வருடத்தில் குறிப்பிட்ட சில உணவுகளைப் பெரும்பாலான ஜப்பானியர்கள் தவறாமல் சாப்பிடுகின்றனர். நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்ற நம்பிக்கையில் பிராண்களையும், கருவுறுதலை மேம்படுத்த மீன் முட்டைகளையும் புது வருடத்தில் சாப்பிடுகின்றனர். காலி சூட்கேஸுடன் நடக்கவும்! (சிலி)
புது வருடம் ஆரம்பிக்கும் நாளன்று காலி சூட்கேஸை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக நடப்பார்கள் சிலி மக்கள். புத்தாண்டு அன்று அப்படி நடப்பதால் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. மட்டுமல்ல, காலி சூட்கேஸுடன் வேகமாக நடப்பவர்கள், தொலைதூரம் பயணம் செய்வார்கள் என்பது சிலி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த வித்தியாசமான கொண்டாட்டத்தை இப்போதும் தொடர்கின்றனர்.
தீச்சட்டி ஏந்தி நடக்கவும்!(ஸ்காட்லாந்து)
கிறிஸ்துமஸ் முடிந்த இரண்டாவது நாளிலிருந்தே புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். ஒரு பாரம்பரிய திருவிழாவைப் போல ஐந்து நாட்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் ஸ்காட்லாந்து மக்கள்.
போர் வீரர்களைப் போல உடை அணிந்துகொண்டு கையில் தீப்பந்தத்தை ஏந்தி தெருவில் ஊர்வலம் வருவது இதில் முக்கியமான நிகழ்வு. புது வருடம் ஆரம்பிக்கும் நாட்களில் தெருக்களில் கும்பலாக நெருப்பைச் சுழற்றி வருவதால் தீய சக்திகள் விரட்டியடிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து மக்கள் நம்புகிறார்கள். பழைய பொருட்களை வீசவும்! (தென்னாப்பிரிக்கா)
ஜோகன்ஸ்பர்க் நகரில் வீட்டிலுள்ள பழைய மரச்சாமான்களை, பாத்திரங்களை, துணிகளை வெளியே வீசுவது புத்தாண்டு வழக்கம். இப்படிச் செய்வதால் பழைய விஷயங்கள் அழிந்து புதியன புகும் என்பது அவர்களது நம்பிக்கை. இதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தாலும் பர்னிச்சரை உடைப்பதை தென்னாப்பிரிக்க மக்கள் இன்னும் கைவிடவில்லை என்பது ஆச்சர்யம்.
கால்நடைகளிடம் பேசவும்! (ருமேனியா)
புது வருடத்தின் முதல் நாளில் ருமேனியா விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளிடம் பேச்சுக் கொடுப்பார்கள். விவசாயிகள் பேசியதற்கு பதில் அளிப்பதைப் போல கால்நடைகள் சத்தம் எழுப்பினால் நல்ல சகுனம் என்பது நம்பிக்கை. இதுபோக நாணயங்களை ஆற்றில் வீசுவார்கள். வீடு வீடாகச் சென்று நடனமாடி இசைக்கருவிகளை இசைப்பது ருமேனியர்களின் வழக்கம். இந்த விநோத கொண்டாட்டம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நடைபெற்றுவருகிறது.
த.சக்திவேல்
|