சத்தியமா இந்த பார்ட் 2 : A படம் கிடையாது!



‘ஹாட்ஸ்பாட்’ வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட் 2 மச்’. பிரியா பவானி சங்கர், அஸ்வின் நடித்துள்ள இந்தப் படத்தை விஷ்ணு விஷால் வழங்குகிறார். புத்தாண்டின் துவக்கத்தில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு மும்முரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷிடம் பேசினோம்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியா இது?

நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைத்தான் இதில் சொல்லியுள்ளோம். அது ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகும். முதல் பாகத்தில் 4 கதையைப் பார்த்திருப்பீங்க. இயக்குநராக நான் தயாரிப்பாளருக்கு கதை சொல்ல வந்திருப்பேன். 
இரண்டாம் பாகத்தில் 3 புது கதைகள் இருக்கும். முதல் பாகத்தில் நான் கதை சொல்ல வந்திருப்பேன். அதுமட்டும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதை சொல்ல வர்றாங்க. அவர் யார், ஏன் கதை சொல்ல வர்றாங்க என்பதை திருப்பங்கள் கலந்த திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.

பிரியா பவானி சங்கர் தேர்வு எப்படி நடந்துச்சு?

முதல் பாகம் பார்த்துவிட்டு, படம் பிடிச்சிருந்ததா போன் பண்ணினார். அப்போது சேர்ந்து படம் பண்ணலாம் என்ற பொதுவான பேச்சு வந்துச்சு. இந்தப்  படத்தைப் பொறுத்தவரை லேடி கதை சொல்வதுபோல் இருந்ததால் அவரையே பண்ண வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். கதை சொல்லும்போது ஆஸ்திரேலியாவில் இருந்தார். அவருடைய போர்ஷனை முழுமையாக கேட்டார். மற்ற 3 கதையையும் ஐடியாவாக கேட்டு தெரிஞ்சுக்கிட்டார்.

ப்ரியா ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட். ஸ்கிரிப்ட், டயலாக் மாடுலேஷனுடன் முன்னாடியே ப்ளான் பண்ணியதால் படப்பிடிப்புக்கு முழுமையாக ரெடியாகி வந்தார். 
முதல் பாகத்தில் நான் ஏன் கதை சொல்ல வந்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அதுபோல் இந்தப் படத்தில் அவர் யார், ஏன், எதற்கு கதை சொல்ல வர்றார் என்பது ஆர் வத்
தைத்தூண்டும்விதமாக இருக்கும். 

அவர் நடித்த படங்களில் இதுமாதிரி அழுத்தமான வேடம் செய்ததில்லை. முந்தைய படங்களில் க்ளிஷேவான வேடங்கள் செய்திருந்தார். இதில் டெய்லர் மேட் ரோல் என்று சொல்லலாம். ஏனெனில் அவர் தொகுப்பாளினியாகவும், நியூஸ்ரீடராகவும் இருந்ததால் இந்த ரோல் அவருக்கு ரொம்ப பொருத்தமாக இருந்துச்சு. வசனத்துக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் அது கூடுதல் பலமாகத் தெரிஞ்சது. நான் எழுதியதை விட அவர் பெர்ஃபாமன்ஸ் அருமையாக இருந்துச்சு. இதுவரை பார்த்த பிரியாவைவிட லுக், பெர்ஃபாமன்ஸ் எல்லாமே ஃப்ரெஷ் ஃபீல் கொடுக்கும். 

பொதுவாக ஒரு படம் ஆரம்பிக்கும்போது இயக்குநரும் ஆர்ட்டிஸ்ட் டும் ஒருவித புரிதலுடனும், முடியும்போது வேறுவிதமான புரிதலுடனும் இருப்பார்கள். இந்தப் படத்தில் பிரியா ஆரம்பத்தில் என்ன சப்போர்ட்  கொடுத்தாரோ அது முடியும்வரை இருந்துச்சு.  

மற்ற வேடங்களில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

அந்தாலஜி படம் என்பதால் ஏராளமான  நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். காஸ்டிங் வீடியோ பார்த்திருப்பீங்க. அஸ்வின், ரக்‌ஷன், பாவனிஸ்ரீ... என  எல்லோரையும் கலாய்த்திருப்போம். எல்லோரிடமும் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் ரிலீஸ் பண்ணினோம். அதை ஏத்துக்க பெரிய மனசு வேணும். ஏனெனில் அஸ்வினைப் பொறுத்தவரை அந்த விஷயம்தான் அவர் கேரியரில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துச்சு. 

அஸ்வின் கூட வேலை செய்யப்போறேன் என்றதும் ஆளாளுக்கு கொளுத்திப்போட்டாங்க. ஆனால், அவருடன் வேலை செய்தது ரொம்ப நல்ல அனுபவம். நான் கேள்விப்பட்டது வேற, அவரிடமிருந்து கிடைச்ச ரெஸ்பான்ஸ் வேற. ஆடியோ லாஞ்ச் நடக்கும்போது அதைப்பத்தி விவரமாக சொல்லலாம்னு நினைக்கிறேன். வெளியே அவருக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத் துள்ளார்கள். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்பது அவருடன் வேலைசெய்யும்போதுதான் தெரிஞ்சது.

ஆர்ட்டிஸ்ட்களிடம் வேலை செய்த அனுபவத்தைப் பொறுத்தவரை தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்கள் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. எல்லோரும் ஜாம்பவான்கள். அதேயளவுக்கு சக நடிகர்களான ரக்‌ஷன், ஆதித்யா பாஸ்கர், பாவனி, பிரிகிடா என எல்லோரிடமிருந்தும் முழு சப்போர்ட் கிடைச்சது. முதல் பாகத்தில் நான் கதை சொல்லியிருப்பேன். இதில் எனக்கு திருமணம் நடந்திருக்கும். அதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

முதல் பாகத்தில் ஆபாச கன்டென்ட் என்று சில விமர்சனங்களும் வந்ததே?

நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு புரிஞ்சுடுச்சு. கண்டிப்பாக இது ‘ஏ’ சர்டிபிகேட் படமாக இருக்காது. அனைத்து தரப்பு ரசிகர்களும் வரலாம். காமெடி அதிகமாக இருக்கும். அதில் சமூகத்துக்கான கருத்து இருக்கும். முதல் பாகத்துல ஆண்கள் செக்ஸ் கன்டென்ட் இருந்துச்சு. அதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் வரமுடியவில்லை. இது குடும்பமாக எல்லோரும் பார்க்க வரணும்னு முடிவு பண்ணி எடுத்த படம்.

இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதனுடன் எனக்கு மூன்றாவது படம் இது. காலேஜ் ஃப்ரெண்டுடன் வேலை செய்வது போல் ஃபில் கொடுத்துச்சு. வழக்கமாக கம்போஸிங் நடக்கும்போது பக்கத்துல உட்காரவைக்கமாட்டார். இந்தமுறை பக்கத்துல உட்காரவெச்சு கம்போஸிங் பண்ணினார். பாடல், பேக்ரவுண்ட் எல்லாமே பிரமாதமாக வந்திருக்கு.

ஜெகதீஷ் ரவி - ஜோசப் பால் சேர்ந்து ஒளிப்பதிவை கவனிக்கிறாங்க. பிரியா, அஸ்வின் கதைகளுக்கு ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெகதீஷ் மற்ற இரண்டு கதைகளைப் பண்ணியுள்ளார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் பேலட்ல இருக்கும். பாலமணிமார்பன் சார் தயாரித்ததோடு, தயாரிப்பாளர் கேரக்டரில் நடிக்கவும் செய்துள்ளார். 

விஷ்ணு விஷால்? 

விஷ்ணு விஷால் ஸ்டூயோஸ் வெளியீடு எங்களுக்கு பெரிய பலம். முதல் பாகம் பிடிச்சதால் இரண்டாம் பாகம் வெளியிட முன்வந்தார். பிசினஸ் ப்ரொமோஷன் என எல்லா பக்கத்திலும் சப்போர்ட்டாக இருக்கிறார்.குறைந்த உழைப்பு இருந்தால் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியும் என்பதால்தான் பார்ட் 2 கல்ச்சர் அதிகரித்துள்ளதா? 

அப்படி கிடையாது. முதல் பாகம்போல் இது வேற படம். உதவியாக எது இருக்கும் என்றால் முதல் பாகம் ரசிகர்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் இரண்டாம் பாகத்தை தவறாகப் பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். நம்பிக்கையுடன் படம் பார்க்க வருவார்கள். அதை கூடுதல் பலமாக பார்க்கிறேன். அட்டென்ஷன் கூடுதலாகக் கிடைக்கும். 

பெரிய ஹீரோக்களிடமிருந்து அழைப்பு வருகிறதா?

பொங்கல் முடிந்ததும் குட் நியூஸ் எதிர்பார்க்கலாம். ஜென்சி ஆடியன்ஸுக்கான அந்தப் படம் 2026ம் ஆண்டின் பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக இருக்கும்.

எஸ்.ராஜா