Must Watch



சு ஃப்ரம் சோ

வெறும் 5.5 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 125 கோடியை அள்ளிய கன்னடப்படம், ‘சு ஃப்ரம் சோ’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது.ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், அசோகா. அவன் உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். 

இந்நிலையில் அவனுக்குப் பேய் பிடித்துவிட்டதாக ஊரில் இருப்பவர்கள் எல்லாம் நம்புகின்றனர். அசோகாவிற்குப் பிடித்திருக்கும் பேயை விரட்டுவதற்காக ஒரு பிரபல பேய் நிபுணரை அழைத்து வருகின்றனர். சோமேஸ்வரா பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா என்பவரது ஆவிதான் அசோகாவைப் பிடித்திருக்கிறது என்று அந்த நிபுணர் சொல்கிறார். 

உண்மையிலுமே அசோகாவிற்கு பேய் பிடித்திருக்கிறதா? அவனைப் பிடித்த ஆவியை எப்படி விரட்டுகிறார்கள் என்பதை சமூக பொறுப்புடன் நகைச்சுவை கலந்து அருமையாகச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.படத்தின் ஆரம்பத்திலிருந்து, இறுதிவரை வயிறு குலுங்க நம்மைச் சிரிக்க வைக்கும் படம், பெண்களுக்கு எதிராக சமூகத்தில் அரங்கேறும் ஓர் அவலத்தையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, படத்தையும் இயக்கியிருக்கிறார் ஜே.பி.துமிநாட்.

பாலேரினா

ஓர் அதிரடியான ஆக்‌ஷன் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘பாலேரினா’ எனும் ஆங்கிலப் படம். ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம்.கான்டராக்ட் அடிப்படையில் கொலை செய்யும் ஜாவியரின் மகள், ஈவ். அதனால் ஆபத்தான சூழலிலேயே அப்பா இருக்கிறார். ஈவ் சிறுமியாக இருந்தபோதே, அப்பா கொல்லப்படுகிறார். அப்போதே அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈவின் மனதுக்குள் ஆழமாகப் பதிகிறது. 

ஈவ் வளர்ந்து பெரியவளாகிறாள். பாலே நடனத்தில் கெட்டிக்காரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கான்ட்ராக்ட்டுக்காக கொலை செய்தல், பாடிகார்டு என பன்முகம் கொண்ட ஆளுமையாக மாறுகிறாள். அப்பாவின் மரணத்துக்கு காரணமானவர்களைத் தேடிப் பிடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் களத்தில் இறங்குகிறாள் ஈவ். 

இடையில் ஜான் விக் குறுக்கிட்டு, வன்முறை வேண்டாம் என்று தடுக்கிறார். ஆனாலும், ஈவ் கேட்காமல் பழிவாங்குதலைத் தொடர்கிறாள். அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவர்களை ஈவ் பழிவாங்கினாளா என்பதே மீதிக்கதை.ஆக்‌ஷன் பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. இதன் இயக்குநர் லென் வைஸ்மேன். 

தொகுப்பு: த.சக்திவேல்