பாடலுக்கான MOOD புரிஞ்சு கீ போர்டில் கையை வெச்சு, வாய்க்கு வந்ததை கத்துவேன்...
தமிழ்த்திரை இசையில் மெலோடி, புதுமை கலந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. ‘தெகிடி’ படத்தின் மூலமாக அறிமுகமான அவர் ‘சேதுபதி’ முதல் ‘பன் பட்டர் ஜாம்’ வரை பல படங்களில் தனக்கென ஒரு தனித்துவமான மியூசிக்கை உருவாக்கியவர். இப்போது ‘பைசன்’ படத்துக்கு இசையமைத்ததன் வழியாக லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
 இசையை ஒரு அனுபவமாக உணர்ந்து, ஒவ்வொரு பாடலிலும் புதிய உணர்வைத் தேடுபவர் அவர். தனது இசைப் பயணத்தையும், படைப்பாக்கத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் நிவாஸ்.திருநெல்வேலி பின்புலம் உங்கள் இசை ஆர்வத்தை எப்படி பாதித்தது?
 பள்ளி நாட்களில் நிறையப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியதைப் பார்த்து பலர் என் அம்மாவிடம் ‘உங்க பையன் மியூசிக்ல ஆர்வமாக இருக்கிறான்’ என்று சொன்னார்கள். ப்ளஸ் டூ முடிச்சதும் என்னுடைய கனவை அடைய சென்னைக்கு வந்தேன். சான்ஸ் தேடும் படலத்தில் கிடைத்த வாய்ப்புதான் ‘தெகிடி’.
அடிப்படையில் நீங்கள் விஸ்காம் ஸ்டூடண்ட். அந்தக் கல்வி உங்கள் இசை உருவாக்கத்தில் எவ்வாறு உதவுகிறது?
மீடியா சார்ந்த படிப்பு என்பதால் பயனுள்ளதாக இருந்துச்சு. எந்தக் காலத்திலும் மியூசிக் என்னுடைய ஃபோகஸாக இருந்துச்சு. என்னுடைய குருநாதர் மித்ரன். அவர்தான் முதன் முதலில் கையைப் பிடிச்சு மியூசிக் சொல்லிக்கொடுத்தார். டேவிட் தாமஸ் சார் பியானோ சொல்லிக்கொடுத்தார். ராஜேஷ் வைத்யா சாரிடம் சில சங்கீத நுணுக்கம் கத்துக்கிட்டேன். இசையில் அவர்தான் என்னுடைய குருநாதர்.
திரைப்படங்களுக்கு முன் குறும் படங்களும், சுயாதீன பாடல்களும் செய்தீர்கள். அந்த அனுபவம் எவ்வளவு முக்கியம்?
அதை சினிமாவுக்கு வருவதற்கான வழியாகப் பார்க்கிறேன். ஷார்ட் ஃபிலிம், ஆல்பம் ஒர்க்தான் சினிமா வாய்ப்புக்கான கதவுகள்.
உங்கள் முதல் படம் ‘தெகிடி’. அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
அந்த வாய்ப்பு கிடைக்க ‘திங்க் மியூசிக்’ சந்தோஷ் முக்கிய காரணம். அவர்தான் தயாரிப்பாளர் சி.வி.குமார் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மற்றபடி முதல் படம் என்ற டென்ஷன் இல்லாமல் ஜாலியாக வேலை செய்தேன்.
உங்கள் இசைப் பயணத்தில் ‘பைசன்’ படத்துக்கு எந்த இடம் தருவீங்க?
என்னுடைய கரியரில் ‘பைசன்’ முக்கியமான படம். தமிழ் சினிமாவின் ஆளுமைமிக்க இயக்குநர் மாரிசெல்வராஜுடன் படம் செய்ததை முக்கியமாகப் பார்க்கிறேன்.
வழக்கமாக செய்யும் படங்களைவிட புதுவித கதைக்களம், சவுண்ட், அனுபவம் என எல்லாமே புதுசு. மாரிசெல்வராஜும், நானும் ஒரே ஊரிலிருந்து வந்துள்ளோம். எங்களுக்குள் என்ன புதுசா செய்யப்போகிறோம் என்ற கேள்வி இருந்துச்சு. அந்த விதத்தில் மண் மணம் மாறாமல் கலர்ஃபுல்லாக பிரசண்ட் பண்ண நினைத்தோம். அதைத்தான் ‘பைசன்’ படத்தில் கொடுத்துள்ளோம்.
இசையே தெரியாதவர்களுக்கும் பாடல் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தோம். அது நடந்துள்ளதாக நினைக்கிறோம். பின்னணி இசையிலும், ஸ்போர்ட்ஸ் டிராமா என்பதால் அதற்கேற்ப விறுவிறுப்பான இசையைக் கொடுக்க முடிந்தது.
உங்கள் ஆரம்ப படங்களில் சந்தித்த மிகப்பெரிய சவால்கள் என்ன?
சவால்கள் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், பட்ஜெட்டை மனசுல வெச்சு ஒர்க் பண்ணணும். அதுல என்ன பெஸ்ட்டாக பண்ணமுடியுமோ அதைப் பண்ணினேன். ஒரு புதிய பாடலை உருவாக்கும்போது உங்கள் முதல் ஸ்டெப் என்ன? ரிதம் அல்லது ஒரு காட்சியின் உணர்ச்சியின் அடிப்படையில் அந்த பிராசஸ் இருக்குமா?
ஒரு பாடலை ரிதமாக, விஷு வலாக என பல கோணங்களில் பார்க்கலாம். ஆனால், ஒரு பாடல் எங்கிருந்து தொடங்குகிறது என்பது இன்றுவரை புரியாத புதிர். ஒரு பாடலை இப்படி பண்ணணும், அப்படி பண்ணணும் என கணக்குப்போட்டு பண்ண முடியாது. இசையின் மூலம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்லமுடியாது.
பாடலுக்கான ‘மூடை’ப் புரிஞ்சு கீ போர்டில் கையை வெச்சு, வாய்க்கு வந்ததை கத்துவேன். இதுதான் உண்மை. இதை மிகையாகச் சொல்லவில்லை. எல்லோரும் இப்படிப் பண்ணினேன், அப்படிப் பண்ணினேன் என்று சொல்வார்கள். அதெல்லாமே பொய். மியூசிக் எப்படி வரும்னு தெரியாது. என்னுடைய பிராசஸ் ரேண்டமாக இருக்கும். அதைப் பார்க்கும்போது ‘இவன் வேலை பண்றானா, சும்மா உட்கார்ந்து இருக்கிறானா’ என்று தோணும். சில பாடல்கள் ராகம், வார்த்தை அடிப்படையில் உருவாகும்.
‘தீக்கொளுத்தி...’ பாடல் பெரிய ஹிட். அந்த வகையில் ஒரு பாடல் ஹிட் ஆகும் என்கிற எண்ணத்துடன் இசை அமைக்கிறீர்களா, அல்லது உணர்வை மட்டுமே பின்பற்று கிறீர்களா?
எமோஷனை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். ‘ஹிட்’ ஆக்கணும் என்ற மனநிலையில் வேலை செய்தால் எதுவும் வராது. குப்பை மாதிரிதான் வரும்.
‘ஹிட்’டாக்கணும் என்று பண்ணுவதே தப்பு. அப்படி செய்வது ‘நான் யார்ன்னு காட்றேன் பார்...’ என்றுதானே அர்த்தம்? அந்த ஈகோவை தூக்கிப்போட்டு ‘ஆர்ட்’டுக்கு சரண்டராகி வாசிக்கணும்.
கதை, எமோஷனை மனசுல வெச்சு பண்ணணும். இசையமைப்பாளருக்கு ஒரு பாடல் பிடித்துவிட்டால் அது ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
கமர்ஷியல் எதிர்பார்ப்புகளுக்கும், உங்கள் சொந்த இசை ஞானத்துக்கும் இடையே சமநிலையை எப்படி வைத்திருக்கிறீர்கள்?
நல்ல கேள்வி. ஆர்ட் என்பது எல்லோருக்கும் பிடிக்கணும். ஆர்ட்டுக்கு என்று மகத்துவம் இருக்கு. மியூசிக் எனக்கு ஓரளவுக்குத் தெரியும். இசை என்பது எல்லோருடைய மனதையும் தொடணும். ரொம்ப மியூசிக்கலாக பண்ணினால் யாரும் கேட்க மாட்டார்கள். ரொம்ப கமர்ஷியலாக பண்ணினால் மியூசிக் தரம் குறைந்துவிடும். இசையமைப்பாளருக்கும் பிடிக்கணும் ரசிகர்களுக்கும் பிடிக்கணும். அதற்கு சுற்றி உள்ளவர்களைப் பற்றிய புரிதலும், இசை பற்றிய புரிதலும் தேவைப்படுகிறது. அது இருந்தால்தான் எல்லாருக்குமான இசையைத் தரமுடியும்.
பின்னணி இசை, பாடல்கள் - இவற்றை உருவாக்கும் முறையில் என்ன வித்தியாசம்?
ரொம்ப சிம்பிள். பாடல்களுக்கு ‘மூட்’ முக்கியம். கதைக்களம், கேரக்டருடைய தன்மை டான்ஸ் ஆடுமளவுக்கு இருந்தால் அதற்காக வேலை செய்ய வேண்டும். பின்னணி இசை என்பது சொல்லப்படாத விஷயங்களை மியூசிக் வழியாக சொல்ல வேண்டும். கேரக்டர் ஒரு விஷயத்தை கடத்துவதற்கு வெற்றிடம் இருக்கும். அதை மியூசிக் வழியாக நிரப்பணும். கேரக்டர் கன்வே பண்ணுவது வேறுவிதமாக இருக்கும். டைரக்டர் கன்வே பண்ணுவது வேறுவிதமாக இருக்கும். அதை சப்கான்ஷியஸ் உணர்வுடன் இணைப்பதுதான் பின்னணி இசை.
‘சேதுபதி’, ‘தேவராட்டம்’, ‘செம்பி’ போன்ற படங்களில் எந்தப் படம் உங்கள் இசைத் திறனை அதிகமாக சோதித்தது?
பிரபு சாலமன் சார் படத்தில் நிறைய கத்துக்கிட்டேன். அவரிடம் வேலை செய்வது பயிற்சிக் கூடம் மாதிரி. அவருடன் டிராவல் பண்ணியது நிறைய உதவியாக இருந்துச்சு. ரொமான்ஸ், திரில்லர், ஆக்ஷன் என்று பல வகை படம் செய்துள்ளீர்கள். அவைகளில் உங்களை தனித்துவமாக காண்பிக்க என்ன முயற்சி எடுப்பீர்கள்?
தனித்துவமாக காண்பிக்க நேர்மையாக எந்தவொரு இசையையும் தழுவி எடுக்காமல் என்னுடைய ஒரிஜினல் மியூசிக்காக கொடுக்க முயற்சி செய்கிறேன். ‘இங்கிருந்து காப்பி அடிச்சார்’ என்று சொல்வதைவிட, என்னைச் சுற்றி பல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்; அந்த இன்ஸ்பிரேஷனில் உள்மனம் என்ன சொல்கிறதோ அதைக்கேட்டு ஆத்மார்த்தமாக தருவதை என்னுடைய தனித்துவமாகப் பார்க்கிறேன்.
சமீபத்திய ‘பன் பட்டர் ஜாம்’, ‘பைசன்’ போன்ற படங்களில் புதிய முயற்சிகள் என்ன செய்தீர்கள்?
மியூசிக் டைரக்டராகவே அடுத்த லெவலுக்கு மாறியிருக்கிறேன். ‘பன் பட்டர் ஜாம்’ பாடல்கள் புதுவிதமாக இருந்துச்சு. ‘பைசன்’ என் கரியரில் புதிய துவக்கம் என்று சொல்லலாம். நான் யார் என்று உணர வைத்த படம். ‘சினிமாட்டிக்’ நுட்பங்களை மாரி செல்வராஜிடம் கத்துக்கிட்டேன்.
ஏஐ தொழில்நுட்பம், இசையமைப்பாளர்களின் வேலையை எளிதாக்கியுள்ளதா?
ஏஐ உடன் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏஐ டெக்னாலஜி யால் ஆத்மார்த்தமாகப் பண்ண முடியாது. ஏஐ மூலம் டிரெண்ட் பாடல்கள் வரலாம். ஆனால், நம் வேலையை சரியாகச் செய்யும்போது எதுவும் பக்கத்தில் நிற்க முடியாது.
எஸ்.ராஜா
|