வாராரு வாராரு கருப்பரு வாராரு...
9. தல்லாகுளம் சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமி
தென் தமிழகம் சென்று நீதியரசர் யார் என்று கேட்டுப் பாருங்கள். தாமதிக்காமல் சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமியை கைகாட்டுவார்கள்; கரம் குவிப்பார்கள். அந்தளவுக்கு நாடிவரும் பக்தர்களுக்கு நீதி வழங்கி வருகிறார். சொத்துப் பிரச்னை, தீராத வழக்கு, குடும்பச் சண்டை போன்ற குறைகளோடு வரும் பக்தர்களுக்கு இந்த சப்புரத்தடி ஸ்ரீகருப்பண்ணசாமி அன்றும் இன்றும் என்றும் உரிய நீதி வழங்கி வருகிறார்.
பொதுவாகவே மற்ற தெய்வங்களிடம் பொய் சொல்லலாம். கூறும் பொய்யால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் அந்த தெய்வம், புன்னகையுடன் நாம் சொல்லும் பொய்யை நம்புவது போல் ஏற்கும். ஆனால், யாருக்கும் எந்தச் சிக்கலும் வராது என்றாலும்... பொய்மையும் வாய்மையிடத்து என்ற மூதுரை மக்கள் மத்தியில் புழங்கிவந்தாலும், ஒருபோதும் மக்கள் ஒரேயொரு தெய்வத்திடம் மட்டும் பொய் சொல்ல மாட்டார்கள்.அந்த தெய்வம் சாட்சாத் நம் கருப்பண்ணசாமிதான்.
அதுவும் சப்புரத்தடி ஸ்ரீகருப்பண்ணசாமியின் முன்னால் ஏமாற்றுவது, பொய் உரைப்பது, தீய எண்ணத்துடன் வருவது போன்றவை ஆகவே ஆகாது. அப்படி உண்மையை மறைத்து வேடமிட்டு போலியாக வருபவர்களுக்குத் தகுந்த பாடத்தை சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமி கற்பிப்பார்.
இதற்கு வாய் மொழிக் கதைகளில் ஆரம்பித்து நடைமுறை நிகழ்வுகள் வரை எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.கிராம தெய்வங்களுக்கு புகழ்பெற்ற இடம் மதுரை. மக்களையும் மண்ணையும் காக்கத் துணிந்த பலரும் தெய்வமாக நிற்கும் இந்த பூமியில் கருப்பருக்கு ஏகப்பட்ட ஆலயங்கள் உள்ளன. அதில் மதுரை தல்லாகுளம் - அழகர் கோயில் வழியில் சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயிலும் வெகு பிரசித்தம். அழகர் கோயில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு அடுத்து மக்கள் அதிகம் வழிபடும் பிரபலமான கோயில் என்றால் அது இந்த தல்லாகுளம் சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோயில்தான். இந்தக் கோயில் 1862ம் வருடம் பெரியண்ணன் பூசாரியின் மகன் சோழமலை பூசாரியால் எழுப்பப்பட்டது. அதற்கு முன்னர் இந்த இடத்தில் கருப்பண்ணசாமியை பறை, அரிவாள் மற்றும் செருப்பு வடிவாக மட்டுமே மக்கள் வழிபட்டு வந்தனர்.
சோழமலை பூசாரியின் கனவில் கருப்பண்ணசாமியே தோன்றி, ‘இனி என்னை அரூபமாக அல்ல... உருவமாகவே மக்கள் வந்து பார்த்து செல்லட்டும். என் மீது நீ கொண்ட நம்பிக்கையும் பக்தியும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. எனவே, உருவத்துடன் இனி நான் இங்கு காட்சி தரப்போவது உன் வழியாக, உன் முயற்சியால் அரங்கேறட்டும்...’ என்று சொல்லி ஆசி வழங்கினார்.
சட்டென்று சோழமலை பூசாரி கண் விழித்தார். உறக்கம் பறந்தது. அதிகாலை, பிரும்மமுகூர்த்த வேளை. உடனே செயலில் இறங்கினார்.
அப்படித்தான் அரூபமாக இருந்த சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமி, இன்றிருக்கும் உருவத்தைப் பெற்றார்.கள்ளழகர் எதிர்சேவையின் போது இந்தக் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதும். வெள்ளிக்கிழமைகளிலும், ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி காலங்களிலும் பக்தர்கள் குவிவார்கள்.
கள்ளழகர் பூப்பல்லக்கின்போது இந்தக் கோயிலில் வைத்துதான் அலங்காரம் செய்யப்படும். இந்த சம்பிரதாயம் காலங்காலமாக நடந்து வருகிறது.இந்தக் கோயிலின் மூலவராக முன்பு இருந்தவர் முத்து கருப்பண்ணசாமி. இவர் சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமியின் அண்ணனாகக் கருதப்படுகிறார். முத்து கருப்பண்ணசாமி சிங்க வாகனத்தில் அருள் பாலிக்கிறார். கையில் அரிவாளுடன் காட்சியளிக்கும் முத்து கருப்பண்ணசாமி துடியாக இருந்துள்ளார். தம்மை அவமதித்த ஆங்கிலேய துரையின் பார்வையை இந்த முத்து கருப்பண்ணசாமி பறித்தார் என்றும், அதனால் மூலவரான முத்து கருப்பண்ணசாமியின் கோபத்தைக் குறைக்க இவரை வலப்புறத்துக்கு மாற்றி சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமியை மூலவராக மாற்றினர் என்றும் கோயில் வரலாறு கூறுகிறது.
கருப்பண்ணசாமி தவிர மற்ற தெய்வங்களின் விக்ரகங்களும் இந்தக் கோயிலில் அமைந்துள்ளன. மதுரையின் காவல் தெய்வமான சோனையா மற்றும் அழகர்கோயில் மலையின் மேல் அமைந்துள்ள ராக்காயி அம்மன் திருவுருவம் ஆகியன இங்கு அமைந்துள்ளன. அழகர்கோயில் சென்று ராக்காயி அம்மனை வழிபட இயலாதவர்கள் இந்த சப்புரத்தடி ராக்காயி அம்மனை வழிபட்டால் நூபுர கங்கை சென்று ராக்காயி அம்மனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோயிலை எழுப்பிய சோழமலை பூசாரியின் சிலையும் அவர் வளர்த்த நாய் மற்றும் பூனையின் பீடமும் இந்தக் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளன. இந்தக் கோயிலின் முக்கிய விழாவான பாரிவேட்டையின்போது சுற்று வட்டார மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கருப்பண்ணசாமியை வழிபட்டு அருள் பெறுகிறார்கள்.தாங்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறினால் மறக்காமல் இங்கு வந்து கருப்பண்ணசாமிக்கு சந்தனக் காப்பு சாற்றுகிறார்கள்.
கள்ளழகர் திருவிழாவின்போது அழகரைப் பல்லக்கில் ஏற்றி இந்தக் கோயிலின் வழியாகவே வருகிறார்கள்.கள்ளழகர் அருகில் வந்தவுடன் இக்கோயிலின் முன்னால் பல்லக்கை ஆட்டுகிறார்கள். அதாவது கருப்பண்ணசாமியிடம் ‘இம்முறை சென்று அடுத்த முறை வருகிறேன்’ என்று கள்ளழகர் சொல்லிவிட்டுச் செல்வதாக ஒரு ஐதீகம்.
பட்டி தொட்டி எங்கும் பிரபலமான கருப்பண்ணசாமி, இங்கு 6 ஆடி உயரத்தில் ஆஜானுபாகு கொண்ட உடலும், முறுக்கு மீசையும், கையில் அரிவாளும், காலில் சலங்கையும், கண்ணில் கோபமும் கொண்டு, சந்தனக் காப்பு அணிந்து அருள்பாலிக்கிறார். நாட்டை ஆளும் அரசனாகவும், உணவு அளிக்கும் தெய்வமாகவும் பல வேடங்கள் இட்டு இந்தக் கருப்பண்ண சாமியை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பூசாரிகள் அழகு பார்க்கின்றனர்.
மதுரைக்கு எப்பொழுது நீங்கள் சென்றாலும் மறக்காமல் தல்லாகுளம் சப்புரத்தடி ஸ்ரீ கருப்பண்ணசாமியை தரிசித்துவிட்டு வாருங்கள். சொத்துப் பிரச்னை, தீராத வழக்கு, குடும்பச் சண்டை என உங்கள் நிம்மதி பறிபோகிறதா? தாமதிக்காமல் உடனே தல்லாகுளம் சென்று சப்புரத்தடி ஸ்ரீகருப்பண்ணசாமியை வணங்கிவிட்டு வாருங்கள். உங்கள் பிரச்னைகள், கஷ்டங்கள் அனைத்தும் விலகும். ஓம் ஸ்ரீ கருப்பண்ண சாமியே நமஹ:
(கருப்பர் வருவார்)
- கே.என்.சிவராமன்
|