சாலை விபத்துக்கு ஒன்றிய அரசுதான் காரணம்!
‘வேகம் விவேகமல்ல’... ‘ஸ்பீட் கில்ஸ்’... என எல்லா சாலைகளிலும் அரசு கொட்டை எழுத்துக்களில் போர்டு வைத்திருக்கும். ஆனால். அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் 2023ம் ஆண்டுக்கான புள்ளிவிபரம், சாலை விபத்தில் இறப்பவர்களில் அதிகமானோர், ஓவர் ஸ்பீடால் மரணமடைவதாகச் சொல்கிறது. ஒன்றிய அரசின் குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சாலை விபத்துக்கள் தொடர்பானது. அதிலும் 2023ம் ஆண்டில் நம் சாலைகளில் எத்தனை விபத்துக்கள், அதற்கான காரணம், இறந்தவர்கள், ஊனமுற்றவர்கள் என ஏகப்பட்ட புள்ளிவிபரத்தை அது வெளியிட்டிருக்கிறது.
‘அந்த ஆண்டில் மட்டும் சுமார் 4 லட்சத்து 64 ஆயிரத்து 29 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் இறந்தவர்கள் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர். 2005ம் ஆண்டிலிருந்து சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது என்றாலும் விபத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2022ம் ஆண்டை விட 1.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
சாலை விபத்து மரணங்களுக்கு முதன்மைக் காரணம், வேகம். அதிலும் ஓவர் ஸ்பீட். இதற்கடுத்தே கவனக்குறைவு மற்றும் தவறான திசையில் செல்வது ஆகியவை வருகின்றன...’ என்று சொல்லும் அறிக்கை, மேலும் சில விவரங்களை விவரிக்கிறது. ‘மொத்த இறப்பில் 45 சதவீதம் இருசக்கர வாகனத்தால் நிகழ்பவையே. பாதசாரிகள் இறந்தது 15 சதவீதம்; கார், ஜீப் விபத்தால் இறப்பு 14 சதவீதம். 2022ம் ஆண்டு கணக்குப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம். ஆனால், இதில் பாதி - அதாவது 50 ஆயிரம் பேர் மரணத்தை தழுவினார்கள்’ என ஒரு அச்சமூட்டும் எண்ணிக்கையை குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்தியாவில் டி.பி, மலேரியா போன்றவற்றால் இறப்பவர்களைவிட சாலை விபத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டுகிறது. உதாரணமாக சாலை விபத்துக்களால் இந்தியாவில் இறப்போரின் சதவீதம் மட்டும் சுமார் 2.9 என்கிறது. இந்த அறிக்கையில் நெடுஞ்சாலை மரணம், பாதசாரிகள் மரணம் எல்லாம் விண்ணைத் தாண்டி இருக்க போக்குரத்து தொடர்பான ஆய்வாளரான அச்சுதனிடம் பேசினோம்.
‘‘இந்த அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்கள் பற்றிய புள்ளிவிபரம் அதிர்ச்சியாக இருந்தாலும் இதற்கான காரணமாக குற்ற ஆவணக் காப்பகம் சொல்வது உண்மையில் முழுப் பிரச்னையையும் மூடி மறைக்கிறது. சாலை விபத்து என்பது வெறும் இரண்டு பேருக்கிடையே நடப்பதல்ல. அப்படி நாம் புரிந்துகொண்டால் அது தப்பு. சாலை வடிவமைப்பும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.
இந்தியாவில் ஒரு சாலை எப்படி இருக்கவேண்டும் எனும் விதி ‘இண்டியன் ரோட்ஸ் காங்கிரஸ்’ எனும் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்று ஒரு நெடுஞ்சாலையை அமைப்பவர்கள் சாலைகளை வாகன ஓட்டிகளுக்காக மட்டுமே வடிவமைப்பு செய்கிறார்கள்.
வாகனங்கள் வேகமாகப் போகவேண்டும் எனும் ஒரே நோக்கத்துக்காக மட்டுமே நெடுஞ்சாலைகளை அமைக்கிறார்கள். ஆனால், ‘இண்டியன் ரோடு காங்கிரஸ்’ விதிப்படி ஒரு சாலை என்றால் பொதுமக்கள் இலகுவாகக் கடக்கவேண்டும், மக்கள் இலகுவாக இயங்கவேண்டும் என்பதற்காகவும் பல்வேறு முறைமைகளை வகுத்திருக்கிறது. உதாரணமாக, சாலையை கடப்பற்கான சீப்ரா க்ராசிங், சாலையின் வடிவமைப்பை சொல்லும் குறியீடுகள் மற்றும் பாதசாரிகள் நடந்துபோவதற்கான பாதை எல்லாம் இந்த காங்கிரஸ் விதியில் இருக்கிறது...’’ என்று சொல்லும் அச்சுதன், 2023ம் ஆண்டு அறிக்கையில் பாதசாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக இருக்கும் விவரத்தைப் பற்றியும் பேசினார்.
‘‘சாலை விபத்தில் இறந்தவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதசாரிகள் என அறிக்கை சொல்கிறது. இது உண்மையிலேயே அவலமானது. ஒரு சாலை விபத்தில் ஒரு பாதசாரிக்கு எப்படி பங்கு இருக்கும்? பாதசாரிகள் இந்த விபத்துக்களில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதும் சாலை வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறாகவே நாம் புரிந்துகொள்ளவேண்டும். உதாரணமாக, பாதசாரிகள் நடப்பதற்காக சுமார் 1.8 மீட்டர் நடைபாதையாவது இருக்கவேண்டும் என ‘இண்டியன் ரோடு காங்கிரஸ்’ விதி சொல்கிறது.
ஆனால், நெடுஞ்சாலைகளில் சரியான நடைபாதைகள் இருக்கிறதா? 1.8 மீட்டர் நடைபாதை என்றால் சுமார் இரண்டு பேர் தாராளமாக நடக்கலாம். இதற்கு மாறாக சாலைகளை வாகனங்களுக்காக மட்டுமே அமைப்பதால்தான் இவ்வளவு பாதசாரிகள் விபத்தில் பலியாகிறார்கள்.நெடுஞ்சாலைகளை அடுத்து நகர சாலைகளில்தான் அதிகம் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுவும் சாலை வடிவமைப்பில் உள்ள கோளாறால்தான் ஏற்படுகிறது.
முதலில் சாலைகள் பற்றிய வடிவமைப்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும். பிறகு சாலை விதிகளை மீறுபவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். இதற்கான அபராதங்களை டோல்கேட்டில்கூட வசூலிக்கும் முறையை அமல்படுத்தலாம். டிராஃபிக் போலீஸ் பற்றாக்குறையால்தான் மீறுபவர்களைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. இது எல்லாம் சரியாகும்போதுதான் நம்மால் சாலை விபத்துக்களிலிருந்து மீளமுடியும்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் அச்சுதன்.
டி.ரஞ்சித்
|