களரி கேர்ள்!



‘தற்காப்புக் கலைகளின் தாய்’ என்று களரியைப் புகழ்கின்றனர். சீன குங்ஃபூ கூட களரியின் தாக்கத்தினால்தான் உருவானது என்கின்றனர். இத்தனைக்கும் இந்த தற்காப்புக் கலை தோன்றிய இடம், கேரளா. 
6000 வருடங்கள் பழமையானது என்று களரியின் வரலாற்றைச்  சொல்கின்றனர். ஆனால், நவீன ஆய்வுகள் களரிக் கலை கி.மு 600ல் தோன்றியிருக்கலாம் அல்லது 11 - 12ம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று  சொல்கின்றன. 

இவ்வளவு பழமையான தற்காப்புக் கலையை ஜென் இஸட் தலைமுறைகளிடம் கொண்டு சேர்த்து வருகிறார் எம்.எஸ். திவ்யஸ்ரீ. இவரை எல்லோரும் ‘களரி கேர்ள்’ என்று புகழ்கின்றனர். 

இத்தனைக்கும் திவ்யஸ்ரீயும் ஜென் இஸட் தலைமுறையைச் சேர்ந்தவர்தான். ஆம்; அவரது வயது 22. களரி வெறுமனே எதிரியைத் தாக்குவதற்கான தற்காப்புக் கலை மட்டுமல்ல; அது மனதை உறுதிப்படுத்தவும், ஆன்ம ரீதியாக நாம் வலுவடையவும் உதவுகிறது. 

இத்தகைய களரியில் இளம் ஜாம்பவானாகத் திகழ்கிறார் திவ்யஸ்ரீ. இருபது வயதுகளில் பெரும்பாலான பெண்கள் கல்லூரிக்குச் செல்வார்கள் அல்லது கார்ப்பரேட்டுகளில் பணிபுரிவார்கள். ஆனால், திவ்யஸ்ரீயோ இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியைச் செய்து வருகிறார். 

யார் இந்த திவ்யஸ்ரீ?

கதை சொல்லி, களரி பயிற்றுவிப்பாளர், கலாசாரத் தூதர், கிராபிக் டிசைனர் என பன்முகங்களைக் கொண்ட ஓர் ஆளுமை, திவ்யஸ்ரீ. ‘நித்ய சைதன்ய களரி’ என்ற பெயரில் களரியைக் கற்றுக்கொடுக்கும் மையத்தை நடத்துகிறார். 

தில்லி, பெங்களூரு, கொல்கத்தா என பத்து இடங்களில் கிளைகளைப் பரப்பியிருக்கும் ‘நித்ய சைதன்ய களரி’யில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் களரிக் கலையைக் கற்றுக்கொண்டுள்ளனர் என்பது இதில் ஹைலைட்.

தில்லியைச் சேர்ந்த களரிக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவரது குடும்ப நிறுவனமான ‘நித்ய சைதன்ய களரி’தான் சிறுமி திவ்யஸ்ரீயின் விளையாட்டு மைதானம். 
தனது பெற்றோர் மற்றவர்களுக்குக் களரிச் சண்டையைக் கற்றுக்கொடுப்பதைப் பார்த்து வளர்ந்தார். 

அதனால் அவருக்கு இயல்பாகவே களரிமீது ஆர்வம் பிறந்துவிட்டது.  
நான்கு வயதில் பொம்மைகளுடன் விளையாடாமல், பெற்றோரிடமிருந்து களரி கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

 கேரளாவில் பிறந்த களரியை தில்லிக்குக் கொண்டு சென்றது சாதாரண விஷயமில்லை. கலாசாரத் தடைகள், சந்தேகப் பார்வைகள், மிரட்டல்கள் என பல தடைகளைக் கடந்துதான் வட இந்தியாவில் களரிக் கலையைப் பரப்பியிருக்கிறது, ‘நித்ய சைதன்ய களரி’. 

மெதுவாக, அதே நேரத்தில் சீராக வளர்ந்தது திவ்யஸ்ரீயின் களரி மையம். கடந்த 30 வருடங்களில் களரியின் புகழை தேசமெங்கும் ஒலிக்கச் செய்ததில் ‘நித்ய சைதன்ய களரி’யின் பங்கு முக்கியமானது.

களரிக் கலையை நேரடியாகக் கற்றுக்கொடுப்பது மட்டுமல்லாமல், டிஜிட்டல் வழியாகவும் ஆயிரக்கணக்கானோரிடம் கொண்டு சேர்க்கிறார் திவ்யஸ்ரீ. இவரது சமூக வலைத்தளப் பக்கங்கள்தான் அதற்கு சாட்சி. 

பள்ளிக்குழந்தைகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட திவ்யஸ்ரீயிடம் களரியைக் கற்றுக்கொள்கின்றனர். மட்டுமல்ல, ‘நித்ய சைதன்ய களரி’ மையத்தில் நிறைய பேர் குடும்பத்துடன் களரியைக் கற்றுக்கொள்வதுதான் இதில் கவனிக்கத்தக்கது.

த.சக்திவேல்