சோஷியல் மீடியா குட்டிச்சுவர்கள்!
எஸ்தர் ராணி (இயன்முறை மருத்துவர் - Specialist in Sexual Rehabilitation)
20ம் பக்கத்தை படிச்சுட்டு இதைப் படிங்க!
ஊர்ப்புறங்களில் முன்பெல்லாம் குட்டிச் சுவர்கள் இருக்கும். அதில் சில அடங்காத பையன்கள் அமர்ந்து தெருவில் வந்து போகும் பெண்களை கலாட்டா செய்வார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வலைதளங்களின் அனுகூலங்கள் இப்படிப்பட்ட பல குட்டிச்சுவர்களை எழுப்பியுள்ளன. பாலின சமத்துவம் இன்னமும் கனவாகவே இருக்கும் சமூகத்தில் இத்தகைய செயல்பாடுகள் அச்சுறுத்தல்களையே ஏற்படுத்துகின்றன. பாலின இடைவெளியை மேலும் அதிகரித்து ஆண் தவிர்த்த மற்ற பாலினத்தவரின் நிலையை மேலும் சிக்கலுக்குள் உள்ளாக்குகின்றன.
 அசுரத் தனமான சகோதர கலாசாரம் (Bro Culture) சகோதர பிணைப்பு (Bro bonding) என்பது வேறொன்றும் இல்லை. ‘தம்பி உடையான் படைக்கஞ்சான்’ என்பதைப் போன்றது. என்ன தவறு செய்திருந்தாலும் தம்பிகள் படையை எதிர்க்க வேண்டும். ஆண்கள் தம் சக ஆண்களுடன் கொண்டிருக்கும் தீவிர நட்பு நிலையே ப்ரோ பாண்டிங். இது தவறில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது சரியான போக்கில் செல்லாத போது நச்சு சகோதர பிணைப்பாக (Toxic Bro bonding) மாறுகிறது.
 வக்கிர மற்றும் விகார எண்ணங்களுடைய ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் இத்தகைய நட்பு நிலைகளுக்குள் தங்களைக் குழுக்களாக மாற்றிக் கொள்கின்றனர். தங்களின் பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றிக் கொள்ள இக்குழுக்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட பாலின அடிப்படையிலான வன்முறை தொழில்நுட்பம் நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.
தகவல் தொடர்பு, கல்வி, பொழுதுபோக்கு என அனைத்துக்கும் இணையத்தையும் டிஜிட்டல் கருவிகளையும் சார்ந்து இருக்கிறோம். இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி பல நன்மைகளைத் தந்தாலும், அதுவே ஒரு கொடிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்போது, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக, அது கடுமையான விளைவுகளை ஏற் படுத்துகிறது. இவ்வாறு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பாலின அடிப்படையிலான வன்முறையே ‘தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட பாலின அடிப்படையிலான வன்முறை’ (Technology-Facilitated Gender-Based Violence - TFGBV) என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கெனவே சமூகத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மையின் டிஜிட்டல் வடிவமாகும். வாட்ஸ்அப் , யூடியூப், முகநூல், எக்ஸ் தளம் முதலான சமூக வலைதளங்களை தனிநபர்கள் தங்கள் சுய அடையாளத்துடனே பயன்படுத்துவார்கள்.
ஆனால், இந்த டாக்ஸிக் ப்ரோ கல்ச்சரில் வலம் வரும் நபர்கள் பொய்யான அடையாளங்களைப் (fake id) பயன்படுத்து வார்கள். அதுவும் ஒன்றுக்கு மேற்பட்டவை. மேலும் இந்த ஐடிக்கள் அடிக்கடி மாற்றப் படக் கூடியவை. திட்டமிட்டு குழுக்களாக இயங்கும் இந்த நபர்கள் குறி வைப்பது பெண்களை மட்டுமல்ல... சபலபுத்தி உள்ள ஆண்களையும்தான். இத்தகைய ஊடகங்களில் இவர்கள் தங்களின் பாலியல் விகாரங்களை பிறர் அறியுமாறு பின்னூட்டங்களில் விவாதிப்பார்கள். இதைப் பார்க்கும் சாதாரண நபர்களும் இதை ஒரு புதிய இயல்பாக நம்பத் தொடங்குவார்கள்.
தங்களின் பாலியல் விகாரங்களையும், வக்கிரங்களையும் ஆண்மையின் அடையாளங்களாக ஏற்றுக் கொள்வார்கள். இவர்களை இந்த பாலியல் வக்கிரக் குழுக்கள் எளிதில் மடக்கி ஏமாற்றி விடும். இப்படி ஏமாற்றப்படும் நபர்கள் வெளியில் வாயைத் திறக்க மாட்டார்கள். இந்தக் குழுக்கள் சமூகத்தில் மிகப் பெரிய கேடுகளைச் சத்தமில்லாமல் செய்து வருகின்றன. பெண்ணியவாதிகளும், சமூக ஆர்வலர்களும் ஏற்படுத்த முயல்கின்ற பாலின சமத்துவ சமூகத்தை இவர்கள் பின்னோக்கி இழுக்கிறார்கள்.
Cyber bullying எனப்படும் இணைய மிரட்டல்களுக்கு பெண் அரசியல்வாதிகள், நடிகைகள் எனத் தொடங்கி ஊர் பெயர் தெரியாத பெண்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல பெண்கள் சமூக ஊடகங்களில் இருந்து தங்களை இதற்குப் பின் தனிமைப் படுத்திக் கொள்வதாக சர்வதேச தரவுகள் சொல்கின்றன.
பெண்களின் உடல், உடை, பின்புலம், குடும்பம், வேலை மற்றும் அவர்களின் கருத்துக்கள் என யாவும் இத்தகைய ப்ரோ கல்ச்சர் பாய்ஸால் ட்ரோல் செய்யப்படுகின்றன. வாய் கூசும் மற்றும் அச்சில் ஏற்ற முடியாத சொற்களையும், படங்களையும் பயன்படுத்தி பெண்களின் ஒட்டுமொத்த ஆளுமைத் தன்மையையும் இவர்கள் பதம் பார்த்து விடுகின்றனர். இவர்கள் நடத்தும் இத்தகைய ஒழுக்கக்கேடான குழுக்களில் இருக்கும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை பலமடங்கு. குறைந்தபட்ச குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் இவர்களின் இத்தகைய பாலியல் குற்றங்களை பலரும் ஏற்றுக் கொள்வதும், பின்பற்றுவதும் நாகரீக சமூகத்தின் அவலநிலை. தனிமனித பாலியல் வக்கிரங்களுக்கு எந்தப் பாகுபாடும் அற்று எல்லா பெண்களின் படங்கள், தரவுகள் என தனிநபர் விவரங்களை முறைகேடாக பயன்படுத்துகின்றனர். இதற்கு எளிதில் பலியாவது நடிகைகளும், சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சர்களும்தான். நடிக்க வந்துவிட்டாலே அவர்களைப் ‘பொது மகளிராக’ பாவித்து கீழ்த்தரமாக நடத்த இச்சமூகத்தைப் பழக்கப்படுத்து கிறது இக்குழு.
இங்குமங்குமாக இலை மறை காய் மறைவாக இருந்த விஷயங்களை எல்லாம் வெட்கமின்றி வெட்டவெளியில் அரங்கேற்றி வருகின்றனர். பெண் என்பதாலேயே ட்ரோல் செய்யப் படும் ஒரு சமுதாயத்தில் பெண்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறிதானே!
சரி, இதை எல்லாம் யார் நிகழ்த்துகிறார்கள்?
நாம் இக்குழுக்களை உருவாக்கி நடத்தும் ஒருசிலரைக் கைகாட்டி விடலாம். ஆனால், அவர்கள் மட்டும் காரணமல்ல; அவர்களைப் பின்பற்றுபவர்களும், வாயை மூடி இக்குற்றங்களை எதிர்க்காமல் வேடிக்கை பார்ப்பவர்களும்தான் முதன்மையான குற்றவாளிகள். சமூக ஊடகங்களில் அசிங்கப்படுத்தப்படும் ஒரு நடிகையோ அல்லது முகமறியா பெண்ணோ... அவளைக் காப்பாற்ற பொதுச் சமூகம் துணிவதில்லை.
அதுதான் இந்த நபர்கள் துணிச்சலாக எதையும் செய்யக் காரணம். இந்த நபர்கள், இவர்களை ஆதரிப்பவர்கள் எல்லாம் நம் வீட்டில், நம்முடன்தான் இருக்கின்றனர்; வாழ்கின்றனர். ரீல்ஸ்களையும், வீடியோக்களையும் லைக் கொடுத்து இப்படிப்பட்ட வக்கிரமான ஆட்களை ஆதரித்து, தானும் பெர்வேர்டட் ஆக மாறும் நம் வீட்டு மனிதர்களையாவது நாம் கண்காணிக்கிறோமா?கண்காணிக்க வேண்டும். கண்காணிப்போம்.
|