பாழடைந்த பள்ளி... மாணவர்களே இல்லாத ஸ்கூல்... உத்தரப்பிரதேச மாநில கிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய டீச்சர்!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமம். பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு அந்தக் குக்கிராமத்தில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிக்குச் சேர்ந்தார், சங்கீதா மௌரியா. சவால்கள் நிறைந்த ஆசிரியர் பணிக்கான தேர்வில் வெற்றியடைந்து, நல்ல வசதியான வகுப்பறை, படிப்பில் ஆர்வமுடைய மாணவர்கள் இருப்பார்கள் என்ற கற்பனையுடன் ஆசிரியைப் பணிக்குச் சேர்ந்தார்.
 ஆனால், அவர் கற்பனைக்கு எதிர்மறையாக எல்லாமே இருந்தன. பணிக்குச் சேர்ந்த முதல் நாளே உடைந்து, அழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார், சங்கீதா. ஆம்; சங்கீதா ஆசிரியையாகப் பணிபுரிவதற்கு நியமிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்திருந்தது. மாணவர்கள் அமரும் இருக்கைகள் உடைந்து கிடந்தன. முக்கியமான வகுப்பறைகள் முழுவதும் தூசு படிந்து கிடந்தது. மாணவர்கள் யாரும் இல்லை.
இங்கேதான் தனது ஆசிரியைப் பணி ஆரம்பிக்கப் போகிறதா என்று ஒருவித குழப்பத்துடனே பணியைத் தொடங்கினார். ஆனால், இன்று அந்தப் பள்ளியின் நிலையே வேறு. ‘‘நான் இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து இருக்கவில்லை என்றால், ஆசிரியைப் பணிக்கான உண்மையான அர்த்தத்தைக் கற்றுக்கொண்டிருக்க மாட்டேன்...’’ என்கிற சங்கீதா, சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்திப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார்.
இப்போது பள்ளியில் மூன்று ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். மூன்று பேரும் அனைத்துப் பாடங்களையும் நடத்துகின்றனர். ‘‘கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் இல்லை. நீங்கள் எல்லா பாடங்களிலும் நிபுணத்துவம் பெறவில்லை என்றாலும், பாடங்களைக் கற்றுக்கொண்டு நடத்த வேண்டும்.
ஆசிரியைப் பணியைத் தாண்டி ஆலோசகராகவும், நண்பராகவும், சில சமயம் ஒரு நர்ஸ் போலவும், அம்மாவைப் போலவும் இருக்க வேண்டும்...’’ என்ற சங்கீதா, எப்படி மாணவர்களைத் திரும்பவும் பள்ளிக்குக் கொண்டு வந்தார் என்பதையும் பகிர்ந்தார்.
‘‘பணிக்குச் சேர்ந்த நாட்களில் அதிகபட்சமாக 30 மாணவர்கள்தான் தினமும் பள்ளிக்கு வந்தனர். ஆனால், பதிவேட்டில் 130 மாணவர்களின் பெயர்கள் இருந்தன. 100 மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர் என்று தெரியவந்தது. இது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மாணவர்கள் வருவார்கள் என்று பள்ளியிலேயே காத்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. பள்ளி முடிந்தபிறகு பாதியிலே படிப்பை விட்ட மாணவர்களின் வீட்டுக்குச் சென்றேன். ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகளை ஏன் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பது குறித்தும் விரிவாகப் பேசினேன். அவர்களின் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் ஒரு விஷயம் எனக்குத் தெரிய வந்தது. படிப்பை விட்ட மாணவர்கள் சின்னச் சின்ன வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர். கிடைத்த வருமானத்தை புகைபிடிப்பது உள்ளிட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். இது மேலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...’’ என்றவர் சிறிது இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார். ‘‘குழந்தைகள் மிகப்பெரிய போராட்டத்தில் இருக்கிறார்கள்; அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வையுங்கள் என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் கெஞ்சினேன். குறைந்தபட்சம் ஒரு நாளைக்காவது பள்ளிக்கு அனுப்புங்கள் என்று மன்றாடினேன்.
அவர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் வரையில் திரும்பத் திரும்ப அவர்களது வீடுகளுக்குச் சென்று முறையிட்டேன்...’’ என்கிற சங்கீதாவின் ஒரு மாத தொடர் போராட்டத்துக்குப் பிறகு, ‘‘மாணவர்களின் வருகை 100 ஆக உயர்ந்தது...’’ என்கிற சங்கீதாவின் வெற்றி சாதாரணமானது இல்லை.
குழந்தைத் தொழிலாளர்கள் எனும் கொடூரத்திலிருந்து அந்த மாணவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்; ஆம்; சங்கீதா மட்டும் அந்த மாணவர்களின் வீடுகளுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகவே தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பார்கள். மாணவர்களைப் பள்ளிக்கு வரவைத்தவுடன் எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடவில்லை. 100 மாணவர்களையும் தக்க வைக்கவேண்டும் என்ற சவால் அவர்முன் வந்து நின்றது. இந்தச் சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார் சங்கீதா.ஆம்; காலை 8 மணிக்கே பள்ளிக்கு வந்துவிடுவார், சங்கீதா. பள்ளியின் நுழைவாயிலில் நின்று வெறுங்காலுடன் நடந்து வரும் ஒவ்வொரு மாணவ, மாணவியையும் வரவேற்பார்.
வகுப்பறையில் வழக்கமான பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடங்களை சுவாரஸ்யமான கதையைப் போல மாணவர்களிடம் சொல்வார். மாணவர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் பாடம் நடத்துவார். இதுபோக கதைகளைச் சொல்வார், பாடலகளைப் பாடுவார், புதுப்புது விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவார்.
‘‘சும்மா உட்கார்ந்து, பாடத்தைக் கேட்பதில் குழந்தைகளுக்கு உடன்பாடில்லை. நான் கதைகளைச் சொல்லும்போதோ அல்லது பாடும்போதோ அவர்கள் மிகுந்த உற்சாகமாகிவிட்டனர். விடுகதை, புதிர், விளையாட்டு மாதிரி ஏதாவது ஒன்றில் அவர்களை பங்குபெற வைத்தேன். எல்லோரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
டீச்சராக, டாக்டராக, போலீஸாக நடித்துக் காட்டி அசத்தினேன். வகுப்பறையில் சிரிப்புச் சத்தமும், உற்சாகமும் நிறைந்தது. விளையாட்டு மூலமாகவும் நிறைய அவர்கள் கற்றுக்கொண்டனர். ‘தினமும் இப்படி நடக்குமா’ என்று ஆர்வத்துடன் கேட்டனர். நான் ‘ஆமாம்’ என்று சொன்னவுடன், எல்லோருமே சேர்ந்து கைதட்டினார்கள்.
அதற்குப் பிறகு மாணவர்களின் வருகை குறையவில்லை...’’ என்கிற சங்கீதாவிடம், ‘‘நானும் உங்களைப் போல ஒரு டீச்சராக வேண்டும்...’’ என்று ஒரு குழந்தை சொல்லியிருக்கிறது. இதைத்தான் தனக்குக் கிடைத்த பெரும் பாராட்டாக கருதுகிறார் சங்கீதா. ஆசிரியைப் பணியையும் பார்த்து, குடும்பத்தையும் கவனித்து வருகிறார், சங்கீதா. ஆம்; அவருக்குத் திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தினமும் அவரது பள்ளி நேரம் மதியம் 2 மணிக்கு முடிந்துவிடும். ஆனால், உடனே வீட்டுக்குத் திரும்ப மாட்டார். அடுத்த நாள் வகுப்பறையில் என்ன செய்யப்போகிறோம் என்பதைத் திட்டமிடுவார், பள்ளிக்கு விடுப்பு எடுத்த குழந்தைகளின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பார்.
எல்லாம் முடிந்த பிறகுதான் வீட்டுக்குச் செல்வார். பள்ளி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையிலும் பார்த்துக்கொள்கிறார். ‘‘நான் என் ஆசிரியைப் பணியை ஆரம்பிக்கும்போது இந்த வகுப்பறை காலியாக இருந்தது. இப்போது மாணவர்களின் சிரிப்பொலி வகுப்பறையில் எதிரொலிக்கிறது.இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது...’’ என்று உற்சாகத்துடன் முடித்தார் சங்கீதா.
த.சக்திவேல்
|