காந்தாவும் சாந்தாவும் தனித்தனியா தெரிய ரொம்ப உழைச்சோம்!



சினிமா என்பது கனவு உலகம்! நிகழ்காலமாக இருந்தாலும், கடந்த காலமாக இருந்தாலும் அந்தக் கனவுலகத்துக்கு ரசிகர்களை அழைத்துச் சென்று, மெய்மறக்கச் செய்வதில் கலை இயக்குநர்களுக்கு பெரிய பங்கு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘காந்தா’வில் ரசிகர்களை தமிழ் சினிமாவின் கடந்த காலத்துக்கு அழைத்துச் சென்றவர் கலை இயக்குநர் த.ராமலிங்கம். 
தமிழ் சினிமாவின் முன்னணி கலை இயக்குநரான இவர் ‘பீட்சா’, ‘மெட்ராஸ்’, ‘காலா’, ‘கபாலி,’ ‘சார்பட்டா பரம்பரை’, ‘கர்ணன்’, ‘கேப்டன் மில்லர்’ உட்பட ஏராளமான படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர். லீனா மணிமேகலை இயக்கும் படத்தில் பிசியாக இருந்த த.ராமலிங்கத்திடம் பேசினோம்.

‘காந்தா’ வாய்ப்பு பற்றி?

‘சார்பட்டா பரம்பரை’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற பீரியட் படங்களில் என்னுடைய வேலையைப் பார்த்து வந்த வாய்ப்பு அது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இதற்கு முன் ‘ஹண்ட் வீரப்பன்’ என்ற பயோகிராஃபி பண்ணியிருந்தார். 
அது ஓர் அற்புதமான படைப்பு. அதுமாதிரியான பயோபிக்கை யாரும் எடுத்திருக்கமாட்டார்கள். அழகியலோடும், ஆக்‌ஷனோடும் கலந்து எடுத்திருந்தார். அவருடைய ஒர்க் பிடிச்சிருந்ததால் ஆர்வத்துடன் ‘காந்தா’வில் கமிட் பண்ணினேன்.

‘காந்தா’ படத்துக்காக நீங்கள் உருவாக்கிய செட் பற்றி சொல்ல முடியுமா?

கதையைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்துச்சு. சினிமாவுக்குள் சினிமா என்பதுதான் கதை. தொடக்க கால சினிமாவைக் காண்பிக்கணும். அது எனக்கு ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துச்சு. இப்போது இருக்கிறவர்கள் அந்தக் கால வாழ்க்கையைப் பற்றி சிலாகிப்பதுண்டு. என்னைப்போன்ற கலைஞர்களுக்கு ப்ளாக் அண்ட் ஒயிட் படத்தில் வேலை செய்தால் எப்படியிருக்கும் என்ற உணர்வு வரும். அந்த உணர்வை இந்தப் படம் எனக்கு கொடுத்துச்சு.
ஏனெனில், இந்தப் படத்தைப் பொருத்தவரை சினிமாவுக்கு வெளியே ஆர்ட் டைரக்டராக வேலை செய்வதோடு சினிமாவுக்கு உள்ளேயும் வேலை செய்ய வேண்டும். அதாவது படத்தில் வரும் ‘ஐயா’ என்ற இயக்குநருக்கும் வேலை செய்யணும். படத்துக்கு வெளியே இருக்கும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் சாருக்கும் வேலை செய்யணும். 
படத்தில் ‘சாந்தா’ என்னும் படத்தை இயக்கும் இயக்குநர் ஐயா என்ன மாதிரி படங்கள் செய்வார், அவருடைய படங்களில் ஆர்ட் டைரக்‌ஷன் எப்படியிருக்கும், அவருடைய கிரியேட்டிவிட்டி எப்படியிருக்கும் என்று அவருடைய உளவியலுக்குள்ளேயும் பணிபுரியணும்; வெளியே இருக்கும் ‘காந்தா’ இயக்குநருக்கும் வேலை செய்யணும். அந்தவகையில் ‘சாந்தா’ கால ஆர்ட் டைரக்டர் மனநிலைக்கு என்னைப் பொருத்திக்கொண்டு வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். 

படத்துக்காக நீங்கள் உருவாக்கிய செட்டுகளை வகைப்படுத்த முடியுமா? எங்கு எடுத்தீர்கள்?

படம் முழுவதும் ஐதராபாத்தில் எடுத்தோம். படத்தில் வரும் எல்லாமே செட். ஐயா வீடு கதையில் சில இடங்களில் வரும். அது ஐதராபத்தில் உள்ள சிதிலமடைந்த வீடு. அந்த வீட்டை கதைக்கு ஏற்ப மாற்றி அமைத்தோம். 

எப்போதும் கதை, கேரக்டர் அதன் காலகட்டத்துக்கு ஏற்ப செட் இருக்க வேண்டும். இது பீரி யட் படம் என்பதால் மாடர்ன் உலகத்துக்குரிய எந்த அடையாளமும் உள்ளே வந்துவிடக்கூடாது. அப்படி எல்லாமே பார்த்துப் பார்த்து வேலை செய்தோம். 

துல்கர் சல்மான் மாமனார் பங்களாவை அரண்மனைபோல் பிரம்மாண்டமாக காட்டியிருப்போம். அது அனைத்துமே செட். அவருடைய பிறந்த நாள் விழா நடக்கும் கூடம், உள் அலங்காரப் பொருட்களான இருக்கைகள், விளக்குகள் என அனைத்துமே செட் என்பதோடு தனித்துவமாக உருவாக்கினோம். 

எதையுமே அவசர அவசரமாகச் செய்யாமல் அவகாசம் எடுத்துக்கொண்டு செய்தோம். ஏனெனில், இப்போதுள்ள கோடீஸ்வர் வீட்டை சில நாட்களில் உருவாக்கிவிட முடியும். பழைய காலத்து பங்களா என்று வரும்போது அதை உருவாக்க நிறைய டைம் தேவைப்படும். 

அந்த கோடீஸ்வர் வீட்டில் இருக்கும் சாண்ட்லியர் விளக்கு மட்டுமே ஏழு லட்சம் ரூபாய். அதை பல இடங்களில் தரவு எடுத்து மும்பையில் இருந்து கொண்டு வந்தோம். 

அதேபோல் செட்டில் உள்ள  அனைத்து பழங்காலத்து விளக்குகளுமே மும்பையில் இருந்து கொண்டு வந்தோம். தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்களை குஜராத்தில் பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்து வாங்கினோம்.படத்தில் ஸ்டூடியோ செட்  பிரம்மாண்டமாக காண்பித்திருந்தார்கள். 

அதை உருவாக்க எவ்வளவு நாட்கள் ஆச்சு?

அதற்கு மட்டுமே நாற்பது முதல் ஐம்பது நாட்களாச்சு. ஆர்க்கிடெக்ட் உடன் சேர்ந்து உருவாக்கினோம். அந்த ஸ்டூடியோவுக்குள் இருக்கும் ஜன்னல், கதவுகள், மேசை, நாற்காலிகள் என அனைத்துப் பொருட்களும் நாங்களே டிசைன் பண்ணி மரத்தில் உருவாக்கினோம். எதுவுமே ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்,பிளாஸ்டிக் ஒர்க் இல்லை.

கதைக்காக உங்கள் ஆய்வுகள், பயணம் பற்றி சொல்ல முடியுமா?

கதையைக் கேட்டதும் அதற்கான இடங்களைத் தேடிச்செல்வதுண்டு. அப்படி கலை இயக்குநராக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளேன். ஒரு லொகேஷனைப் பார்க்கும்போது அந்த நிலப்பரப்பு மனசுக்குள் அப்படியே இருக்கும். தேடிச் சென்ற இடம் அப்போது பயன்படவில்லை என்றாலும் அடுத்த படத்துக்கு பொருத்தமாக இருக்கும். அப்படி பல படங்களுக்கு அமைந்துள்ளது. 

‘காந்தா’வை பொறுத்தவரை வெளிப்புறம் தேவைப்படவில்லை. எல்லாமே ஸ்டூடியோவுக்குள் படமாக்கப்பட வேண்டும். ஏன் ஸ்டூடியோவில் என்றால் வெளிப்புறக் காட்சியாக இருந்தாலும் ஸ்டூடியோவுக்குள்தான் ஷூட் பண்ண வேண்டும். ஏனெனில் அந்தக் காலத்தில் எல்லாமே ஸ்டூடியோவுக்குள்தான் படமாக்கினார்கள்.

தெரு செட் போடுவதாக இருந்தாலும் வெளிப்புறங்களில் செட் போடமாட்டார்கள். அதையும் ஸ்டூடியோவுக்குள்தான் செட் போடுவார்கள். அப்படி இந்தப் படத்துக்கு இண்டீரியர் தேவை அதிகமாக இருந்துச்சு. மற்றபடி ஒவ்வொரு படத்துக்கும் பல ஆய்வுகள் செய்து சொந்தமாக டிசைன்களை உருவாக்கியிருக்கிறேன்.

நீங்கள் செய்த படங்களில் சவாலாக அமைந்த படம் எது?

‘கேப்டன் மில்லர்’. அந்தப் படத்துக்காக இரும்பு அடித்தளம் அமைத்து கோயில் செட் உருவாக்கினோம். ஆனால், படம் வெற்றியடையாததால் என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இங்கு ஒரு படம் ஓடினால்தான் அதில் வேலை செய்த கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. 

அது தவறான பார்வை. என்னைப் போன்ற கலைஞர்கள் கடுமையாக உழைக்கிறோம். படம் ஓடவில்லை என்றால் கதை, இயக்கம், ரிலீஸ் போன்றவைகளில் குறைபாடு இருந்திருக்கலாம். ஆனால், டெக்னீஷியன்கள் எவ்வளவு திறமையாக வேலை செய்திருந்தாலும் அது கவனிக்கப்படுவதில்லை. படம் வெற்றியடைந்தால்தான் டெக்னீஷியன்ஸ் பேசப்படுவார்கள் என்ற பார்வை மாறவேண்டும்.

உங்கள் பார்வையில் சிறந்த ஆர்ட் டைரக்‌ஷனுக்கான இலக்கணமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

ஃபிரேம்ல பட்ஜெட் தெரிந்தால்தான் ஆர்ட் டைரக்டர் சரியாக வேலை செய்திருக்கிறார் என்றில்லை. ஃபிரேமுக்கு தேவையானதைச் செய்தால் போதும். ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக பெரிய வில்லேஜ் செட் போட்டோம். 

அதற்கு இரண்டரைக் கோடி செலவு பிடித்தது. ஆனால், அந்தக் கிராமத்தை பிரமாண்டமாக காட்டியிருக்க மாட்டார்கள். அப்போது கலைஞர்களின் உழைப்பு, பட்ஜெட் தெரியாமல் போய்விடும். கதைக்கு என்ன தேவையோ அதை செய்வதும் அதற்கு ஏற்ப செலவழிப்பதும்தான் சிறந்த ஆர்ட் டைரக்‌ஷனுக்கான இலக்கணமாக இருக்கும்.

ஆர்ட் டைரக்‌ஷனில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது?

செட் ஃபினிஷிங் ஸ்டேஜ். உதாரணத்துக்கு, கோயில் செட் போடுகிறோம் என்றால் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் கல் போன்று சிலை உருவாக்கியிருப்போம். கல் என்று வரும்போது அது சாம்பல் நிறத்தில் மட்டும் இருக்காது. 

அதை கூர்ந்து கவனிக்கும்போது பச்சை, கருப்பு என பல வண்ணங்கள் கலந்திருக்கும். பழமைத்தன்மையோடு வண்ணம் சேர்த்து சுண்ணாம்புக் கலவையைக் கலந்து பெயிண்டிங்போல் ஃபினிஷ் பண்ணுவது பிடிக்கும். அதாவது புதுசாக இருப்பதை நம்பும் விதத்தில் பழமையாகக் காட்டுவது பிடிக்கும்.  

இதுவரை வேலை செய்த படங்களில் மனசுக்கு நெருக்கமான செட் எது?

‘காலா’. அந்தப் படத்துக்காக தாராவி செட் போட்டோம். அது உண்மைக்கு அருகில் இருக்கும். 90 சதவீதம் சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. என் கரியரில் அதை சாதனை என்று சொல்வேன்.

எஸ்.ராஜா