ஆஸ்கருக்கு போகுது நம்ம ஸ்ரீதேவி பொண்ணு நடிச்ச படம்!



ஓர் உண்மைச் சம்பவத்தை எப்படி உணர்வுபூர்வமாகவும், நெகிழ்ச்சியாகவும் படமாக்குவது என்பதற்கு உதாரணம், ‘ஹோம்பவுண்ட்’ எனும் இந்திப்படம். சமீபத்தில் சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறது இந்தப் படம். கொரோனாவுக்கு முந்தைய நாட்களில் இப்படத்தின் கதை ஆரம்பிக்கிறது. 
வட இந்தியாவில் உள்ள ஒரு குக்கிராமம். அங்கே வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த சந்தனும், இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த முகமதுவும் குழந்தைப் பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். 
சந்தனின் அம்மாவும், சகோதரியும் ஒரு பள்ளியில் கடைநிலை ஊழியர்களாகப் பணிபுரிகின்றனர். அப்பா கிடைத்த வேலைகளைச் செய்து வருகிறார். முகமதுவின் அப்பாவுக்குக் காலில் பிரச்னை. 
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரால் எழுந்து நடக்க முடியும் என்ற நிலை. அதற்குப் பணம் நிறைய தேவைப்படும். அதனால் முகமதுவை துபாய்க்கு வேலைக்குப் போகச் சொல்கிறார் அப்பா. ஊரைவிட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக வேலை செய்கிறார் முகமது.

சந்தனின் வீட்டுக்கூரையில் ஓட்டை விழுந்து, மழை பெய்தால் வீட்டுக்குள்ளேயே மழை நீர் கசிகிறது. நல்ல வேலைக்குச் சென்று வீட்டைச் சீரமைக்க வேண்டும்; வேலைதான் சமூகத்தில் தனக்குரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும் என்று நினைக்கிறார் சந்தன். 

முகமதுவுக்கும் இதே நிலைதான். அதனால் இருவரும் கான்ஸ்டபிள் வேலைக்கான போட்டித்தேர்வை எழுதுகின்றனர். தேர்வுக்குச் செல்லும்போது சந்தனுக்கு சுதாவின் அறிமுகம்  கிடைக்கிறது. இருவருக்குமிடையில் காதல் மலர்கிறது. சுதா படிக்கும் கல்லூரியில் சேர்கிறார் சந்தன். 

இந்நிலையில் கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வருகின்றன. சந்தன் தேர்ச்சி பெறுகிறார்; முகமது தோற்றுவிடுகிறார். தேர்வு முடிவுகள் இருவருக்குமிடையில் மனக்கசப்பை உண்டாக்குகிறது.

கான் ஸ்டபிள் வேலைக்கான பயிற்சிகள் இருப்பதால் கல்லூரியிலிருந்து விலகுகிறார் சந்தன். வேலைக்கான நியமன உத்தரவு வருவதற்குத் தாமதமாகிறது. 
இச்சூழலில் அம்மாவின் வேலை பறிக்கப்படுகிறது. வீட்டின் பொருளாதாரச் சூழலும், கூரையும் மோசமடைகிறது. சூரத்தில் வேலை இருப்பதால் அங்கே செல்ல முடிவு செய்கிறார் அப்பா. 

இதைப் பார்க்கும் சந்தனுக்குக் குற்றவுணர்வு ஏற்பட, அவரே சூரத்துக்குச் சென்று, ஜவுளி ஆலையில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். கிடைக்கும் வருமானத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்புகிறார். வீட்டின் பொருளாதாரச் சூழலும், கட்டமைப்பும் சரியாகிறது. 

இன்னொரு பக்கம், இஸ்லாமியர் என்பதால், தான் வேலை பார்க்கும் இடத்தில் மிகுந்த ஒடுக்குமுறைக்கும், அவமதிப்புக்கும் உள்ளாகிறார் முகமது. அவரும் வேலையை விட்டுவிட்டு, சூரத்துக்குச் சென்று, சந்தனுடன் சேர்ந்து ஜவுளி ஆலையில் வேலை செய்கிறார்.

எல்லாமே நல்லபடியாகச் சென்றுகொண்டிருக்கும்போது, கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்கிறது. சந்தனும், முகமதுவும் வேலைபார்த்த ஆலை மூடப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக, ஆலையைத் திறப்பதற்கான அறிகுறிகளே தென்படுவதில்லை. 

இருவரும் கிராமத்துக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். ஆனால், எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லை. அதிகப் பணம் கொடுத்து ஒரு லாரியில் பயணம் செய்கின்றனர். 
முன்பே அந்த லாரியில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். பயணத்தின்போது சந்தனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. அவருக்குக் கொரோனா என்று லாரியிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடுகின்றனர்.

சந்தனுக்குத் துணையாக முகமதுவும் லாரியைவிட்டு இறங்கிவிடுகிறார். அவர்கள் இறங்கிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனத்தையும் காணவில்லை. வேறு வழியின்றி இருவரும் நடக்க ஆரம்பிக்கின்றனர். சந்தனின் உடல்நிலை மோசமடைகிறது. குடிக்கத் தண்ணீர்கூட கிடைப்பதில்லை. வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போகிறார் சந்தன். 

நேரம் நகர, நகர சந்தனால் நகரவே முடிவதில்லை. இறுதியில் சந்தனின் இறந்த உடலுடன் வீட்டுக்குத் திரும்புகிறார் முகமது. சந்தனின் குடும்பம் நிலை குலைந்துபோகிறது. நாட்கள் வேகமாக ஓடுகின்றன. சந்தனுக்கு கான்ஸ்டபிள் வேலைக்கான நியமன உத்தரவு வருகிறது. மனதை உலுக்கும் படம் நிறைவடைகிறது.

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாட்களில் சூரத்திலிருந்து, உத்தரப் பிரதேசத்திலிருக்கும் தனது கிராமத்துக்கு லாரியில் திரும்பிக்கொண்டிருந்தார் அம்ரித் குமார். அவரது நண்பர் முகமது உட்பட ஏராளமானோர் அந்த லாரியில் பயணித்தனர். வீடு திரும்பும் பயணத்தின்போது அம்ரித்தின் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. 

சாதாரண காய்ச்சல், இருமல்தான். ஆனால், லாரியிலிருந்தவர்கள் அம்ரித்துக்குக் கொரோனா என்று கீழே இறக்கிவிட்டனர். அம்ரித்துடன் சேர்ந்து அவரது நண்பரான முகமதுவும் லாரியிலிருந்து இறங்கிவிட்டார். இருவரும் கால்நடையாக ஊருக்குத் திரும்பும் பயணத்தில் உடல் நிலை மோசமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ரித் மரணமடைந்தார். 

அவர் மரணத்துக்குக் காரணம் நீரிழப்பு; கொரோனா அல்ல. வீடு திரும்பும் பயணத்தின்போது முகமதுவின் மடியில் அம்ரித் இருக்கும் புகைப்படம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி நம்மை உலுக்கியது.இந்த உண்மைச் சம்பவத்தையும், சமூகத்தில் நிலவும் சாதி, மத ரீதியான அவலங்களையும் பிணைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நீரஜ் கய்வன்.
நம் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் படம். 

ஒரு பக்கம் நல்ல வசதி வாய்ப்புகளுடனும், பெரிய பதவிகளிலும் இருந்தவர்கள் கொரோனா ஊரடங்கின்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நாட்களைக் கழித்தனர். அவர்களது பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் ஊரடங்கு பெரிதாக எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. அப்படியே பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவிட்டனர். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை குறைவு. 

ஆனால், இன்னொரு பக்கமோ விளிம்பு நிலை மனிதர்கள் தங்களின் வேலையை இழந்தனர்; சொந்த ஊருக்குச் செல்வதே அவர்களுக்குப் பெரும்பாடாக இருந்தது. இன்னும் கூட அவர்களுடைய வாழ்க்கையும், பொருளாதாரமும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. முக்கியமாக சந்தன் போன்றவர்கள் உயிரையே விட்டிருக்கின்றனர். 
இந்தியாவில் இந்த விளிம்புநிலை மனிதர்களின் எண்ணிக்கைதான் அதிகம். 

இதுபோக சாதி ரீதியான அடக்குமுறையையும், சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குதலையும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறார் நீரஜ்.
சந்தன் சந்திக்கும் எல்லோருமே அவரிடம் குடும்பப்பெயரைக் கேட்கின்றனர். அப்பெயரின் வழியாக அவரது சாதியைத் தெரிந்துகொள்ள முனைப்பு
காட்டுகின்றனர். 

கான்ஸ்டபிள் வேலைதான் இந்தச் சாதி ஒடுக்குமுறையிலிருந்து தனக்கான மரியாதையைப் பெற்றுக்கொடுக்கும் என்று அந்த வேலையைத் தேர்ந்தெடுக்கிறார். சாதியைக் காரணம் காட்டி சந்தனின் அம்மா பள்ளியில் சமைக்கக்கூடாது என்று மாணவர்களின் பெற்றோர் அழுத்தம் தர, வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். 

திறமையாகத் தேர்வெழுதியிருந்தார் முகமது. ஆனால், அவர் தேர்ச்சியடையவில்லை. அவர் இஸ்லாமியர் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். வேலை செய்யும் இடத்தில்கூட அவரை ஒரு பூச்சியைப் போலவே பார்க்கின்றனர். 

அவர் வேலை செய்யும் இடத்தில் சந்தித்த எல்லா அவமதிப்புகளுக்கும் காரணம் அவர் ஓர் இஸ்லாமியர் என்பது மட்டும்தான். மட்டுமல்ல, சந்தனாகவும், முகமதுவாகவும் நடித்தவர்கள், கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கின்றனர். சுதாவாக ஸ்ரீதேவி - போனிகபூரின் மகளான ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.இப்போது இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

த.சக்திவேல்