ஒரே பாம்... ஊரே அலறுது!



‘‘ஒரு சில கதைகள் நம்மை சிரிக்க வைக்கும், சில கதைகள் நம்மைக் கோபப்படுத்தும், ஒரு சில கதைகள் நம்மை அழ வைக்கும். ஒரு சில கதைகள் உணர்வுபூர்வமா நம்மை கனெக்ட் செய்யும். 
இந்தப் படம் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து உணர்வுபூர்வமா உங்களை கதைக்குள் இணைக்கும்... இந்தப் படம் இதைத்தான் செய்யப்போகிறது,,,’’ என்பதுடன் பேசத் துவங்கினார் இயக்குநர் விஷால் வெங்கட்.‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் மூலம் அறிமுக இயக்குநராகக் களம் இறங்கியவர் தற்போது ‘பாம்’ திரைப்படம் மூலம் இன்னொரு 
வித்தியாசமான கதைக்களத்தில் நம்மைக் கடத்தவிருக்கிறார்.

‘பாம்’..?

ரெண்டு விதமான பாம் இருக்கு. ஒரு பாம் அணுகுண்டு. இந்த பாம், இயற்கையாக ஒரு மனிதன் உடலில் இருந்து வெளியேறும் காற்று. காளகம்மாய்பட்டி என்கிற கற்பனையான ஒரு குக்கிராமம், அங்கே ஒரு மனிதன் மரணம். அவர் உடலில் இருந்து வெளியே வரும் காற்று ஊரையே அலற வைக்கிறது. 
அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வி, அவருக்குள் சாமி புகுந்து விட்டது என்கிற சர்ச்சை வரை கொண்டு போகுது. முடிவு என்ன என்கிறது தான் மீதிக் கதை. சாமிக்காக நடக்கிற சண்டையும் சேர்த்து கதையை சமூகப் பார்வையில் பேசியிருக்கேன்.

கிராமத்து இளைஞனாக அர்ஜுன் தாஸ்... இதுவரை யாருமே அவரை அப்படி யோசித்தது இல்லையே?

அந்த டெம்ப்ளேட்டை உடைக்கணும்னுதான் கதை எழுதும்போதே அர்ஜுன் தாஸ் பிரதரை மனதில் வைத்து எழுதினேன். நாம் எல்லோருமே அவருடைய குரல் பத்தி மட்டும்தான் பேசுறோம். ஆனால், அதைத் தாண்டிய ஒரு யதார்த்தமான நடிகனை அர்ஜுன் தாஸ் கிட்ட பார்க்கலாம். எந்த கேரக்டருக்குள்ளும் மிகச் கச்சிதமா 
பொருந்துவார். 

இதுவரையிலும் அர்ஜுன் தாஸை, ரவுடியாக, கொலைகாரனாக, ஒரு நாகரிக சிட்டி இளைஞனாக பார்த்திருப்போம். இந்தப் படம் நிச்சயம் அந்த செயினை உடைக்கும். 
ஹீரோயின் சிவாத்மிகா ராஜசேகர். 

அசோக்செல்வன் சார் நடிச்ச ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் மீனாட்சியாக அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பாங்க. அந்த கேரக்டர் பார்த்தது முதல் என்னுடைய படத்தில் அவங்கதான் கதாநாயகி அப்படின்னு முடிவு செய்துட்டேன். இப்ப வரைக்கும் அசோக் செல்வன் - சிவாத்மிகா நடிச்ச அந்தப் பாடலும் காட்சியும் ரீல்ஸ், யூடியூப் ஷாட்களில் கூட பார்க்கலாம். 

இந்தப் படத்தில் காளி வெங்கட் சாருக்கு தங்கச்சியா வர்றாங்க. அப்புறம் இன்னும் நிறைய அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடிச்சிருக்காங்க. படத்தின் மையக்கரு காளி வெங்கட் சார். அவருக்கு சீன் இதுதான் அப்படின்னு சொன்னாலே போதும் அப்படியே ஸ்பிலிட் பர்சனாலிட்டி மாதிரி அந்த கதாபாத்திரமாகவே மாறிடுவார். நாசர் சார், அபிராமி மேடம், சிங்கம்புலி சார், ரமேஷ் திலக், பாலசரவணன், டி.எஸ்.கே... இப்படி படம் முழுக்க மனதில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களா அத்தனை பேரும் ரொம்ப அருமையா நடிச்சிருக்காங்க.

இமான் இசையில் ‘பாம்’ திரைப்படம்..?

நாம இயக்குநராகணும் அப்படின்னு முடிவு செய்த உடனேயே ஒரு சில டெக்னீஷியன்களை பட்டியல் போட்டு வைப்போம்... இவர்கள் கூட எல்லாம் வேலை செய்யணும் என. 
அந்தப் பட்டியலில் டாப் இமான் சார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர். அவர் இசை கிடைத்தது எங்களுக்கு பெருமை. அவர்தான் இந்த படத்துக்கு இன்னொரு மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி ஆகவே மாறியிருக்கார். 

அவர் கை பட்டதும் கதைக்களம் இன்னொரு அப்டேட் லெவலுக்கு மாறிடுச்சு. பாடலும் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பிச்சிருக்கு. பின்னணி இசை இன்னும் அற்புதமா வந்திருக்கு. 
பி.எம்.ராஜ்குமார் சினிமாட்டோகிராபி. இவர் ஆர்.டி ராஜசேகர் சார் கிட்ட அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்தவர். என்னுடைய நீண்ட கால நண்பர். 

எடிட்டர் பிரசன்னா ஜி. கே, தனுஷ் சாருடைய ஆஸ்தான எடிட்டர். ‘திருச்சிற்றம்பலம்’, ‘ராயன்’ உள்ளிட்ட பல படங்களில் இவர்தான் எடிட்டர். இந்தப் படத்துக்கும் அவருடைய எடிட்டிங் மிகப்பெரிய பலமா இருந்துச்சு. காஸ்ட்யூம்ஸ் பிரியா ஹரி, பிரியா கரண், ஆர்ட் டைரக்‌ஷன் மனோஜ் குமார்.

வளர்ந்து வரும் இயக்குநராக இந்த ஆபத்தான இணைய விமர்சன உலகில் மாட்டிக்கொண்டோமே என நினைத்தது உண்டா?

விமர்சனங்களை முழுமையாக நாம குறை சொல்லிட முடியாது. இந்த விமர்சனங்களுக்கு இடையேதான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘லப்பர் பந்து’, ‘பார்க்கிங்’ மாதிரியான படங்கள் ஜெயிச்சிருக்கு. 

ஆனால், ஏதோ ஒரு வித்யாசமான எதிர்மறை மனநிலை அதிகமாகியிருக்க மாதிரி தோணுது. விமர்சனங்கள் அதிக நெகட்டிவ் மட்டும்தான் பரப்புகிற மாதிரி இருக்கு. 

பொதுவா முன்பெல்லாம் படத்துக்கு போகும்போது ஒரு பொழுதுபோக்கு என நினைத்துதான் போவோம். ஆனால், இன்னைக்கு எப்படி இந்தப் படத்தை ஓடவிடாமல் செய்யலாம் என்கிற நோக்கம் அதிகமாகி இருக்கு. 

மத்த மொழி சினிமாக்களில் இந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை நான் பார்த்ததே கிடையாது. திடீரென தமிழில் ஏன் இவ்வளவு வன்மமான மனநிலை என்கிறது புரியலை. இதில் என்ன திருப்தி கிடைக்குது என்பதும் தெரியலை. ஒரு காலத்தில் சினிமாவை வாழ வைத்த விமர்சனம் இன்று அழிவுப் பாதையில் சினிமாவைக் கொண்டு போறது வருத்தமாயிருக்கு.

‘பாம்’... எப்படிப்பட்ட உணர்வுகளைக் கடத்தப் போகிறது?

சமூகத்தில் நடக்கும் ஒரு சில விஷயங்கள் மேல நமக்கு கோபம் இருக்கும். அதை சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைக்கும் படமாக இருக்கும். மிக முக்கியம்... எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் 100% குடும்பமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

ஷாலினி நியூட்டன்