சிறுகதை - அறுவடை
உள்ளங்கையை நெற்றி மீது ஒருக்களித்து அழுத்தி கண்களை சுருக்கி எட்டிய தொலைவு வரை பார்வையை வீசினாள் அழகம்மை.அவளுடைய வயலைத் தவிர சுற்றிலும் இருக்கிற எல்லா வயல்களிலும் அறுவடை முடிந்திருந்தது. ஊரில் இருக்கிற அத்தனை காக்கை குருவிகளும் ஆடு மாடுகளும் அழகம்மையின் அறுவடை முடியாத வயலைத்தான் முற்றுகை யிடப் போகின்றன.
 சாதாரண நாட்களிலேயே யாரும் ஆடு மாடுகளைக் கட்டிப்போடமாட்டார்கள். நாம்தான் பயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிகாலையில் நீராகாரத்தை பருகி விட்டு வயல்வெளிக்கு வந்தவள் சுற்றிச் சுற்றி வந்தாள். எந்த வருஷமும் இல்லாமல் இந்த வருஷம் அதிக விளைச்சல். எப்பவும் ஏக்கருக்கு முப்பதுமூட்டை நெல் விளையும். இந்த தடவை பத்து மூட்டை கூடுதலாக விளையும் போல் தோன்றியது.
ஆங்காங்கே கும்பல் கும்பலாக நெற்பயிரின் தாள்கள் தரையோடு தரையாக மடிந்து கிடந்தன. உரிய நேரத்தில் உரிய காலத்தில் அறுவடையை முடிக்காததால் வந்த வினை. தங்கதுரை நல்ல உழைப்பாளிதான். எப்பவும் வயல் காட்டிலேயேதான் கிடப்பான்.
உழைப்பதில் உழவு மாடுகள் கூட அவனிடம் தோற்றுப் போய்விடும். மாங்கு மாங்கு என்று உழைப்பான்.எரிக்கிற வெயிலையும் லட்சியம் பண்ணாமல் பசியைப் பற்றியும் கவலைப்படாமல் வியர்க்க விறுவிறுக்க உழைப்பான். குறுவை, சம்பா என இரண்டு போகம் சாகுபடி செய்வான். வரப்பில் கூட உளுந்தையும் பயிரையும் ஊன்றி விடுவான். மூட்டை மூட்டையாக விளையும். இடையிடையே கத்தரி, வெண்டை என காய்கறிகளையும் விளைவித்து விடுவான்.
ஒவ்வொரு முறையும் அறுவடையில் கிடைக்கிற முப்பது மூட்டையில் இருபது மூட்டை நெல்லை விற்றுவிட்டு பத்துமூட்டை நெல்லை சாப்பாட்டிற்கு வைத்து விடுவான்.
வேறு எந்த சொத்துக்களும் கிடையாது. அவனுக்கு சொத்து, அவனுக்கு சாமி, அவனுக்கு உலகம், அவனது சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு ஏக்கர் நிலம்தான்.
ஏழாம் வகுப்பு படிக்கிற செங்கனி, பத்தாம் வகுப்பு படிக்கிற கதிரேசு இருவரையும் பள்ளிக்கு அனுப்பிய பிறகுதான் அழகம்மையும் வயல்காட்டுப் பக்கம் வருவாள். மண்பானையில் பழைய சோறையும் பச்சை மிளகாய், வெங்காயமும் கொண்டு வருவாள்.
இருவரும் கண்மாய்க் கரையோரம் இருக்கிற கருவேல மரத்திற்குக் கீழே அமர்ந்து பசியாறுவார்கள். கீச் கீச் என கத்துகிற கருவேல மரத்து குருவிகளின் இன்னிசை ஒலியில் வேலை செய்த களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும்.
முன்பெல்லாம் முப்போகம் விளைந்த பூமி அது. வானம் பொழிந்துகொண்டே இருக்கும். மனிதர்களும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். கள்ளம் தெரியாது கபடம்தெரியாது. வறுமை என்பதே தெரியாத வாழ்க்கை.
வானமும் பொழிந்து வயலும் விளைந்துவிட்டால் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.வயல்களுக்கு மாட்டு சாணம்தான் உரம். போதாக்குறைக்கு கீதாரிகளும் கிடை போடுவார்கள். ஆட்டுப் புழுக்கைதான் கூடுதல் இயற்கை உரம். மிஷின் எல்லாம் அப்போது கிடையாது. மனித உழைப்பு மட்டும்தான். கூடவே உழவு மாடுகளும் ஒத்துழைக்கும்.
விளைந்து முற்றிய நெற்கதிர்களை அறுப்பதே ஒரு திருவிழா போலதான் நடக்கும். விடியற்காலமே மனிதர்கள் தலையில் முண்டாசைச் சுற்றிக்கொண்டு கைகளில் கதிர் அறுவாளோடு கூட்டம் கூட்டமாக செல்வார்கள்.முதியவர்களின் வாயில் புகைகிற சுருட்டு வாடைதான் தெருவாசிகளை எழுப்பிவிடும்.
கலகலவென பேசியபடி தடதடவென நடக்கிற அந்த ஓசையில் பாம்பு, பூரான் எல்லாம் தெறித்து ஓடும்.பொழுது பொலபொலவென விடிவதற்குள் முக்கால்வாசி அறுப்பு முடிந்துவிடும். அறுத்த கதிர்களை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருப்பார்கள். கதிரவன் கீழ்வானத்தில் எழுகிற போது வயலை விட்டு கரையேறி சாப்பிடச் செல்வார்கள்.
ஒரு மணி நேரம் ஓய்வுக்குப் பிறகு ஜோடி ஜோடியாகச் சென்று அடுக்கிய கதிர் கட்டுகளை தலையில் சுமந்து சென்று களத்து மேட்டில் இறக்கி வைப்பார்கள்.
அங்கே கருங்கற்களும் மரக்கட்டைகளும் கிடத்தப்பட்டிருக்கும். வைக்கோல் பிரிகளில் கதிர்களைச் சுற்றி கருங்கற்களிலும் மரக்கட்டையிலும் ஓங்கி ஓங்கி அடித்து நெல்லை சேகரம் பண்ணுவார்கள். இன்னொரு பக்கம் நெல்லில் படிந்திருக்கும் தூசிகளையும் தும்புகளையும் தூற்றி அப்புறப்படுத்துவார்கள். சிரிப்பு, கிண்டல், கேலி என கலகலப்பாகப் பேசிய படியேதான் வேலையை கவனிப்பார்கள்.
மத்தியானம் சாப்பாட்டு நேரத்திற்குள் முக்கால்வாசி வேலை முடிந்து விடும். மகசூல் தெரிந்துவிடும். பிற்பகல் மூன்றரை மணிக்கு எல்லாம் அவர்களுக்கு கூலியாக நெல்லையே வாங்கிக்கொண்டு சந்தோசமாக கலைந்து செல்வார்கள்.
அப்போதெல்லாம் வயலை உழுதது மனுஷன். நெல்லைவிதைத்தது மனுஷன். நாற்றை பறித்தது மனுஷன். அதை நட்டது மனுஷன். களை எடுத்தது, பயிரை அறுத்தது, நெல்லை அடித்து சேகரம் பண்ணியது மனுஷ சக்திதான். இன்றைக்கு தொட்டதற்கும் மிஷின். அதனால்தான் இவ்வளவு பிரச்னை அழகம்மைக்கு.
நான்கு வருடங்களாகவே மிஷின் மூலமாகத்தான் எல்லோரும் அறுவடை பண்ணிக் கொண்டிருந்தார்கள். மணியக்காரர் மகன்தான் ஊருக்குள் மிஷினை அறிமுகம் செய்து வைத்திருந்தான்.
கோயில் நிலங்கள், பண்ணை நிலங்கள், தன் சொந்த நிலங்கள் என மணியக்காரருக்கு ஏகப்பட்ட நிலங்கள் இருந்தன. ஆட்கள் வைத்தெல்லாம் வேலை செய்தால் மாதக்கணக்கில் நீளும் என்பதால் மணியக்காரரின் மகன்தான் லாரி மூலமாக கதிர் அறுக்கும் மிஷினை ஊருக்குள் கொண்டுவருவான்.
தொடர்ச்சியாகப் பத்து நாட்களுக்கு மேல் அவனுடைய சொந்த வேலை நடக்கும். அடுத்தடுத்த நாட்களில் அக்கம் பக்கத்து சிறு சிறு விவசாயிகளுக்கும் அறுவடை செய்து கொடுப்பான். பெரிய தொகையை டெபாசிட் கட்டி கதிர் மிஷினை ஊருக்குள் கொண்டு வந்ததாய் பந்தா காட்டுவான். அவன் சொல்கிற தொகைதான் கூலி. அதை கொடுத்தால் அந்த வயலில் மிஷினை இறக்கி அறுவடை முடித்து விடுவான்.
எல்லோரும் அப்படித்தான் அறுவடையை முடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அழகம்மையால் முடியவில்லை. ஏக்கருக்கு மூவாயிரத்து சொச்சம் கேட்டான். அழகம்மையால் வெறும் முப்பது ரூபாய் கூட புரட்ட முடியவில்லை. காரணம், தங்கதுரைக்கு வந்த வியாதி. திடீரென்று காய்ச்சல் அடித்தது. வாந்தி எடுத்தான். தலையைச் சுற்றியது. தர்மாஸ்பத்திரிக்கு போனான். ஊசி போட்டு மருந்தெல்லாம் கொடுத்தும் சரியாகவில்லை.
டவுனுக்கு போய் தனியார் ஹாஸ்பிடலில் காட்டினான். எல்லா பரிசோதனைகளையும் செய்தபிறகு மஞ்சள் காமாலை இருப்பதைக் காட்டியது. செலின் பாட்டில், ஊசி, மருந்து என்று பட்டியல் நீண்டது. காதில் இருந்த கம்மலைக் கழற்றி அடகு வைத்தாள் அழகம்மை. அடுத்து மூக்குத்தியும் காணாமல் போனது. கழுத்தில் தொங்கிய துளியூண்டு திருமாங்கல்ய தங்கத்தையும் வட்டிக்கடையில் அடகு வைத்தாயிற்று.
தங்கதுரைக்கு உடம்பு தெளியவில்லை. கிழிந்துபோன கோரைப் பாயில் நைந்துபோய்க் கிடந்தான். கண்களைத் திறக்கவே இல்லை.குடிசைக்குள் தங்கதுரையை தனியாக விட்டுவிட்டு அழகம்மையால் கூலி வேலைக்கும் போக முடியவில்லை. அங்கே இங்கே கைநீட்டிதான் வயிற்றை நனைக்க வேண்டி இருந்தது.‘‘ஏ புள்ள அழகம்மை... உன் புருஷனுக்கு இங்கிலீஷ் மருந்து எல்லாம் செட் ஆகாது. பேசாம மணக்குடிக்கு கூட்டிப் போ.
உப்பு இல்லாத பத்தியம், மூலிகை சாறு கொடுப்பாங்க. அதைக் குடிச்சா மூணே நாள்ல மஞ்சள் காமாலை தலைதெறிக்க ஓடிப் போய்டும்...’’பக்கத்துக் குடிசை பழனியாயி கிழவி தான் யோசனை சொன்னாள். பெரும்பாலானவர்கள் மணக்குடிக்கு போய்தான் மஞ்சள் காமாலைக்கு மருந்து வாங்கிக் குடித்தார்கள். அழகம்மையும் தங்கதுரையைக் கூட்டிப் போனாள். மூன்று நாள் உப்பில்லாத பத்தியம்.
தங்கதுரைக்கு மஞ்சள்காமாலை கொஞ்சம் கொஞ்சமாக குணமாகத் தொடங்கியது. பசி எடுத்தது. ஆனால், பழையபடி எழுந்து நடமாட முடியவில்லை.தங்கதுரைக்கு பக்குவம் பண்ணிக் கொண்டிருந்ததிலேயே அழகம்மை வயலை கவனிக்கத் தவறிவிட்டாள்.‘‘டி அழகம்மை... ஒன் வூட்டு வயல் மட்டும்தான் பாக்கி.
எல்லாருக்கும் அறுவடை முடிஞ்சிடுச்சி. மணியக்காரர் மகனைப் போய்ப் பாரு புள்ள. சட்டுபுட்டுன்னு அறுவடையை முடிக்கப் பாரு. இல்லாட்டி வெளைஞ்சு கிடக்கிற நெல்லையெல்லாம் காக்காவும், குருவியும் கொண்டு போயிடும்...’’ செவ்வந்தி அக்கா பயமுறுத்தினாள். கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு அவசர அவசரமாக மணியக்காரர் மகனைப் பார்க்க ஓடினாள் அழகம்மை.‘‘அண்ணே... என் வீட்டு வயல்லயும் அறுப்ப முடிச்சு கொடுத்திடுங்கண்ணே...’’ கைகளை குவித்து கும்பிட்டாள்‘‘நீ ரூபாய குடுத்தினா நானா மாட்டேங்கறேன்? நாளைக்கே அறுவடைய முடிச்சிடலாம்...’’ மணியக்காரர் மகன் சொன்ன தொகையைக் கேட்டு திகைத்துப்போனாள் அழகம்மை.
‘‘அவ்வளவு ரூபாய்க்கு நான் எங்கேண்ணே போவேன்? அறுவடையை முடிச்சு குடுங்கண்ணே... நெல்லை வித்த பிறகு உங்களுக்கு சேரவேண்டிய தொகையை கொடுத்துடுறேன். என் மச்சானுக்கு மஞ்சக் காமாலை வந்து படுக்கையிலேயே கிடக்காரு. தெனம் சோத்துக்கும் தண்ணிக்கும் அல்லாடிக்கிட்டு கிடக்கேன்.
புள்ள குட்டிக்காரி. கொஞ்சம் மனசு வைங்கண்ணே...’’‘‘எங்கப்பாரு தர்மசத்தரமா கட்டி வச்சிருக்காரு, போறவங்க வர்றவங்களுக்கு எல்லாம் நான் தர்மம் பண்றதுக்கு? அம்பதாயிரம் டெபாசிட் கட்டித்தான் நம்ம ஊருக்கு கதிர் அடிக்கிற மிஷின் கொண்டு வந்திருக்கேன். எல்லாரும் கடன் சொல்லிட்டே இருந்தா நான் காசிக்கு போக வேண்டியதுதான். ரூபாய் இருந்தா இந்தப் பக்கம் வா. இல்லைன்னா போயிட்டே இரு...’’ கறாராகப் பேசினான். கூனிக்குறுகிப் போனாள் அழகம்மை. ‘‘நெல்ல வித்ததும் டிஎன்சில நீங்களே போய் ரூவாயை வாங்கிக்கங்க. முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்கண்ணே...’’ அழுகை அடைத்தது. ‘‘உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா?’’ எரிச்சலாய்ப் பார்த்தான்.அதற்குமேல் அழகம்மை அவன் எதிரே நிற்கவில்லை. கண்களைக் கசக்கிக்கொண்டே விறு விறுவென்று குடிசைக்கு வந்து விட்டாள்.
‘‘முப்பது மூட்டை நெல்லு வெளைஞ்சு கிடக்கு. என்னை அந்த மனுஷன் நம்ப மாட்டேங்குறானே... நான் என்ன செய்ய?’’ தங்கதுரையிடம் நடந்ததைக் கூறி விம்மி வெடித்துக் கதறினாள்.
‘‘போனா போகட்டும். அழாத புள்ள. நமக்கு மேல இருக்க வானமும் கீழ இருக்கற பூமியும் கைவிட்டுடாது. இப்படியே கிடந்துடுவேன்னு நெனச்சிட்டியா..? நான் எழுந்திருவேன் புள்ள.
ஒரு ரெண்டு நாளைக்கு வயக்காட்ட பாத்துக்க. காக்கா குருவி அண்டாம விரட்டி விடு...’’‘‘என்னைய சமாதானப்படுத்தறதுக்காக எதையாவது உளறாத மச்சான். ரெண்டு நாளைக்கு பிறகு கதிர் அடிக்கிற மிஷின மணியக்காரர் மகன் டவுனுக்கு ஏத்தி அனுப்பிடுவாரு. திரும்பவும் மிஷினை இங்கே கூட்டி வரணும்னா டெபாசிட் கட்டணும். லாரி வாடகை கொடுக்கணும். எல்லாமே வீணா போச்சு, நம்ம உழைப்பு அத்தனையும் நாசமா போச்சு. இந்த வருஷம் பொழப்பு அவ்வளவுதான். நம்ம வயித்துல மண்ணுதான்...’’ புலம்பிக் கொட்டினாள் அழகம்மை.
வேலி இல்லாத பயிர் என்றால் ஊரில் இருக்கிற ஆடு மாடுகளுக்கு எல்லாம் கொண்டாட்டம். விரட்டி விரட்டி ஓய்ந்து போனாள் அழகம்மை.
நாலாப் பக்கம் இருந்தும் ஆடுகளும் மாடுகளும் அவள் வயலை நோக்கி படையெடுத்தன. உழைத்தது வீண். விளைந்தது வீண். இந்த மனுசப்பொறப்பே வீண். காசு பணம் இருக்கிறவனா பொறக்கணும். இல்லாட்டி பொறக்கவே கூடாது...
நீளமான மூங்கில் கழியைக் கையில் ஏந்தியவாறே ஓடிக் கொண்டே இருந்தாள் அழகம்மை. கால்கள் வலித்தன. அதைவிட மனசு பலமடங்கு வலித்தது. தங்கதுரையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இரண்டு நாட்களாக வயல் காட்டிலேயேதான் கிடந்தாள். எதுவும் நடந்தது போலத் தெரியவில்லை.
கதிரவனின் கதிர்கள் காலை நேரத்திலேயே உக்கிரமாக வீசியது. பேசாமல் குடிசைக்கே போய் விடலாமா?
தலைப்பில் கண்களை இருட்டியது. கீழே விழுந்து விடுவோமோ எனத் தோன்றியது. தட்டுத் தடுமாறி வரப்பில் நடந்தவளின் தோளில் ஒரு கரம் விழுந்தது. திகைத்துத் திரும்பினாள். புன்முறுவலோடு தங்கதுரை நின்றிருந்தான். அவன் கையில் கதிர் அரிவாள்.‘‘நமக்கு இனி எந்த மிஷினும் வேணாம் புள்ள. மனசுல நம்பிக்கை இருக்கு. கையில உறுதி இருக்கு. நாமெல்லாம் பொறக்கிறப்பயே மிஷினோடயா பொறந்தோம்?’’
‘‘மச்சான்...” ‘‘நீ போயி சூடா கஞ்சி வச்சி கொண்டு வா புள்ள. அதுக்குள்ள அறுப்பை முடிச்சிடுறேன். நீ வந்ததும் அறுத்து முடிச்ச கதிர்களை கட்டுக் கட்டா கட்டி களத்து மேட்டுக்கு கொண்டு போயி கருங்கல்லுல அடிச்சு நெல்ல தனியா பிரிச்சிடலாம். சாயங்காலத்துக்குள்ள எல்லா நெல்லையும் கோணிப்பையில கட்டி மூட்டையாக்கி வீட்டுக்கு எடுத்துப் போயிடலாம்...’’ என்றபடி வயலில் இறங்கினான்.
- மகேஷ்வரன்
|