பாகிஸ்தானின் புது சர்வாதிகாரி இவர்தான்!
பாகிஸ்தானின் வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த இராணுவ அதிகாரி என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறார், ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர். சமீபத்தில் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில், அந்நாட்டின் உச்சபட்ச அதிகாரங்கள் எல்லாம் ஆசிமிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர், ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியைவிட அதிக அதிகாரங்களுடன் அசீம் இருப்பார். மட்டுமல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஆசிம் பொறுப்பு வகிப்பதோடு, கட்டளையிடும் அதிகாரமும் அவருக்கே உரியது.  இனிமேல் உச்ச நீதிமன்றம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டுமே கையாளும். அதாவது, பாகிஸ்தானின் புதிய சர்வாதிகாரியாக பொறுப்பேற்கிறார் ஆசிம். அவருக்கு இவ்வளவு அதிகாரங்கள் அளிக்கப்பட்டதை, ‘ஜனநாயகத்துக்கு இறுதிச்சடங்கு’ என்று அரசியல் நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.
யார் இந்த ஆசிம் முனீர்?
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் வாழ்ந்து வந்த பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர், சயித் ஆசிம் முனீர் அகமது ஷா. சுருக்கமாக, ஆசிம் முனீர்.
இவரது பெற்றோர் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரைச் சேர்ந்தவர்கள். சுதந்திரத்துக்குப் பிறகான பிரிவினையின்போது டோபா டேக் சிங்கிற்கு இடம்பெயர்ந்த ஆசிமின் குடும்பம், பிறகு ராவல்பிண்டியில் குடியேறியது. ஆசிமின் தந்தை சயித் சர்வர் முனீர், எஃப்ஜி டெக்னிக்கல் ஹை ஸ்கூலில் பிரின்சிபலாக இருந்தார். தவிர, ஒரு மசூதியில் உயர் பொறுப்பையும் வகித்தார்.
மர்கழி மதராசா தர்-உல்- தாஜ்வீத்தில் மத ரீதி கல்வியைப் பயின்ற ஆசிம், ஜப்பானில் உள்ள ஜேஜிஎஸ்டிஎஃப் கேம்ப் டகிகஹராவில் இராணுவம் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்தார். இதுபோக பொதுக்கொள்கை மற்றும் பாதுகாப்பு மேலாண்மை உத்தி குறித்த பாடத்தில் எம்.பில் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
மட்டுமல்ல, இஸ்லாமிய மதத்தின் மீது தீவிரமான பற்றுகொண்ட, பழமைவாதி, ஆசிம். இவரது குடும்பத்தை உள்ளூரில் இருப்பவர்கள் ‘ஹஃபீஸ்’ என்று அழைக்கின்றனர். குரான் முழுவதும் மனப்பாடம் செய்கின்றவரை ‘ஹஃபீஸ்’ என்று அழைக்கின்றனர்.
ஆசிமின் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களுக்கு குரான் முழுவதும் மனப்பாடமாகத் தெரியும். பாகிஸ்தானின் வரலாற்றில் முழு குரானையும் மனப்பாடமாகத் தெரிந்த ஒரே இராணுவ அதிகாரி, ஆசிம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் ஆர்வமுடையவர் ஆசிம். இளம் வயதில் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார். புத்தகம் வாசிப்பதில் அதீத ஆர்வமுடைய ஆசிம், அடிக்கடி பயணம் மேற்கொள்பவராகவும் இருக்கிறார். இராணுவத்தில் சேர்ந்த ஆரம்ப வருடங்களில், சவுதி அரேபியாவில் அவருக்குப் பணி. அங்கேதான் ஆசிம் முழு குரானையும் மனப்பாடம் செய்து, ‘ஹஃபீஸ்’ ஆனார். 2017ம் வருடம் மிலிட்டரி இண்டலிஜன்ஸின் டைரக்டர் - ஜெனரலாக நியமிக்கப்பட்டார், ஆசிம். 2018ம் வருடத்திலேயே பாகிஸ்தான் அரசால் வழங்கப்படும் இரண்டாம் உயரிய விருதான ‘ஹிலால்-இ- இமிதாஸை’த் தன்வசமாக்கினார். இதே வருடத்தில் இண்டர்- சர்வீசஸ் இண்டலிஜென்ஸின் டைரக்டர் -ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
சில மாதங்கள் மட்டுமே இந்தப் பதவியில் இருந்தார். பிறகு பாகிஸ்தான் இராணுவத்தில் XXX கார்ப்ஸின் கமாண்டர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் பதவிகளை எல்லாம் தன்வசமாக்கினார். இதற்கு அவரது இஸ்லாம் ரீதியான அறிவும், ஈடுபாடும் ஒரு காரணம் என்று சொல்கின்றனர்.
கடந்த நவம்பர் 2022ல் நான்கு நட்சத்திர ஜெனரல் அந்தஸ்து வழங்கப்பட்டதோடு, பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் ஆசிம் நியமிக்கப்பட்டார். நவம்பர் 27, 2022ல் ஆசிமின் பணிக்காலம் முடிவதாக இருந்தது.
இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக் கப்படுவதற்கு முன்பே, ஓய்வு பெறப்போவதாக விண்ணப்பம் கொடுத்திருந்தார். அவரது ஓய்வு விண்ணப்பத்தை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துவிட்டது. அத்துடன் அரசே அவரது பணிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டது. இப்படி எந்தவொரு அதிகாரிக்கும் நிகழ்ந்ததில்லை. இதிலிருந்தே பாகிஸ்தான் அரசாங்கம் ஆசிமின் மீது வைத்திருக்கும் மரியாதையும், நம்பிக்கையும் தெரிய வருகிறது. அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, இராணுவத்தின் தலைமை அதிகாரியாக தனது பணியைத் தொடர்ந்தார். மிலிட்டரி இண்டலிஜென்ஸ் மற்றும் இண்டர் - சர்வீசஸ் இண்டலிஜென்ஸின் தலைமைப் பொறுப்பை வகித்த ஒருவர், இராணுவத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்தது பாகிஸ்தானின் வரலாற்றில் இதுவே முதல்முறை.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகளுக்குப் பிறகு, ஃபீல்டு மார்ஷலாக பதவி உயர்வைப் பெற்றார், ஆசிம். இந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார். இனிமேல் பாகிஸ்தானின் இராணுவம் மட்டுமல்லாமல், கப்பற்படை மற்றும் விமானப்படைக்கும் தலைமை இவர்தான்.
த.சக்திவேல்
|