பெயரைப் பார்த்து ஆக்க்ஷன் படம்னு நினைச்சுட்டீங்களா?!
கண்ணடித்து சிரிக்கிறார் கீர்த்தி சுரேஷ்
‘‘துப்பாக்கிய கையிலே பிடிச்சிட்டு போஸ் கொடுக்கவும் எல்லாரும் இந்தப்படத்தை ஒரு ஆக்ஷன் அதிரடி படம் அப்படின்னு நினைக்கிறாங்க... அதான் இல்ல...’’ முகம் பளிச்சிட சிரிக்கிறார் ‘ரிவால்வர் ரீட்டா’ கீர்த்தி சுரேஷ்.
 திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!
ரொம்ப நன்றி. திருமணத்துக்கு அப்பறம் தமிழில் கொடுக்கற முதல் பேட்டி. ஹேப்பியா இருக்கேன். தலை தீபாவளி கொண்டாட்டமே முடிஞ்சது. அடுத்து பொங்கல்தான். அதற்குள் நாலஞ்சு படங்கள் வந்திடுச்சு. அதில் ஒண்ணு பாலிவுட் அறிமுகம். இன்னொரு படமும் இந்தியில் நடிச்சு முடிச்சிட்டேன். திருமணம் முடிஞ்சதுதான். ஆனால், ரெண்டு பேருமே செம பிசி. நேரமே இல்லை. ஆண்டனி என்னை முழுமையாக புரிஞ்சிக்கிட்டவர். என்னுடைய நேரம், வேலைக்கு முக்கியத்துவமும், மதிப்பும் கொடுக்கறார். அவர் கொடுக்கற சப்போர்ட்தான் என்னைத் தொடர்ந்து ஓடவைக்குது. தொடர்ச்சியா பல மொழிப் படங்கள்ல நடிக்கவும் வைக்குது. தொடர்ச்சியாக ஹீரோயின் ஓரி யண்டட் படங்களில் கலக்கறீங்களே?
நடிக்க வந்த காலத்தில் லவ், ரொமான்ஸ், கேர்ள் நெக்ஸ்ட் டோர்... இப்படி லைட் வெயிட்டான கேரக்டர்களில் நடிச்சேன். இப்போ தேசிய விருது வரை பார்த்தாச்சு.
இனிமே நாம ஒரு சின்ன ரோல் செய்தாலும் ஆடியன்ஸ் கவனிப்பாங்க. அந்தப் பொறுப்பு இருக்கணும். அலட்சியமா இருப்பது தப்பில்லையா? நம்மை நம்பி, அழுத்தமான கதைகள்ல நடிப்போம்னு நினைச்சு வர்றவங்களை ஏமாத்தறதுல எனக்கு உடன்பாடில்லை.அதனால அதைச் சார்ந்த நல்ல கதைகள் தேர்வு செய்றேன். அது கதை நாயகி கதைகளா அமைஞ்சிடுது.
‘ரிவால்வர் ரீட்டா’..? உங்க கேரக்டர்..?
பெயர்தான் ‘ரிவால்வர் ரீட்டா’. அது ஓர் அடிப்படைக் கரு. ஆனால், கதை பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படம். ஜாலியான காமெடி கதை. ஆனால், அந்தப் பழையகால கிளாசிக் ‘ரிவால்வர் ரீட்டா’ வேறு, இந்தக் கதை வேறு.ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்கிற ஒரு சாதாரண பொண்ணு... அவ குடும்பத்தில் ஒரு பிரச்னை... அதை எப்படி தன்னுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சரி செய்கிறா என்கிறதுதான் கதை.
இயக்குநர் சந்துரு, வெங்கட் சார் கூட வேலை செய்தவர். கதை சொன்னதும் எனக்கு ரொம்பப் பிடிச்சது. வீ.கே.தினேஷ் ப்ரோ, சினிமாட்டோகிராபர். ஏற்கனவே ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் அவரது ஒளிப்பதிவில் வேலை செய்திருக்கேன். ஸோ, வீ நோ ஈச் அதர். இந்த ‘ரிவால்வர் ரீட்டா’ முன்னாடியே ஆரம்பிச்ச படம். இப்போ நல்ல டைம்ல ரிலீஸ் ஆகப் போகுது. எல்லாருமே நம்ம டீம்தான். புது டீம் மாதிரியே இல்லை. ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருந்துச்சு.
பான் இந்தியா நடிகையாக இப்போ உங்க சினிமா பயணம் எப்படி மாறி இருக்கு?
நிறைய கலாசாரங்கள், மொழி அடிப்படையிலான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யுது. ஆனா, அது மைனஸா இல்ல. எல்லா மொழியும் கலாசாரமும் பண்பாடும் ஒரே நாடான நம்ம இந்தியாவைச் சேர்ந்ததுதானே? அதனால இது ப்ளஸ்.
மிகப்பெரிய ப்ளஸ்.இன்னொரு விஷயம், எல்லாமே கத்துக்க முடியுது. தமிழும், மலையாளமும் ஏற்கனவே வீட்டில் பேசுறதால் எனக்கு ஈசி. படங்களில் நடிச்சுதான் தெலுங்கு கத்துக்கிட்டேன்.இந்தி , ஸ்கூலில் ரெண்டாவது மொழி. அதனால் அதுவும் சாத்தியப்பட்டது.
ஆனால், நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம்தான் இந்த மொழிகளை எல்லாம் கலாசார அடிப்படையில் கத்துக்கறேன். இப்போ இன்னும் மொழி ஆழமாகப் புரியுது. ‘உப்பு கப்பு ரம்பு’ படம் கூட ஒரு எக்ஸ்பெரிமென்ட் படம்தான்.
வித்யாசமான ஒரு கிராமத்து சப்ஜெக்ட். இன்னமும் பெண்களை முக்கியமான பொறுப்புகளில் ஏத்துக்காத கிராமங்கள், ஊர்கள் இருக்கு. அதற்கான ஒரு படமாக அது இருக்கும். நிச்சயம் ஆடியன்ஸ் ரசிப்பாங்க. இந்திய நடிகையாக சினிமா ப்ரமோஷன்களை எப்படி பார்க்கறீங்க ?
மொழிக்கு மொழி சினிமா ப்ரொமோஷன் செய்கிற ஸ்டைலே வித்தியாசமா இருக்கு. அதிலும் இந்தியில், மார்க்கெட் ரொம்ப பெருசு. ஒரே பெல்ட். ஆனால், பல மாநிலங்களை உள்ளடக்கியது. அங்க அவங்களுக்கான மொழி, கலாசாரத்துல பெருசா இல்லைனாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கு. ஸோ, எல்லா ஊருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கணும்.
ஆனால், தென்னிந்தியாவைப் பொருத்தவரை அப்படி இல்லை. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாறினாலே சின்னச் சின்ன மாற்றங்கள் இல்ல... பெரிய மாற்றங்கள் இருக்கு. மொழி, கலாசாரம் எல்லாமே மாறிடும்.
அதனால் இங்கே இருக்கற ப்ரொமோஷன் ஸ்ட்ரேட்டஜி வேறு. ஒரு நடிகையா நிறைய மொழிகளில் நடிக்கணும் என்கிறது மிகப்பெரிய ஆசைக் கனவு. அது ஒவ்வொரு பக்கெட் லிஸ்ட் ஆக நிறைவேறிக்கிட்டு இருக்கு.
அல்ட்ரா மாடல் கீர்த்தி சுரேஷ்... இத்தனை காலமும் எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்?
முதல் காரணம் நான் உடல் எடை குறைஞ்சதுதான். எனக்கே, தானாகவே ஒரு தன்னம்பிக்கை இப்ப வந்திருக்கு. முன்னாடி என்னுடைய வெயிட்டுக்கு ஏத்த மாதிரி டிரஸ் தேர்வு செய்யணும். இப்போ எடை குறைஞ்ச காரணத்தால் எந்த டிரஸ்ஸானாலும் தயங்காம பயன்படுத்தறேன். நிறைய இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் ஃபேஷன் ஃபாலோ செய்கிறேன்.
திருமண வாழ்க்கை கொடுத்த பிளஸ் என்ன?
மனசிலே இருக்கற எடையும் குறைஞ்சிடுச்சு. ரொம்ப நாட்களா மறைச்சு வெச்சிட்டு இருந்தோம். எப்படி, எங்கே சொல்லணும், என்னவாக உலகத்துக்கு சொல்லணும்... இப்படி நிறைய கேள்விகள். சரி, கல்யாண அறிவிப்புதான் ஒரே வழி. அறிவிச்சோம்.ஆஃப்டர் மேரேஜ் எதுவும் மாறலை. நான் நானாக இருக்கேன். அவர் அவராக இருக்கார். ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கோம். எனக்குன்னு ஒருத்தர் என்னைப் பற்றி யோசிக்க இருக்கார் என்கிற எண்ணமே ஒரு தனி சந்தோஷம்.
நெக்ஸ்ட்..?
ஓர் இந்திப் படம் நடிச்சிட்டிருக்கேன். ரெண்டாவது படம். தெலுங்கிலும் ஒரு பெரிய ப்ராஜெக்ட், மலையாளத்தில் ரெண்டு படங்கள், தமிழில் ஒரு படம் ‘ரிவால்வர்ரீட்டா’ படத்துக்கு அப்பறம் வெளியாகும். ஆனால், எதையும் இப்ப வெளிப்படையா சொல்ல முடியாதபடி இருக்கேன். அதிகாரபூர்வமா கிராண்டா ஃபர்ஸ்ட் லுக் உடன் சொல்றேன்.ஆங் அப்பறம்... ‘ரிவால்வர் ரீட்டா’ டார்க் காமெடி, ஃபேமிலி என்டர்டெயின்மென்ட். நிச்சயமா ஜாலியான ஒரு படமாக இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|