கோவிலபட்டி பளு...தமிழகத்தின் கெத்து!



சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் மகாராஜன்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் அவரைப் பாராட்ட, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

இந்நிலையில் வெற்றி வாகைசூடி வந்த கையுடன் பஞ்சாப்பின் பாட்டியாலாவிற்கு பயிற்சிக்குச் சென்றுவிட்ட மகாராஜனை போனில் பிடித்தோம். 

‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆரம்பத்துல நான்காவது, ஐந்தாவது இடங்கள்லயே வரமுடிஞ்சது. இப்போ, பல கட்ட பயிற்சிக்குப் பிறகு பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி தருது...’’ என உற்சாகமாகப் புன்னகைக்கும் மகாராஜனுக்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டிதான் சொந்தத ஊர். 

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கோவில்பட்டியில் உள்ள சங்கரலிங்கபுரம். அப்பா ஆறுமுகபாண்டியன் எலக்ட்ரீசியனாக வெளிநாட்டில் வேலை செய்றார். அம்மா முருகலட்சுமி, தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்றாங்க. 

ரெண்டு அக்காக்கள் இருக்காங்க. கஷ்டமான பின்புலத்தில் இருந்துதான் வளர்ந்தேன். பளுதூக்குதலில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆர்வம் வந்தது. ஆரம்பத்துல நண்பர்களுடன் உடலை வலுவேற்ற அருகிலுள்ள பிச்சையா உடற்பயிற்சிக் கழகத்திற்குச் சென்றேன். அப்படியே ஆர்வமாகி பளுதூக்குதல் பயிற்சியில் ஈடுபட்டேன். 
 
அங்க என் பெரியப்பா சுடலைமுத்து இருந்தாங்க. அவங்கதான் என் முதல் பயிற்சியாளர். எப்படி பளுதூக்குதல் செய்யணும், அதில் எப்படி கம்பியைப் பிடிக்கணும்னும் எல்லா நுணுக்கங்களையும் சொல்லித் தந்தாங்க. 

அங்க இரண்டு ஆண்டுகள் பயிற்சி செய்தேன். பிறகு ஹைதராபாத்தில் உள்ள ராணுவத்தின் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கம்பெனி தேர்வில் செலக்ட்டானேன். அப்புறம் அங்கிருந்து என் 15 வயதில் புனேயில் உள்ள ஏஎஸ்ஐனு சொல்லப்படும் ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன். 

ஏஎஸ்ஐயில் ஓராண்டு பயிற்சி செய்தேன். தொடர்ந்து அருணாசலபிரதேசத்தில் தேசிய அளவிலான அண்டர் 18 யூத் விளையாட்டுப் போட்டி நடந்தது. அதில் 55 கிலோ எடைப் பிரிவில் கலந்துக்கிட்டு நான்காவதாக வந்தேன். 

அப்புறம், தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள் நடந்தது. அதிலும் நான்காவதாகவே வரமுடிஞ்சது. இதன்பிறகு தீவிரமாகப் பயிற்சி செய்ய புனேவில் இருந்து பாட்டியாலாவில் என்சிஓஇனு சொல்லப்படுகிற தேசிய சிறப்பு மையத்திற்கு வந்தேன்...’’ என்கிற மகாராஜன் இதனையடுத்தே  பதக்கங்கள் வெல்ல ஆரம்பித்துள்ளார்.   

‘‘2024ம் ஆண்டு பெரு நாட்டின் லிமா நகரில் உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அங்கே நான்காவதாக வந்தேன். ஆனாலும் நம்பிக்கையை இழக்கல. அப்புறம் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி ஃபிஜியில் நடந்தது. இதில் இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றேன். சீனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சேன். 

அடுத்து கத்தாரில் ஆசிய சாம்பியன்ஷிப் போனேன். அதில் ஐந்தாவதாக வந்தேன். அப்புறம், 2025ம் ஆண்டு என் கேட்டகிரியை 60 கிலோவாக மாத்தினேன்.  இப்போ, கஜகஸ்தான் நாட்டில் ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் தங்கப்பதக்கம் வென்றேன். 

அப்புறம், இந்தாண்டு இந்தியாவில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் யூத் மற்றும் ஜூனியர் பிரிவில் இரண்டு தங்கப்பதக்கங்கள் ஜெயிச்சேன். என்னுடைய நம்பிக்கை அதிகரிச்சது. இதனையடுத்தே பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் கலந்துக்கிட்டேன். இதில் ஸ்நாட்ச் (Snatch) பிரிவில் 114 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் (Clean & Jerk) பிரிவில் 142 கிலோவும் தூக்கி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதிச்சேன்.   

அது மறக்கமுடியாத தருணம். இதுக்கு என் அப்பாவும், அம்மாவும் ரொம்ப உறுதுணையாக இருந்தாலும், என்னை நிறைய உற்சாகப்படுத்தினது சித்தப்பா கருத்தபாண்டியும், சித்தி மாரி சங்கரியும்தான்...’’ என மகாராஜன் சொல்ல, அவரின் சித்தப்பா கருத்தபாண்டியிடம் பேசினோம். ‘‘நான் ஜெராக்ஸ் கடை வச்சு நடத்துறேன். ஆரம்பத்துல மகாராஜன் ெதரு பசங்களுடன் விளையாட போனான். நாங்க எல்லோரும் கிரிக்கெட், கில்லி மாதிரி விளையாடுறான்னுதான் நினைச்சிட்டு இருந்தோம். 

ஆனா, ஜிம்மிற்குப் போறான்னு தெரியாது. எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. மூணு பேருமாக சேர்ந்துதான் போவாங்க. ஒருநாள் ஜிம் பயிற்சியாளர், ‘மகாராஜன், ஒருநாள்கூட லீவு போடாமல் தொடர்ச்சியாக வந்திட்டு இருக்கான். அவனுக்கு ஆர்வம் நிறைய இருக்கு. நீ சப்போர்ட் பண்ணு. சிறப்பாக வருவான்’னு சொன்னார். அதன்பிறகே நாங்க சப்போர்ட் செய்தோம். 

அப்புறம், ஹைதராபாத்தில் ராணுவத்தின் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கம்பெனி தேர்வுக்கு இங்கிருந்து 13 பேரை அழைச்சிட்டு போனோம். அதில் மகாராஜன் மட்டுமே தேர்வானான். அப்படியாக அங்கே பயிற்சி செய்தான். தொடர்ந்து ஏஎஸ்ஐ போய், இப்போ பாட்டியாலாவில் பயிற்சி செய்றான்.

மகாராஜன் ஆசிய இளையோர் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்றது அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்குது. நம் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும், கோவில்பட்டிக்கும் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கான்னு நினைக்கிறப்ப ரொம்பப் பெருமையா இருக்கு...’’ என அவர் நெகிழ்ந்து சொல்ல, மகாராஜன் தொடர்ந்தார். 

‘‘அடுத்து 2026ம் ஆண்டு ஜூனியர் வேர்ல்டு சாம்பியன்ஷிப் நடக்க இருக்கு. இப்போ, அதில் பதக்கம் வாங்கணும்னு பயிற்சி செய்திட்டு இருக்கேன். அப்புறம் என்னுடைய எதிர்கால கனவு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லணும் என்பதுதான்...’’ என நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் மகாராஜன்.

பேராச்சி கண்ணன்