வந்தார்...வென்றார்..!
2012ல் இயக்குநர் ராஜேஷின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ச்சியாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். தொடர்ந்து, 2018ல் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்களில் மிகத் தீவிரமாகக் கலந்துகொண்டார்.
 தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 39 தொகுதிகளில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசார யுக்தி நன்றாக எடுபட்டது. தன்னுடைய இயல்பான பேச்சால், உரையாடல்களின் வழியாக மக்களை அணுகிய விதம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தேர்தலில், திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களில் வெற்றிபெற உதயநிதியின் பிரசாரம் முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது.
 அதனைத்தொடர்ந்து, ஜூலை 4ம் தேதி அவர் திமுக இளைஞரணிச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு இளைஞரணியின் செயல்பாடுகள் வேகமெடுத்தன.தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட அவர், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெற்றார்.
2022 டிசம்பர் 14ம் தேதியில், தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி அறிவிக்கப்பட்டார். இதன்பிறகு உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன் பிறகு உதயநிதி, தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.தமிழ்நாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்ற மூன்றாவது நபர் உதயநிதிதான். இந்தியாவில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், பீகார் மாநிலத்தைச் சேந்த அனுராக் நாராயணன் சின்கா. அவர் 1937 முதல் 1939 வரையிலும், 1946 -1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆந்திரப் பிரதேசத்தின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, கர்நாடகத்தின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.ஹெச்.பட்டேல், சித்தராமையா, எடியூரப்பா, பீகாரின் சுஷீல் குமார் மோடி, குஜராத்தின் கேஷுபாய் பட்டேல் என பல முக்கிய தலைவர்கள் துணை முதல்வராகப் பதவி வகித்திருக்கின்றனர். இந்தவரிசையில் முக்கிய தலைவராக உருவாகி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஹரிகுகன்
|