பீகார்...கரை சேர்த்தது SIR...
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. மகாகாத்பந்தன் எனும் மகா கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்றது. இந்நிலையில் மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகி இருக்கிறார். பீகார் முதல்வராக அவர் பதவியேற்பது இது பத்தாவது முறை. முதல்முறையாக கடந்த 2000ம் ஆண்டு ஏழு நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார்.  பின்னர் 2005ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து இரண்டாவது முறையாக முதல்வரானார். இதனையடுத்து 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை அதே பாஜக கூட்டணியுடன் இணைந்து வெற்றிபெற்று மூன்றாவது முறை முதல்வராகப் பணியாற்றினார்.தொடர்ந்து 2014ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதற்கு 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதுதான் காரணம். இதன்பிறகு 2015ம் ஆண்டு நான்காவது முறையாக குறைந்த நாட்கள் பீகார் முதல்வராக இருந்தார்.
இந்நிலையில் 2015ம் ஆண்டு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து மகாகாத்பந்தன் கூட்டணியை உருவாக்கினார். இந்தத் தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களில் வெற்றி பெற்றது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இருந்தும் முதல்வராக நிதிஷ்குமார் ஐந்தாவது முறையாக பதவியேற்றார். அவருடன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதல்வரானார். அப்போது இந்த வெற்றிக்கு சூத்திரதாரியாக இருந்து உதவியவர் பிரசாந்த் கிஷோர். இதன்பிறகு 2017ம் ஆண்டு தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட, நிதிஷ்குமார் அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். அவர் மறுத்ததால் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதனால் மகாகாத்பந்தன் கூட்டணி முடிவுக்கு வந்தது.உடனே தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்தார் நிதிஷ்குமார். அப்படியாக அவர் ஆறாவது முறையாக பீகார் முதல்வராக 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இருந்தார்.
2020ம் ஆண்டு அவரின் சாதனைகளைப் பட்டியலிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து வெற்றி பெற்றார். இதனால், ஏழாவது முறையாக பீகார் முதல்வராக ஆனார். பின்னர் 2022ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர் மகாகாத்பந்தன் கூட்டணியில் இணைந்து எட்டாவது முறையாக முதல்வராக தேர்வானார். இப்போது தேஜஸ்வி யாதவ் இரண்டாவது முறையாக துணை முதல்வரானார்.
இந்நேரம் பெண் கல்வி, மக்கள்தொகை கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் சில கருத்துகளை நிதிஷ்குமார் தெரிவிக்க அது விவாதமானது. பின்னர் மன்னிப்பு கோரினார் நிதிஷ்குமார். தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மகாகாத்பந்தன் கூட்டணியிலிருந்து வெளியேறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானார். இதனால் 2024ம் ஆண்டு ஒன்பதாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று பத்தாவது முறையாக முதல்வராகி இருக்கிறார்.
வெற்றிக்கு என்ன காரணம்?
நிதிஷ்குமார் இதுவரை நான்கு முறை கூட்டணி மாறியிருக்கிறார். இப்போது அவருக்கு எதிராகச் செயல்படும் மகாகாத்பந்தன் கூட அவர் இணைந்து உருவாக்கிய ஒன்றுதான். இருந்தும் அவரின் வெற்றிக்குக் காரணம் பீகார் மக்கள் அவர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதே. அதுமட்டுமல்ல, தற்போதைய வெற்றிக்குப் பின்னால் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. இதில் முதலாவதாக நி-மோ கூட்டணி எனச் சொல்லப்படுகிறது.
அதாவது மாநில மக்களுக்கு நிதிஷ்குமார் மீதிருந்த நல்லெண்ணமும், மோடியின் தேசிய ஈர்ப்பும் சரியாக இணைந்தது என்கின்றனர். இதில் மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கான முக்கிய திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டது ஒரு வலுவான தளத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்களின் வாக்குவங்கியைக் குறிவைத்து திட்டங்களைத் தொடங்கினர். அப்படியாக தேர்தலுக்கு முன்பாக ஜீவிகா சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சுயதொழில் தொடங்க பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியை அறிவித்தார் நிதிஷ்குமார்.
முதியோர் ஓய்வூதிய உயர்வு, விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரித்தல், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஒதுக்கீடு, கல்வி உதவி, இலவச ரேஷன் மற்றும் எல்பிஜி இணைப்பு, வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவை நிதிஷின் கூட்டணி மீது நல்லெண்ணத்தை விதைத்தன.
ஏற்கனவே நிதிஷ்குமார் 2010ம் ஆண்டே பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மிதிவண்டி வழங்குதல், உணவுத் திட்டங்கள் எனக் கொண்டு வந்தார். இதனால், இடைநிற்றல் குறைந்து பெண் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அத்துடன் சாலைகள் அமைத்ததற்கும், கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியதற்கும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தியதற்கும் பீகாரிகள் அவரைப் பாராட்டுகின்றனர். அவரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இப்போதும் மிகவும் பின்தங்கிய சமூகங்களும், பெண்களும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில்கூட அவர் மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்து அதிக வேட்பாளர்களை நிறுத்தினார். இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மற்றொரு அடித்தளமாக அமைந்தது... என்றெல்லாம் பட்டியலிடுகிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.
ஆனால், இதில் எஸ்ஐஆர் எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் பங்கும் முக்கியமாக இருப்பதை மறுக்க முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சிறப்புத் தீவிர திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் என்பது பல தொகுதிகளில் குறைவாக இருக்கிறது.
அதாவது நீக்கப்பட்ட வேட்பாளர்கள் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். உதாரணத்திற்கு நபிநகர் தொகுதியில் எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்டவர்கள் 422 பேர். இதில் 112 வாக்கு வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. ஒருவேளை எஸ்ஐஆர் நீக்கம் இல்லாதிருந்தால் இந்த முடிவு மாறியிருக்கலாம் என்கின்றனர். இதேபோல் சந்தேஷ் தொகுதியில் 909 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் வாக்கு வித்தியாசம் என்பது 27தான். இதிலும் ஜக்கிய ஜனதா தளம் வென்றுள்ளது.தாக்கா தொகுதியில் 457 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 178 ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. அகியான் தனித்தொகுதியில் நீக்கப்பட்டவர்கள் 1322 பேர். இதில் பாஜக கட்சி 95 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனால்தான் எதிர்க்கட்சிகள் தோல்விக்கு எஸ்ஐஆரே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளன.
பேராச்சி கண்ணன்
|