ஹீரோவா சாதிப்பனானு தெரியலை... ஆனா, நடிகரா முத்திரை பதிப்பேன்!



சொல்கிறார் திண்டுக்கல் லியோனியின் மகன்

‘‘அப்பா ஆக்டிவாக பட்டிமன்றத்தில் இருந்த காலத்தில் என்னை அப்பாவின் டிரைவர்னுதான் பலரும் நினைச்சாங்க. ஆனால், நான் கிட்டத்தட்ட ஆல் ரவுண்டர் மாதிரி இருந்தேன். 
டிரைவராகவும் இருப்பேன், பேச்சாளர் யாராவது வரமுடியல என்றால் அந்த இடத்துக்கு சப்ஸ்டிடியூட் பேச்சாளராக என்னை அப்பா பேசச் சொல்லும்  அளவுக்கு பேச்சாளராகவும் இருந்தேன்...’’ புன்னகைக்கிறார் திண்டுக்கல் லியோனியின் மகனும், நான்கு படங்களின் நடிகரும், இப்போது இரண்டாவது படத்தின் ஹீரோவுமான லியோ சிவக்குமார்.
நான்கு படங்களுக்குப் பிறகு அப்பா திண்டுக்கல் லியோனியின் வார்த்தைகள் என்னவாக இருக்கு?

ஆரம்பத்தில் எல்லா பெற்றோர்கள் மாதிரிதான்அப்பாவும். நான் சினிமா ஆசையை சொன்னதும் ரொம்ப பயந்தார். ‘அது ஒரு பெரிய கடல்... அதில் ஈடேறி வந்திடு
வானா’ என்கிற சந்தேகமும் பயமும் அப்பாவுக்கு இருந்துச்சு. ஆனால், அவர் ஸ்கூலில், கல்லூரியில் படிக்கும் பொழுது பேச்சாளராக வேண்டிய ஆசையில் வீட்டுக்கு தெரியாமல் நிகழ்ச்சிகளில் கலந்துக்குவார். போட்டோக்களில் கூட மறைஞ்சி நிற்பாராம். 

அந்த மாதிரி ஒரு சூழல் எனக்கும் அமைஞ்சிடக் கூடாது என்கிறதிலும் கவனமாய் இருந்தார். அதனால் ‘உனக்கு என்ன தோணுதோ... என்ன ஆசையோ... அதை செய். அந்த முயற்சி சரிப்பட்டு வராதபோது நான் சொல்வதை செய்...’ அப்படின்னு சொல்லிட்டார். இதோ இப்போ நான்கு படங்களில் நடிச்சிட்டேன். அதில் சீனு ராமசாமி சாருடைய இயக்கத்தில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படமும் அடக்கம். 

2023ம் வருடம் வெளியான ‘அழகிய கண்ணே’ படம் மூலமா ஹீரோவாக முதல் படம். தொடர்ந்து இப்போ ரெண்டாவது படத்தில் ஹீரோ. நடிச்சா ஹீரோ... இப்படி எல்லாம் இல்லாமல் நல்ல நடிகனாக நிறைய கதாபாத்திரங்களில் நடிக்கணும். 

அதனால்தான் ராமராஜன் சாருடைய ‘சாமானியன்’ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சேன். அப்பா இப்ப என்னை பெருமையாகப் பார்க்கறார். இதைவிட எனக்கு வேறு என்ன வேணும்... சொல்லுங்க!

அப்பாவைப் போல் பேச்சாளர் அடையாளம் ஏன் வேண்டாம் என முடிவெடுத்தீங்க?

சினிமா, அரசியலில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் வாரிசு சார்ந்த பிரச்னையை முதன்மைப்படுத்தறாங்க. ‘அவனுக்கு என்னப்பா... அப்பா பெரிய பேச்சாளர், அவர் மூலமாகவே சுலபமா இவனும் மேடைக்கு வந்துட்டான்...’ அப்படின்னு சொல்லிடுவாங்க. 

ஆனா, ஒருபோதும் உண்மை அப்படியில்ல. இது சொல்றவங்களுக்கும் தெரியும். ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்லி நம்மை டிஸ்கரேஜ் செய்வாங்க.

யாரா இருந்தாலும் ஓர் இடத்தைப் பிடிக்க அவங்கவங்க உழைப்பு, திறமை வேணும். உட்கார்ந்த இடத்துல எதுவும் யாருக்கும் கிடைச்சிடாது. காலம் காலமா பார்த்தீங்கனா... அப்பா பெயரைச் சொல்லி எந்த மகனும் எந்தத் துறையிலும் நீடிச்சு நிலைச்சதில்லை என்பதைப் பார்க்கலாம். 

சொந்தத் திறமையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் புத்திசாலித்தனமும் இல்லைனா எந்தத் துறையிலும் கால் பதிக்க முடியாது. இதுதான் அப்பட்டமான நிஜம். இப்ப உங்க கேள்விக்கு வர்றேன். சுலபமான இடத்தை நான் பிடிக்கலை. சொல்லப்போனா நிறைய மேடைகளில் பேசியிருக்கேன்.

இலங் கை உள்ளிட்ட சர்வதேச தமிழ் மேடைகளின் பேச்சாளராக நான் இருந்திருக்கேன்; உரை நிகழ்த்தியிருக்கேன். குறிப்பாக இலங்கை மேடையில்தான் பேச்சு மேலே எனக்கு இருந்த ஆர்வம் எனக்கே தெரிந்தது. 

தொடர்ந்து அப்பாவுடன் பயணம், சில இடங்களில் சப்ஸ்டிடியூட் பேச்சாளர், ஹெல்பர்... இப்படி ஆல் ரவுண்டர். ஆனாலும் நான் அப்போ திண்டுக்கல் லியோனியின் மகன் அப்படின்னு எங்கேயும் சொல்லிக்கிட்டதும் இல்லை, யாரும் கேட்டதில்லை. பலரும் சென்னைக்கு வெளியில் அப்பாவை ஒப்பந்தம் செய்யும்பொழுது, தொடர்புக்காக என்னுடைய நம்பரை வாங்குவாங்க. அதை ‘லியோனி டிரைவர்’ இப்படிதான் மொபைலில் பதிவு செய்துக்குவாங்க. 

அதேபோல் யாராவது ஒருவர் வர முடியாத சூழலில் அந்த இடத்தை நிரப்பும் வேலையாக நான் அன்றைய பேச்சாளராக மாறிடுவேன். அதேபோல் நீண்ட தூரம் கார் ஓட்டவும் எனக்குப் பிடிக்கும் என்கிறதால் அப்பா கூட கிளம்பிடுவேன். 

படிப்பை முடிச்சுட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலையிலும் இருந்தேன். ஆனால், ரொம்ப சின்ன வயதில் இருந்தே சினிமா ஆர்வம் அதிகம். அப்படித்தான் நடிக்க ஆரம்பிச்சேன். இப்போ நான்கு படங்களுக்குப் பிறகு அப்பாவுக்கு என்மேல் ஒரு நம்பிக்கை வந்திடுச்சு. அவரே சினிமா விழாக்களில் விரும்பி கலந்துக்கறார்.

‘மாண்புமிகு பறை’?

நான் இரண்டாவதா ஹீரோவா நடிச்சிருக்கும் படம். நம் ஆதிக் குடிகளின் வாழ்க்கை முறையில் பறை இசை எல்லா நிகழ்விலும் இருக்கும். ஏன், எல்லா வேலையும் முடித்து கூட்டமாக உட்கார்ந்து ஆடிப்பாடி மகிழும் இடத்தில் கூட பறை இசைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. 

ஆனால், இன்றைக்கு அந்த நிலை மாறிப் போயிடுச்சு. பறை இசை கேட்டாலே யாரோ இறந்துட்டாங்க அப்படின்னுதான் நமக்குத் தோணுது. அப்படியொரு பறை இசைக் கலைஞர்... அவருடைய வாழ்வியல் ரீதியாகவும், சாதி அடிப்படையிலும் எப்படி இந்த சமூகத்தில் அடையாளப்படுத்தப் படறார், அவங்க வாழ்வியல் இப்போ எப்படி இருக்கு... இதை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கோம். 

இயக்குநர் விஜய் சுகுமாருக்கு இது முதல் படம். ஆனா, அறிமுக இயக்குநர்னு சொல்ல முடியாத அளவுக்கு வேலை செய்திருக்கார். எங்களையும் வேலை வாங்கியிருக்கார். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. 

இந்தப் படத்தில் நான் பறை இசைக் கலைஞராக நடிச்சிருக்கேன். இதற்காகவே ஒரு மாதம் பறை இசைக் கலைஞர்களிடம் முறைப்படி பறை இசைக்க பயிற்சி எடுத்துக்கிட்டேன்.பொதுவாகவே நம் தமிழ் கலாசார ஆதி வாழ்க்கையில் இருக்கும் இசைக்கருவிகள் கூட, இப்ப சாதி அடிப்படையில் பார்க்கப்படுவது ஏன் என்கிற விவாதத்தை இந்தப் படம் உருவாக்கும். 

தேவா சார் இந்தப் படத்துக்கு இசை. அவர் பெயர் பார்த்ததும் உடனே இந்தக் கதையில் நான் இருக்கணும்ன்னு தோணுச்சு. ஒரு சிலர் வேலை செய்யும் படங்களில் சின்ன
கதாபாத்திரத்தில் நடிச்சால்கூட போதும் அப்படின்னு தோணும். அப்படிதான் எனக்கு தேவா சார். பாடல்களும் பேக்ரவுண்ட் இசையும் ரொம்ப நல்லா வந்திருக்கு.
எழுத்து, இயக்கம் இதில் ஆர்வம் உண்டா?

அப்பா மிகப்பெரிய எழுத்தாளர். அவர் கொடுத்த எத்தனையோ புத்தகங்களை படித்துதான் நானும் வளர்ந்தேன். எழுத்தில் ஆர்வம் இருக்கு. நிச்சயம் எழுதுவேன். கதைகள் உருவாக்குவேன். ஆனால், இயக்கம் பெரிய விஷயம். இப்போதைக்கு அதில் காலடி எடுத்து வைக்கும் நோக்கமில்லை. 

‘மாண்புமிகு பறை’ பட ரிலீஸுக்குப் பிறகு அறிமுக இயக்குநர் டர்லா நானி இயக்கத்தில் ‘டெலிவரி பாய்’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிச்சிருக்கேன். காளி வெங்கட் சார், ராதிகா மேடம் அந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க. தற்சமயம் போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் அந்தப் படம் இருக்கு.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்