இணையத்துல கவிதை எழுதறவங்க இவர் படத்தைத்தான் அப்லோட் பண்றாங்க!
இந்த @i_prathibha ... ஐடி, வெறும் ஐடி அல்ல. நம் இணைய இளைஞர்களின் இதயத்துடிப்பு. லட்சக்கணக்கான இளசுகள் பிரதீபாவின் ஒரு வீடியோ பதிவுக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்; ஒவ்வொரு வீடியோவும் குறைந்தபட்சம் 2 மில்லியன் பார்வையாளர்களை தொடுகிறது; அதிகமாக 20 மில்லியன் பார்வையாளர்கள் வரை வைரலாகின்றன. இணைய கவிஞர்கள் பலரும் பெண்களை வர்ணித்து கவிதை எழுதினால் அதில் சேர்க்கப்படுவது பிரதீபாவின் புகைப்படங்கள்தான். ‘கொண்டல்’ திரைப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர், இப்போது ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் மூலம் தமிழுக்கு நல்வரவு.
வெல்கம் டூ தமிழ் சினிமா!
ரொம்ப நன்றி... எல்லாரும் என்னை மலையாளியானு கேக்கறாங்க. தமிழ்நாட்டிலும் எல்லா பெண்களும் ரொம்பவே அழகுதான். நானும் தமிழ்நாட்டுப் பொண்ணுதான். நான் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகிட்டு இருந்தேன், சில கவர்மெண்ட் தேர்வுகளும், மேற்படிப்புக்காக ஆரம்பநிலை தேர்வுகளும் எழுதியிருக்கேன்.உண்மையைச் சொன்னா எனக்கு சினிமா ஐடியாவே கிடையாது. வீட்டிலும் அனுமதிக்க மாட்டாங்க. ஸ்கூல் மற்றும் கல்லூரியில் கூட படிப்பைத் தாண்டி திறமையை நிரூபிக்கிற எந்தப் போட்டிகளிலும் கலந்துக்கக் கூடாது என்பது ரூல்.
 அதனால் படிப்பு மட்டும்தான். அடிப்படையில் நான் டீச்சர். அப்பா ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. அம்மா கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர். அதனாலயே என்னையும் டீச்சர் வேலைக்காக படிக்க வைச்சாங்க. சோசியல் மீடியாவில் அப்பப்ப போஸ்ட் போட ஆரம்பிச்சு, மாடலிங் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.
 எப்படி சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது?
சமூக வலைதளங்களில் என்னுடைய புகைப்படங்கள் பார்த்து நிறைய பேர் என்னை நடிக்கச் சொல்லி கேட்டுகிட்டே இருந்தாங்க. நண்பர்களும் கூட சினிமாவில் நடிக்கலாமேனு கேட்டாங்க. ஆனா, என்னுடைய குறிக்கோள் அரசு சார்ந்த வேலைக்கு செல்வதுதான். ஆனா, இப்ப ஒரு படம் நடித்து வெளியான பிறகு இதுதான் எனக்கான இடம்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. ‘கொண்டல்’ இயக்குநர் சோனி வர்கீஸ் ஜோசப், என்னுடைய சோசியல் மீடியா போட்டோக்களை பார்த்து என்னைத் தேர்வு செய்தார். அந்தப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இப்ப ஓடிடியில் இருக்கு.
தொடர்ந்து ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ பட இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும் என்னை சோசியல் மீடியாவில் பார்த்துட்டு, ‘என்னுடைய கதைக்கு இந்த முகம் தேவை’னு கேட்டார். ‘இது ரொம்ப வித்தியாசமான, இதுவரையிலும் சொல்லப்படாத கதை. இதில் நீங்கள் இருந்தால் நல்லா இருக்கும்’னு சொன்னார். தமிழ் எனக்குத் தாய்மொழி. சொந்த ஊர் திண்டுக்கல். தமிழ்ல நடிப்பது எனக்கு பெருமையா இருக்கு. விரைவில் இன்னொரு தமிழ்ப் படமும் என்னுடைய நடிப்பில் வெளியாக இருக்கு.
வீட்டில் என்ன ரியாக்ஷன்..?
ஹாப்பியா இருக்காங்க. எல்லோரையும் கூப்பிட்டு என் பொண்ணு அப்படின்னு சொல்லிக்கறாங்க. என்னுடைய ஃபிரண்ட்ஸ் எல்லாருடனும் அப்பாவும் அம்மாவும் படத்துக்கு போயிருக்காங்க.
இப்போ என்னை விட என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு வீட்லதான் எதிர்பார்ப்புடன் காத்திருக்காங்க. எனக்கும் ஒவ்வொரு முறை கேமரா முன் நிற்கும் பொழுதும் இது எனக்கான இடம் என்கிற ஒரு கனெக்ட் உண்டாகுது.முன்பு டிவி சீரியலில் நடிச்சுட்டிருந்தேன். ஆனா, அங்க அபரிமிதமான நடிப்பை, முழு உணர்வுகளை ரொம்ப அதிகமா கொடுக்க வேண்டியிருக்கு. எனக்கு அது செட் ஆகலை. எதார்த்தமா இயல்பான நடிகை என்கிற பெயர் வாங்கணும்.
அடுத்து தமிழில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் ஒரு படம். தெலுங்கில் ‘கோர்ட் ஸ்டேட் Vs நோபடி’ பட ஹீரோ பிரியதர்ஷினி புலிக்கொண்டா நடிக்கும் படத்தில் கதாநாயகியா நடிக்கறேன். நான் நடிச்சிட்டு இருக்குற படங்கள் கமர்சியல் சினிமா கிடையாது. தெலுங்கு படம் கூட ஒரு நல்ல கதையாக பேசப்படும்.
நிறைய கனவுகள் இருக்கு. மிகப்பெரிய இயக்குநர்கள் கூட வேலை செய்யணும். குறிப்பா மணி சார் மாதிரியான இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் ஒரு ஃபிரேமிலாவது நாம இருக்கணும். பகத் ஃபாஸில் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படத்திலும் நடிக்க ஆசை இருக்கு.
ஷாலினி நியூட்டன்
|