Now I’m Sweet 16
‘வீரம்’ படத்தில் வந்த பேபியா இது?
அட ‘மாஸ்’ படத்துல சூர்யா மகளா நடிச்ச பொண்ணா இது..?
அவங்களா இப்படி வளர்ந்துட்டாங்க..?
 இப்படித்தான் ரீல்ஸ், ஷார்ட்ஸ் என டிரெண்டிங்கில் இருக்கிறார் யுவினா பார்தவி. சென்ற வருடம் வெளியான ‘சைரன்’ படத்தில் ரவி மோகன், அனுபமா பரமேஸ்வரன் மகளாக நடித்தவர் தற்போது கதாநாயகியாக ‘ரைட்’ படத்தில் நட்டி நடராஜுக்கு மகளாக ஸ்டைலிஷ் 2K கேர்ளாக நடித்ததில் எங்கும் வைரலாகி வருகிறார் யுவினா.
 நாங்க பார்த்து வளர்ந்த குழந்தை என்றாலும் தகும்... இப்ப என்ன படிக்கிறீங்க?
கரெக்டா சொன்னீங்க. எனக்குத் தெரிந்து என்னுடைய எல்லா குழந்தைப் பருவ வயதிலும் ஏதாவது ஒரு கேரக்டரில் நான் நடிச்சுகிட்டே இருந்திருக்கேன். 2018ல விஜய் அங்கிள் கூட ‘சர்க்கார்’ படம் நடிச்சேன். அந்தப் படத்துக்குப் பிறகுதான் ஒரு பெரிய கேப் எடுத்துகிட்டேன். காரணம், ஹை ஸ்கூல் வந்துட்டேன், படிப்பு மேல கவனம் செலுத்தணும் என்கிற நோக்கம்தான். இடையிலே போர்டு எக்ஸாம் வேறு. அதனால் மொத்தமாகவே ஸ்கூல், படிப்புனு இருந்துட்டேன். ‘சைரன்’ கூட அந்தப் படத்துக்கு பொருத்தமா நான் இருப்பேன்னு கேட்டுக்கிட்டதால் நடிச்சதுதான்.  சமூக வலைத்தளத்தில் கூட நீங்க அதிகம் ஆக்டிவா இல்லையே?
லாக்டவுன் நாட்களில்தான் அம்மா எனக்கான இன்ஸ்டா பக்கத்தை ஆரம்பிச்சு என்னுடைய பழைய போட்டோக்களை எல்லாம் பகிர ஆரம்பிச்சாங்க. அதுவும் கூட நடிச்ச படங்களுடைய போட்டோக்களா ஷேர் செய்துட்டு இருந்தாங்க. அதற்கே நிறைய ஃபாலோயர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து நானும் என்னுடைய ஃபிரண்டும் சேர்ந்து ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து...’ பாட்டுக்கு அதே ஸ்டைலில் டான்ஸ் ஆடினோம். அது நல்ல வைரலாச்சு.
 இதுக்கு அப்புறம்தான் கொஞ்சம் ஆக்டிவ் ஆனேன். அப்ப கூட இந்த சோஷியல் மீடியா அழுத்தத்தை தலையில் ஏத்திக்க விரும்பலை. என்கூட படிக்கிற ஃபிரண்ட்ஸ் கூட கேப்பாங்க, ‘சினிமாவில் நடிக்காத பெண்கள் கூட இன்னைக்கு இன்ஸ்டா பக்கத்தில் லட்சக்கணக்கில் ஃபாளோயர்ஸுடன் டிரெண்டிங்கில் இருக்காங்க. நீ ஏன் இல்லை?’ன்னு.
எனக்கு இந்தக் கேள்வியே புதுசா இருந்துச்சு. அதனால் நான் இந்த சோஷியல் மீடியா பொறிக்குள்ள மாட்டக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன். இப்பவும் என்னுடைய படங்களின் புகைப்படங்கள், உடன் எனக்கா பிடிச்சா ஒரு சில வீடியோ ரிலீஸ்... இவ்வளவு தான் செய்கிறேன்.
என்ன படிக்கிறீங்க... எதிர்கால திட்டம் என்ன?
எதிர்காலம் அளவுக்கு எல்லாம் இன்னும் யோசிக்கலை. இப்பதான் ஸ்வீட் 16. அந்த டீன் ஏஜ் மொமெண்ட்டை என்ஜாய் செய்திட்டிருக்கேன். +2 படிக்கிறேன், பப்ளிக் எக்ஸாமுக்கு தயாராகிட்டு இருக்கேன்.
பிசினஸ் சார்ந்த படிப்பை எடுத்துப் படிக்கணும் என்பது ஆசை. படிப்பை வைத்து வேலை செய்கிறேனோ இல்லையோ, நிச்சயம் மாஸ்டர் டிகிரி முடிச்சிடுவேன். அப்பா மகேஷ் ரேயன், பிசினஸ் செய்துட்டு இருக்கார். அதனால்தான் எனக்கும் பிசினஸ் படிப்பு மேலே ஒரு ஆர்வம்.
அம்மா, தேவி மகேஷ். அவங்களும் நடிகையாகவும், மாடலாகவும் இருக்காங்க. நிறைய விளம்பரங்களில் என் அம்மாவை நீங்க பார்க்கலாம். என்னுடைய பிரதர் கூட நடிக்க ஆரம்பிச்சிட்டாரு.
அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், ரவி மோகன்... குழந்தை நட்சத்திரமாகவே அத்தனை டாப் நடிகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பு எப்படி இருந்தது?
கடவுள் ஆசீர்வாதம்னுதான் சொல்வேன். இங்க மட்டும் கிடையாது; மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் கூட குழந்தை நட்சத்திரமா நிறைய பெரிய நடிகர்கள் கூட நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எனக்குத் தெரிந்து தென்னிந்தியாவில் இருக்கற பெரும்பாலான நடிகர்களுக்கு மகளாக நடிச்சிருப்பது நானாதான் இருப்பேன். அத்தனை பேரும் ஏன் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்காங்கனு புரிஞ்சுகிட்டேன்.
ஸ்டார்டம் அந்தஸ்தை அவங்க தலையில் ஏத்திக்கவே மாட்டாங்க. அஜித் சார், சூர்யா சார்... இப்படி எல்லாருமே சக மனிதர்களாகத்தான் பழகினாங்க. இதைத்தான் முதல்ல நான் அவங்ககிட்ட கத்துக்கிட்டேன். எவ்வளவு பெரிய உயரம் தொட்டாலும் அந்தப் பணிவும், நட்பும் மாறவே கூடாது. எத்தனை மொழிகள் உங்களுக்குத் தெரியும் ?
தாய்மொழி தெலுங்கு. பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை. அதனால தமிழ் மொழி, தானாகவே வாழ்க்கையில் கலந்திடுச்சு. படிப்பில் இங்கிலீஷ் மற்றும் இந்தி. படங்கள் காரணமா மலையாளம் மற்றும் கன்னடம் சின்ன வயதிலேயே எனக்கு பழக்கப்பட்டதால் அதையும் கத்துக்கிட்டேன். கன்னடத்தில் ஒன்று இரண்டு படங்களில் கதையே என்னைச் சுற்றிதான் நடக்கற மாதிரி எடுத்தாங்க. அதற்காகவே கன்னடம் கத்துக்க வேண்டிய சூழல் இருந்துச்சு. மேலும் அவங்களே கன்னடம் சொல்லிக் கொடுத்தாங்க.
படிப்பு, நடிப்பு... ரெண்டையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள் ?
ஓர் உண்மையை சொல்றேன். இதுவரையிலும் நான் நடிச்ச அத்தனை படங்களின் ஷூட்டும் எப்ப நடந்தது தெரியுமா? என்னுடைய லீவு நாட்களில்தான்.எனக்கு லீவு விடுற வரைக்கும் ஒரு சில டீம் வெய்ட்டிங்கில் கூட இருந்திருக்காங்க. சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே புத்தகத்தை வைத்து படிச்சிட்டு இருந்த ஞாபகம் கூட இருக்கு. படிப்பிலும் கெட்டி என்கிறதால் ஸ்கூலிலும் நிறைய சப்போர்ட் செய்தாங்க.
சினிமாவில் நெக்ஸ்ட்..?
ஜாலியா என்னைத் தேடி வருகிற படங்களில் நடிக்கிறேன். அதிலும் என்னுடைய வயதை அது எந்த வகையிலும் இடையூறு செய்யக்கூடாது. அதாவது வயசுக்கு மீறின கேரக்டர்களுக்கு நோ.
அதைப்போல் எனக்கான படம் நிச்சயம் என்னைத் தேடி வரும். அந்தக் கதைக்கு ஓகே சொல்லணும். அப்படியான ஒரு கதைதான் ‘ரைட்’ படம். அதில் ரொம்ப போல்டான காட்சி கூட இருந்துச்சு. ஆனா, அதை எவ்வளவு மரியாதையாக காட்ட முடியுமோ அப்படி டைரக்டர் அங்கிள் காட்டினார்.
படத்தில் நட்டி அங்கிள், அருண்பாண்டியன் அங்கிள்... இப்படி அனுபவமான நடிகர்கள் இருக்கும்பொழுது அதை தவற விட்டுடக்கூடாது. அதனாலயே நடிச்சேன்.
அப்புறம்... மூணு படங்களில் நடிச்சுட்டு இருக்கேன்.
ஆனால், எந்தப் படத்தினுடைய தலைப்பையும் இப்ப சொல்ல முடியாது. ஒரு பக்கம் கிளாசிக்கல் டான்ஸ், வெஸ்டர்ன் டான்ஸ் பழகிட்டு இருக்கேன். ஸ்கூல் படிப்பு இந்த வருடத்துடன் முடியுது. அடுத்து காலேஜ், படிப்பு இதையெல்லாம் பார்க்கணும். அதற்கிடையிலே எனக்கான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கணும்.
சினிமா எனக்கு மிகப்பெரிய அந்தஸ்தும் இடமும் கொடுத்திருக்கு. அதை நிச்சயம் உணர்ந்து நல்ல கதாபாத்திரத்தில் நடிச்சு நல்ல நடிகை என்கிற பெயர் வாங்கணும்.
ஷாலினி நியூட்டன்
|