உலகின் ஆபத்தான நாடுகளில் முதல் 10 இடத்தில் இந்தியா இருக்கிறது!



டொமினிகா, ஹொண்டுராஸ், பஹாமாஸ் என்ற நாடுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த நாடுகளோடு இந்தியாவையும் சேர்த்தால் எப்படி இருக்கும்?

ஆனால், சேர்த்திருக்கிறது அண்மையில் வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வு.காலநிலை மாற்றத்துக்கான உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. 
இந்த மாநாட்டில் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதை தயாரித்தது ‘ஜெர்மன் வாட்ச்’ எனும் ஒரு தன்னார்வ அமைப்பு. இந்த அறிக்கையின் பெயர் ‘க்ளைமேட் ரிஸ்க் இண்டக்ஸ்’. தமிழில் சொன்னால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துக்கான குறியீடுகள். 

ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என இந்தியா நினைத்தால் அது தவறு என புள்ளிவிபரங்களுடன் பொட்டில் அறைந்திருக்கிறது. முதல் 10 இடத்தை பிடித்து மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பது பல சிறிய நாடுகள்தான். அதில் இந்தியாவும் இருப்பதுதான் அதிர்ச்சி, ஆச்சரியம்.  உதாரணமாக முதல் மோசமான நாடு டொமினிகா என்றால் அடுத்தடுத்து வரும் நாடுகள் கொஞ்சம் தேவலாம் எனலாம். அப்படி பார்க்கும்போது இந்தியா இந்தப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. 

‘டொமினிகா, மியான்மார், ஹொண்டுராஸ், லிபியா, ஹைத்தி, கிரனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா, இந்தியா மற்றும் பஹாமாஸ்’ ஆகியவையே மிக மிக ஆபத்தான முதல் பத்து நாடுகள். சரி... இதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் எந்த இடத்தில் இருக்கின்றன?

முதல் 30 இடங்களுக்குள்தான் அவை இருக்கின்றன. உதாரணமாக 11வது இடம் சீனா. ஃபிரான்ஸ் 12. இத்தாலி 16. அமெரிக்கா 18வது இடம். 
சரி... இந்தியா பற்றி என்ன சொல்கிறது இந்த ஆய்வு?

பொதுவாக இந்த ஆய்வு உலகளவில் ஏற்படும் தீவிர காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைக் கணிக்கிறது. தீவிர காலநிலை என்றால் புயல், வெள்ளம், வறட்சி மற்றும் வெப்ப அலையை சொல்லலாம். அதுமாதிரி இந்த விளைவுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் அளக்கிறது இந்த அமைப்பு. அவை: பொருளாதார பாதிப்பு, இறப்பு மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை. இதில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது?

‘இந்தியா 2024ம் ஆண்டு பட்டியலில் 15வது இடத்தில் இருந்தது. 2025ல் 9வது இடத்துக்கு வந்திருக்கிறது. 2025 என்றால் அது 2024க்கான அறிக்கை. 2024 என்றால் அது 2023க்கான அறிக்கை என்பதை நினைவில் கொள்க.இந்த அறிக்கை உலகநாடுகளில் கடந்த 30 வருடத்தில் என்ன விளைவுகள் ஏற்பட்டன என கணித்திருப்பதால்  இந்தியா வில் இந்த ஆண்டுகளில் என்ன நிகழ்ந்தது எனப் பார்ப்போம்.

‘இந்த 30 வருடத்தில் சுமார் 430 தீவிர காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த 30 வருடத்தில் இந்த நிகழ்வுகளால் இந்தியாவில் சுமார் 80 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். 130 கோடிப் பேர் பாதிப்படைந்திருக்கிறார்கள். 170 பில்லியன் டாலர் மதிப்பில் பொருளாதார சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

அதாவது ஒரு வருடத்துக்கு 5.6 பில்லியன் டாலர் என்ற அளவில்...’சரி... தீவிர காலநிலை மாற்றத்திலும் எந்த வகையான நிகழ்வுகள் இந்தியாவை சேதாரப்படுத்தியிருக்கிறது?

‘புயலும், வெள்ளமும் பொருளாதார இழப்பில் 58 சதவீதத்தைப் பிடிக்கிறது. வெப்பமும், புயலும் இறப்பில் 2/3 மடங்கைப் பிடிக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர நிகழ்வுகளில் வெள்ளம்தான் பாதிப்பேரை பாதிக்கிறது...’ என்று சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

இதனால் ஏற்படும் பெரிய பாதிப்புகள் என்ன?

‘வறுமையும், இடப்பெயர்ச்சியும்தான்’ எனச் சொல்கிறது ஆய்வு. பாதிப்புக்குப் பிறகு அரசு உதவிக்கு முன்வருவதைவிட இந்தத் தீவிர நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதில் நாடுகள் கவனம் செலுத்தாதவரை இந்த நிகழ்வுகள் தொடரும் என்றே ஆய்வு எச்சரிக்கிறது.

டி.ரஞ்சித்