3800 குழந்தைகளுக்கு ஹார்ட் ஆபரேஷன் செய்த இந்தியப் பாடகி!



இந்தியா முழுவதும் இதயம் பாதிப்படைந்த 3,800 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிக் கொடுத்து, கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் பாடகி பலக் முச்சல். 

ஆம்; உலக வரலாற்றில் யாரும் இவ்வளவு குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிக் கொடுத்ததில்லை. 
‘எம்.எஸ்.தோனி’, ‘ஏக் தா டைகர்’, ‘கிக்’ உள்ளிட்ட புகழ்பெற்ற பல பாலிவுட் படங்களின் பாடல்களைப் பாடியவர் முச்சல். இப்போது இவரது வயது33. மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பிறந்தவர் பலக் முச்சல். நான்கு வயதாக இருந்தபோதே, இளம் பாடகர்களுக்கான இசைக்குழுவில் சேர்ந்து பாட ஆரம்பித்துவிட்டார். 

1999ல் நடந்த கார்கில் போரின்போது முச்சலுக்கு வயது 7. அப்போதே அவர் வாழ்ந்து வந்த நகரத்தில் இருந்த முக்கியமான கடைகளில் இந்திப் பாடல்களைப் பாடி, நிதி திரட்டினார். தொடர்ந்து ஒரு வாரம் இசை நிகழ்ச்சி நடத்தியதில் 25 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. 25 வருடங்களுக்கு முன்பு 25 ஆயிரம் என்பது பெரிய தொகை. இந்த தொகையை கார்கில் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக அளித்தார். 
முச்சலின் தன்னலமற்ற இந்தச் செயல் நாடு முழுவதும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இதே வருடத்தில் ஒடிசா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதி திரட்டி உதவி செய்தார். 
முச்சலுக்கு 8 வயதாக இருந்தபோது, ஒரு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த ரயிலில் பல குழந்தைகள் உணவுக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார். 
இந்த துயர நிகழ்வு முச்சலின் மனதை வெகுவாகப் பாதித்தது. தனக்கு இருக்கும் இனிமையான குரல் வளத்தை மற்றவர்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். முச்சலின் இந்த தீர்மானத்துக்கு அவரது பெற்றோரும் பக்கபலமாக இருந்தனர். 

இந்நிலையில் இந்தூரில் உள்ள நிதி பால் வினய் மந்திர் எனும் பள்ளியில் படித்து வந்த லோகேஷ் என்ற மாணவன் இதயப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தான். உடனடியாக அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், அறுவை சிகிச்சைக்கான செலவைச் சமாளிக்கும் அளவில் லோகேஷின் தந்தையில்லை. அதே நேரத்தில் அறுவை சிகிச்சையைத் தாமதித்தால் லோகேஷின் உயிருக்கே ஆபத்து. 

நிதி பால் வினய் மந்திரின் ஆசிரியர்கள் முச்சலையும், அவரது பெற்றோரையும் சந்தித்து லோகேஷின் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்ட ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தித் தரும்படி கேட்டனர். 

முச்சலின் பெற்றோரின் முழு சம்மதத்துடன் மார்ச் 2000ல் இசை நிகழ்ச்சி நடந்தது. தெருவில் கடை நடத்துபவரின் தள்ளுவண்டியையே மேடையாக மாற்றி, இசை நிகழ்ச்சியை நடத்தினார் முச்சல். 51 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டது. 

இந்நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி, இந்தியா முழுவதும் பிரபலமானார் முச்சல். குறிப்பாக பெங்களூருவைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டியின் காதுக்கும் முச்சலின் பெயர் எட்டியது. அவர் லோகேஷுக்கு இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தார். 

இந்நிகழ்வுக்குப் பிறகு முச்சலின் பெற்றோர், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தனர். வருடம் முழுவதும் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி, 2.25 லட்ச ரூபாயைத் திரட்டினார் முச்சல். இந்தத் தொகை ஐந்து குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டது. 

முச்சலின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பல மருத்துவர்கள் குறைந்த கட்டணத்தில் இதய அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தனர். குறிப்பாக இந்தூரில் உள்ள ஒரு மருத்துவமனை முச்சல் மூலமாக இதய அறுவை சிகிச்சை செய்யும் குழந்தைகளுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி அளித்தது. 

இரண்டாயிரத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ‘Save Little Hearts’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினார். மட்டுமல்ல; வெளிநாடுகளுக்குச் சென்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினார். முச்சலுடன் அவரது தம்பி பலாஷும் இணைந்துகொண்டார். 

சிறுநீரகப் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினார் பலாஷ். அக்காவும், தம்பியும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி, நிதி திரட்டினார்கள். 

ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் குறைந்தபட்சம் 40 பாடல்களைப் பாடினார் முச்சல். இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, ஒடியா, ராஜஸ்தானி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என 17 மொழிகளில் பாடக்கூடிய திறமை வாய்ந்தவர் முச்சல் என்பது குறிப்பிடத்தக்கது. 

தவிர, 2001ல் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 10 லட்சம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தார். 2003ல் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வயதுப் பெண் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டிக் கொடுத்து, பாகிஸ்தானியர்களின் மனதையும் கவர்ந்தார். 

இதற்குப் பிறகு, ‘பலக் முச்சல் ஹார்ட் ஃபவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி, முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தார். 2006ல் மட்டும் 1.2 கோடிகளைத் திரட்டி, 234 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவினார் முச்சல். 2009ல் 1,460 இசை நிகழ்ச்சிகளை நடத்தி, 1.71 கோடி ரூபாயைத் திரட்டி, 338 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவினார். 

2011ல் பாலிவுட்டில் பின்னணிப் பாடகியாக நுழைந்தார் முச்சல். இருந்தாலும் தனது சேவையை அவர் நிறுத்தவில்லை. 2015ம் ஆண்டு வரைக்கும் 800 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியிருந்தார். 2020ம் வருடம் அக்டோபர் வரையில் 2,200 குழந்தைகளுக்கும், 2024ம் வருடம் மார்ச் வரையில் 2,986 குழந்தைகளுக்கும் உதவியிருக்கிறார். இப்போது முச்சல் உதவிய குழந்தைகளின் எண்ணிக்கை 3,800 ஆக உயர்ந்துவிட்டது. 

முச்சலின் சேவை தொடர்கிறது.இப்போது இதய அறுவை சிகிச்சை நடக்கும்போது அரங்கினுள் நுழைந்து பார்வையிட முச்சலை மருத்துவர்கள் அனுமதிக்கின்றனர். அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அணியும் பிரத்யேகமான சீருடையை அணிந்து முச்சலும் செல்கிறார். அறுவை சிகிச்சை ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை அரங்கிலே அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்