இந்த வாஷிங் மெஷினின் விலை ரூ.3.47 கோடி!
கடந்த ஆறு மாதங்களாக ஜப்பானில் நடந்த ‘வேர்ல்டு எக்ஸ்போ’ எனும் புது கண்டுபிடிப்புகளின் கண்காட்சி சமீபத்தில்தான் முடிந்தது. இதில் இடம்பிடித்த இரண்டு கண்டுபிடிப்புகள் கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. ஒன்று, சீனாவின் கண்டுபிடிப்பான நவீன ஹியூமனாய்டு ரோபோ. இதுவரை தயாரான ரோபோக்களிலேயே நவீனமானது இது.
அடுத்து, ஹியூமன் வாஷிங் மெஷின். இது கண்காட்சிக்கு வந்திருந்தவர்களை மட்டுமல்லாமல், இணையத்தையும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த ‘சயின்ஸ்’ எனும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த வாஷிங் மெஷினைக் கண்டுபிடித்திருக்கிறது. மெகா கேப்ஸ்யூல் போன்ற வடிவத்திலிருக்கும் இந்த வாஷிங் மெஷினின் மேல் மூடியைத் திறந்து நாம் உள்ளே போக வேண்டும்; நாம் படுக்கும் அளவுக்கு இடம் இருக்கும். அங்கே படுத்த பிறகு மேல் மூடியை முடி விடவேண்டும். எப்படி வாஷிங் மெஷினைத் திறந்து துணிகளை உள்ளே போட்ட பிறகு மேல் மூடியை மூடுகிறோமோ அது மாதிரிதான் இதுவும்.
நாம் உள்ளே போய் மேல் மூடியை மூடியவுடன் இனிமையான இசை ஒலிக்கும்; துணியைப் போல நமது உடல் முழுவதும் துல்லியமாகச் சுத்தம் செய்யப்படும். அதாவது, நம்மை குளிப்பாட்டித் தருகிறது இந்த வாஷிங் மெஷின். இப்போது ஜப்பானிய சந்தையில் ஹியூமன் வாஷிங் மெஷின் விற்பனைக்கு வந்திருக்கிறது.
‘வேர்ல்டு எக்ஸ்போ’விற்கு 2.7 கோடிப்பேர் வருகை தந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்களை விந்தையுடன் வியக்க வைத்தது ஹியூமன் வாஷிங் மெஷின்தான். ‘‘இது உங்கள் உடலை மட்டுமல்லாமல் ஆன்மாவையும் சுத்தப்படுத்தும்...’’ என்கிறார் ‘சயின்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சச்சிக்கோ மெகுரா. இந்த வாஷிங் மெஷினில் நவீனமான சென்சார்களைப் பொருத்தியிருக்கின்றனர். அதனால் வாஷிங் மெஷினுக்குள் நாம் சென்ற நொடியிலிருந்து நம்முடைய இதயத்துடிப்பை அந்த சென்சார் கண்காணிக்கும்.
இந்த மெஷினில் குளிக்க 15 நிமிடங்கள் தேவை. அந்த 15 நிமிடங்களும் நம் உடலில் ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்றும் கண்காணிக்கும். குளிப்பது முதல் துடைத்து விடுவது வரை எல்லாவற்றையும் மெஷினே ஆட்டோமேட்டிக்காக செய்துவிடும். நாம் எதுவும் செய்யத்தேவையில்லை.
ஒசாகா நகரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் முதல் ஹியூமன் வாஷிங் மெஷினை வாங்கியிருக்கிறது. அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்குக் கட்டண முறையில் இந்த வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவதற்காக வாங்கியிருக்கின்றனர். இதன் புதுமை காரணமாக 50 மெஷின்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது, ‘சயின்ஸ்’. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 3.47 கோடி ரூபாய்.
த.சக்திவேல்
|