AI தொழில்நுட்பத்தால் 99% வேலைகள் பறிபோகும்..?
‘‘உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கப் போகிறது ஏஐ தொழில்நுட்பம். 2030களில் கம்ப்யூட்டர் உட்பட ஏராளமான துறைகளில் வேலை செய்துகொண்டிருப்பவர்களில், 99 சதவீதம் பேர் வேலையை இழப்பார்கள். இதனால் பெருமளவில் ஏழ்மை உருவாக வாய்ப்பிருக்கிறது...’’ என்று எச்சரிக்கை செய்கிறார் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியரான ரோமன் எம்போல்ஸ்கி.இதை உறுதிப்படுத்துகிறார் ஏஐயின் காட்ஃபாதர் என்று அழைக்கப்படும் ஜெப்ரி ஹின்டன்.
‘‘எதிர்காலத்தில் பெரும் பணக்காரர்கள் மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். மனிதர்களுக்குக் கொடுப்பதைப் போல ஏஐக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் அவர்களுக்கு லாபம் கொழிக்கும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள்.
ஆனால், சம்பளத்தை நம்பியிருந்தவர்கள் வேலை கிடைக்காமல் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள்...’’ என்கிறார் ஹின்டன்.இந்நிலையில் 2027-க்குள் ஏஜிஐ என்னும் ஆர்ட்டிபீசியல் ஜெனரல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் பரவலாக வந்துவிடும். இந்த தொழில்நுட்பம் மனிதர்கள் பார்க்கின்ற பெரும்பாலான வேலைகளைப் பறித்துவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார் ரோமன். ஏஐ மட்டுமல்லாமல், இன்னும் ஐந்து வருடங்களில் குறைந்த விலையில் ஹியூமனாய்டு ரோபோக்களும் விற்பனைக்கு வந்துவிடும். உணவகங்கள், சிறு கடைகள், பிளம்பிங், சமையல், வாகனங்களைப் பழுதுபார்த்தல் உட்பட பலவிதமான வேலைகளைப் பார்க்கும் அளவுக்கு அந்த ரோபோக்கள் தயார் செய்யப்படும். இது முன்பே ஏழ்மையில் இருக்கும் பலரது பொருளாதாரத்தில் சிதைவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை செய்கின்றனர்.
இன்னும் பத்து வருடங்களில், அதாவது 2035-க்குப் பிறகு மனிதனால் மட்டுமே பார்க்கக்கூடிய வேலைகள் மட்டுமே இருக்கும். மற்ற வேலைகளை எல்லாம் ஏஜிஐ பறித்துவிடும். ‘‘வேலைகள் பறிபோனால் மக்களிடம் பணம் இருக்காது. ஏஜிஐயைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் எதையுமே வாங்கக்கூடிய பொருளாதார வசதியில் மக்கள் இருக்க மாட்டார்கள். இது சமநிலையைச் சீர்குலைக்கும்.
தவிர, உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் பார்க்கும் வேலை தான் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கொடுக்கிறது. அந்த வேலை போகும்போது அவர்கள் எப்படியான எதிர்வினையாற்றுவார்கள் என்பது முக்கிய பிரச்னையாக மாறும்...’’ என்று எச்சரிக்கை விடுக்கிறார் ரோமன்.அது சரி...
த.சக்திவேல்
|