இந்தியாவின் முதல் தனியார் மியூசியம்!
பொதுவாக சேகரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தபால்தலைகளையும், நாணயங்களையுமே முதன்மையாக சேகரிப்பார்கள். இதிலிருந்து வேறுபடும் சிலரே கைக்கடிகாரங்கள், ரேடியோ, கேமராக்கள், பழைய பத்திரிகைகள், கார்கள், சினிமா சார்ந்த தொகுப்புகள் என வித்தியாசம் காட்டுவார்கள். ஆனால், இதில் யாருமே தாங்கள் சேகரித்த பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்துவதில்லை. இந்த இடத்தில்தான் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார் ஜி.ஆர்.மகாதேவன். பழம் பொருட்கள் சேகரிப்பாளரான இவர், தன்னுடைய சேகரிப்புகளை ஓர் அருமையான அருங்காட்சியகமாக மாற்றி மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளார்.  அதுவும் கொடைக்கானல் மற்றும் காரைக்குடி என இரண்டு இடங்களில் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார். இதன்பெயர், ‘பொம்மை காதலன்’ அருங்காட்சியகம். தற்போது இந்த அருங்காட்சியகம் நிறைய வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த ஜனவரி 2026ல் கடல் தாண்டி மலேசியாவின் பினாங்கு நகரிலும் ஓர் அருங்காட்சியகத்தைத் திறக்கவுள்ளார் ஜி.ஆர்.மகாதேவன்.
 ‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் காரைக்குடியில். இப்போ, பிரபல டூவீலர் நிறுவனத்தின் டீலராக இருக்கேன். மூன்று ஷோரூம்கள் வச்சு நடத்திட்டு வர்றேன். இருந்தும் இந்தப் பழம் பொருட்கள் சேகரிப்புதான் என்னை உயிர்ப்புடன் வச்சிருக்கு...’’ என உற்சாகமாகப் பேசுகிறார் ஜி.ஆர்.மகாதேவன். ‘‘எனக்கு வாழ்க்கையில் ஏதாவது வித்தியாசமாக பண்ணணும்னு ஆசை. மகாகவி பாரதியார்தான் எனக்கு குரு. அவரின், ‘தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி... வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத் தாயோ?’ என்ற பாடல் வரிகள் என் மனதில் ஆழமாகப் பதிந்திடுச்சு. இந்த உலகத்துல பிறந்த நாம் வாழ்க்கையில் ஏதாவது வித்தியாசமாக, பிறருக்குப் பயன்படும் வகையில் செய்திட்டுப் போகணும்னு தோணுச்சு. அப்ப எனக்கு தெரிஞ்சது பழம் பொருட்கள் சேகரிப்புதான்.இதனை கடந்த 2000ம் ஆண்டு சாதாரணமாக ஆரம்பிச்சேன். எனக்கு டின் டாய்ஸ் மேல் அதீத ஆர்வம். அதனால், இந்த ‘டன் டாய்ஸ்’ பொம்மைகள்ல இருந்துதான் என் சேகரிப்பை தொடங்கினேன். அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவாகி மற்ற பொருட்களையும் சேகரிக்க வச்சது.
பொம்மைகள்ல பழமையானது டின் டாய்ஸ். முன்பு இந்த பொம்மைகள் உலகம் முழுவதும் வியாபித்து இருந்துச்சு. இதை சேகரிக்கிறது ரொம்ப கஷ்டம். அவ்வளவு எளிதில் கிடைக்காது. நான் செட்டிநாட்டுப் பகுதியில் பிறந்ததால் செட்டியார்கள் இந்த டின் பொம்மைகளை ரொம்பப் போற்றி பாதுகாப்பாங்க.அதனால், அது என்னை ஈர்த்துச்சு. அப்புறம், உலக நாடுகள்ல உள்ள என் நண்பர்கள் வெவ்வேறு டின் டாய்ஸ்களை வாங்கி அனுப்பினாங்க. அப்படியே நிறைய டின் டாய்ஸ்களைச் சேகரிச்சேன்.
பிறகு நூறு ரூபாய், ஐம்பது ரூபாய்னு பழைய நோட்டுகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து பல்வேறு பழம் பொருட்களையும் சேகரிக்க ஆரம்பிச்சேன். என் வீடு முழுவதும் பழம் பொருட்களாக குவிய ஆரம்பிச்சது. பலரும் பொம்மைக்காரர் வீடுனு சொல்ல ஆரம்பிச்சாங்க. என் நண்பர்கள் ‘பொம்மைக் காதலன்’னு எனக்குப் பெயர் வச்சாங்க.
வீடு முழுவதும் சேகரிப்புகளாக குவிஞ்சதும் ஒருகட்டத்துல என் மனைவி ப்ரியதர்ஷினி, ‘நீங்களே சேகரிச்சு... நீங்களே ரசிக்கிறீங்க. அதை மற்றவங்களும் ரசிக்கிற மாதிரி ஓர் அருங்காட்சியகம் அமைக்கலாமே’னு சொன்னாங்க. அந்நேரம் என்னிடம் ஒரு லட்சம் பழம் பொருட்கள் இருந்துச்சு. என் மனைவியின் அந்த வார்த்தைகள் எனக்கு உத்வேகம் தர, கொடைக்கானல்ல வசிக்கிற என் நண்பர் இங்க மியூசியம் ஆரம்பிங்கனு சொன்னார். அப்படியாக கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடைக்கானல்ல முதல்முறையாக, ‘பொம்மைக் காதலன்’ என்ற பெயர்ல விண்டேஜ் அருங்காட்சியகத்தை அமைச்சேன். நாங்க எதிர்பார்த்ததைவிட அமோக வரவேற்பு கிடைச்சது...’’ என்றவர், பின்னர் காரைக்குடியில் தொடங்கியுள்ளார்.
‘‘கொடைக்கானல் சுற்றுலா இடம் என்பதால் அங்க முழுவதும் வியாபார நோக்கில் செய்தோம். சுற்றுலா வருபவர்களிடம் ஒரு கட்டணம் பெற்றோம். இதன்பிறகு என் பிறந்த மண்ணில் பண்ணணும்னு ஆசை வந்துச்சு.அதனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காரைக்குடியில் தொடங்கினேன். வீட்டுக்குப் பின்னாடி ஐந்தரை சென்ட் இடம் வாங்கி விண்டேஜ் அருங்காட்சியகத்தை உருவாக்கினேன். இதனை அப்போ தமிழ்நாடு காவல்துறை தலைவர் அபாஷ்குமார் ஐபிஎஸ் வந்து திறந்து வச்சார்.
இங்க பள்ளி, கல்லூரி மாணவர்களை இலவசமாக பார்வையிட அனுமதிக்கிறோம். மற்றவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கிறோம். இதுவும் அருங்காட்சியகப் பராமரிப்பிற்காகவே வாங்குறோம். இந்த இரண்டு அருங்காட்சியகத்திலும் தலா 2500க்கும் மேற்பட்ட வெரைட்டியில் தலா 20 ஆயிரம் பழம் பொருட்கள் இருக்குது.
இந்தச் சேகரிப்பில் நான் இரண்டு விஷயங்களைத் தவிர்த்துட்டேன். ஒண்ணு மிருகங்கள் சம்பந்தமான பொருட்களைச் சேகரிக்கமாட்டேன். ஏன்னா, எனக்கு பெட்ஸ் ரொம்பப் பிடிக்கும். அப்புறம், மரப்பாச்சி பொம்மைகள். அது ஒரு மோசமான அதிர்வலையை ஏற்படுத்தும்னு எனக்கு ஒரு நம்பிக்கை.
இதுதவிர, மற்றவற்றை அடுக்கியிருக்கேன். பொதுவா, நான் எந்த ஊருக்குப் போறேனா அங்கே பழம் பொருட்கள் இருக்குனு தெரிஞ்சால் யார் மூலமாவது அதை இங்கே கொண்டு வந்திடுவேன். அதனை நியாயமான விலை கொடுத்தே வாங்கிக்கிறேன். அந்தவகையில் நண்பர்கள் ஒவ்வொருவராக பரிந்துரை பண்ணிப் பண்ணி நேரடியாகப் போய் நிறைய சேகரிச்சேன். குறிப்பாக அமெரிக்காவில் வாழும் தமிழ் நண்பர்கள் இந்தச் சேகரிப்பிற்கு நிறைய உதவிகள் செய்தாங்க. இப்படி நட்புகள் மூலம் கிடைச்சதுதான் இவ்வளவு பொருட்களும்.
இதுல ஒன்பது விண்டேஜ் கார்கள் வச்சிருக்கேன். இதுல 1945ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு ஆஸ்டின் கார், 1926ஐச் சேர்ந்த ஆப்ஸ்டிக் சன்னி கார், 1952ஐச் சேர்ந்த ஆஸ்டின் சாமர்செட், 1945ல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தின ராணுவ ஜீப், ஃபியட்டில் லோடு ஏற்றுகிற ஃபியட் வெஹிக்கிள், மெடாடோர் வேன் ஆகியவை இருக்கு.பிறகு பழைய புத்தகங்கள், நாணயங்கள், உலக நாடுகளின் கரன்சிகள், பழமையான லாட்டரி டிக்கெட்கள், பஸ் டிக்கெட்கள் எல்லாம் சேகரிச்சு வச்சிருக்கேன். இதனுடன் உலக்கை, அம்மினு நம் பழங்காலத்துப் பொருட்களும் இருக்குது.
அப்புறம் விதவிதமான பழைய கேமராக்கள், டைப் ரைட்டிங் மிஷின்கள், ரேடியோக்கள், ஸ்கூட்டர்கள், லாந்தர் விளக்குகள், விதவிதமான ஜாடிகள், டின் டாய்ஸ்கள், கிராமபோன்கள், கை ரிக்ஷாக்கள், நாணயங்கள், வெளிநாட்டுக் கரன்சிகள், கைக்கடிகாரங்கள், தையல் மிஷின்கள், சூட்கேஸ்கள்னு எல்லாம் வச்சிருக்கேன்.இதுதவிர எழுத்திலும், நூல் வாசிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படியாக என் சேகரிப்பில் 5 ஆயிரம் நூல்களும் இருக்கு. இதில் முதல்முதலாக வெளிவந்த ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘சாவி’ வார இதழ்கள் இருக்குது.
அதாவது எல்லா புத்தகங்களின் ஆரம்பக் கால இதழ்களும் சேகரிச்சு வச்சிருக்கேன். இவையெல்லாம் பழைய கடைகள்ல போய் சேகரிச்சது. இருந்தும் மனசுக்கு நெருக்கமானது டின் டாய்ஸ்தான். டின் டாய்ஸ் மட்டும் என்னிடம் 3 ஆயிரம் இருக்குது.
எனக்குத் தெரிஞ்சவரையில் இந்தியாவில் இந்தமாதிரி பல்வேறு பொருட்கள் உள்ள ஓர் அருங்காட்சியகம் கிடையாது. ஏன்னா, இந்தியா முழுவதும் பழம் பொருட்கள் சேகரிப்பிற்காக நான் பயணிச்சிருக்கேன். உலகம் முழுவதும் சுற்றியிருக்கேன். இப்படி 20 ஆயிரம் பொருட்கள் சேகரிப்புள்ள ஒரு தனியார் அருங்காட்சியகத்தை நான் எங்கேயும் பார்க்கல. அதனாலேயே இந்தியாவின் முதல், ‘பொம்மைக் காதலன்’ அருங்காட்சியகம்னு இதனை பெருமையாகக் குறிப்பிடுறேன்.
ஆரம்பத்துல இதை மாணவர்கள் ரசிப்பாங்களானு எனக்குள் ஒரு கேள்வியும் இருந்தது. ஆனா, அவங்கதான் ரொம்ப ஆர்வமாக வந்து பார்வையிடுறாங்க. பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்கள், போர்ன்விட்டா டின்கள், சைக்கிள்கள், குழந்தைகளின் மூணுசக்கர வண்டிகள், பிளாஸ்க்குகள் எல்லாம் பார்த்து பரவசப்படுறாங்க.
எனக்கும் பள்ளிக் குழந்தைகள்ல இருந்து கல்லூரி மாணவர்கள் வரை வந்து பார்க்கிறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவர்களுடன் நிறைய விவிஐபிக்களும் வந்து பார்வையிடுறாங்க. இப்போ, நிறைய வெளிநாட்டுக்காரர்களும் கூகுள் மேப் பார்த்து வர்றாங்க...’’ என்கிற மகாதேவன் மலேசியாவில் திறக்கவுள்ள அருங்காட்சியகம் பற்றி பேசினார். ‘‘இந்த மாசம் மலேசியாவின் பினாங்கு நகர்ல அருங்காட்சியகம் திறக்க இருக்கோம். அங்கே என் நண்பர்கள் டத்தோஸ்ரீ ராமநாதன் மற்றும் அடைக்கலராஜா ஆகியோருடன் இணைந்து செய்றேன். அவங்களுக்கு நம் கலாச்சாரத்தை உலகிற்குப் பறைசாற்றணும்னு ரொம்ப ஆர்வம். அப்படியாக நாங்க கைகோர்த்தோம். இப்போ, இந்த அருங்காட்சியகத்தைக் காரைக்குடி காட்சியகத்தைப்போல ஆறு மடங்கு பெரிசாக உருவாக்கியிருக்கோம்.
இதனை மலேசியா அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தர்ராஜு சோமசுந்தரம் ரொம்ப உற்சாகமாக வரவேற்று பாராட்டினார். இதனை பினாங்குல ஏன் தொடங்குறோம்னா அங்கதான் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவாங்க. அதுமட்டுமல்ல. தமிழர்கள் அதிகம் வாழ்கிற இடம் மலேசியா. குறிப்பாக பினாங்குல நம் மக்கள் 40 சதவீதம் வரை இருக்காங்க. அப்புறம், பினாங்கு உலகின் மிகப்பெரிய சுற்றுலாத் தலம்னு யுனெஸ்கோவே சான்று கொடுத்திருக்காங்க.
அங்க ஒரு மாசத்திற்கு நான்கு சர்வதேச கப்பல்கள் வரும். ஒரு கப்பல்ல 5 ஆயிரம் பேர்னு ஒரு மாசத்திற்கு 20 ஆயிரம் பேர் வருவாங்க. அதனால் நம் அருங்காட்சியகத்தை கடற்கரையை ஒட்டியே அமைச்சிருக்கோம். அதனால், இந்த 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்ல ஒரு 10 ஆயிரம் பேர் வந்தாலே போதும். ரொம்ப பெரிய அளவில் ரீச்சாகும். இதன் உள்ளே கபேயும் அமைக்கிறோம்.
அப்புறம் பரதநாட்டியம், கோலம் போடுறது, அம்மி அரைக்கிறது, தாயக்கட்டை விளையாடுறதுனு நம் தமிழ் கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்துறோம். அப்படியாக நம் தமிழ்க் கலாச்சாரத்தை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இப்பவே அருங்காட்சியகத்திற்கு அங்கே நிறைய வரவேற்பு கிடைச்சிருக்கு...’’ என உற்சாகமாகக் குறிப்பிடுகிறார் ஜி.ஆர்.மகாதேவன்.
பேராச்சி கண்ணன்
|