இந்தியாவின் முதல் ஐமேக்ஸ் திரைப்படம்!
சமீபத்தில் இந்தியாவின் மெகா இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘வாரணாசி’ படத்தைப் பற்றிய அறிவிப்புதான் திரையுலகில் ஹாட் டாக். காரணம், ஐமேக்ஸின் ஒரிஜினல் ஃபார்மேட்டில் வெளியாகப் போகும் முதல் இந்தியத் திரைப்படம் இதுதான். இதற்கு முன்பு நிறைய இந்தியப் படங்கள் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும், அவை எதுவும் ஒரிஜினல் ஃபார்மேட்டில் வெளியாகவில்லை. அந்தப் படங்கள் எல்லாம் டிஜிட்டல் ஐமேக்ஸ்க்கு மாற்றப்பட்டு வெளியாகின. அவை நேரடியாக ஐமேக்ஸ் திரையரங்குகளுக்காகவும் படமாக்கப்படவில்லை.
டிஜிட்டல் ஐமேக்ஸின் ரேஷியோ 1.90:1. அந்தப் படங்களில் சில நிமிட காட்சிகள் மட்டுமே இந்த ரேஷியோவில் இருக்கும். ஆனால், ‘வாரணாசி’யில் இடம்பெறும் சில காட்சிகள் ஐமேக்ஸின் ஒரிஜினல் ரேஷியோவான 1.43:1-ல் இருக்கும். இந்த ரேஷியோவில் ப்ரொஜக்ஷன் செய்யும் ஒரிஜினல் ஐமேக்ஸ் திரையரங்கம் குஜராத்தில் மட்டுமே இருக்கிறது.
ஆனால், அங்கே வணிக ரீதியான படங்களை வெளியிடுவதில்லை. அதனால் ராஜமவுலியின் ‘வாரணாசி’க்காக இந்தியாவில் ஒரிஜினல் ஐமேக்ஸ் திரையரங்குகள் திரும்ப வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு மும்பை, ஹைதராபாத்தில் ஒரிஜினல் ஐமேக்ஸ் திரையரங்குகள் இருந்தன. அவை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|