தமிழ் சினிமாவின் இன்றைய ரங்காராவ்!
தமிழ் சினிமாவின் பெருமையை காலம் முழுவதற்கும் சொல்லும்படி ‘காதல்’ எனும் மகத்தான படம் கொடுத்தவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். தன் படங்கள் வழியாக திரையில் தோன்றும் கதாபாத்திரங்களை ரசிகர்களின் மனதில் ஓசையில்லாமல் கடத்தியவர். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இவர் இப்போது நடிகராகவும் கவனிக்கத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘காந்தி கண்ணாடி’யில் காந்தியாக வெளுத்து வாங்கியிருந்தார்.  தமிழ் சினிமாவுக்கு எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் ரங்காராவ் இருந்ததுபோல்; ரஜினி, கமல் காலத்தில் செந்தாமரை நடித்ததுபோல் இன்று ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கிடைத்திருக்கிறார் என கோலிவுட் கொண்டாடுகிறது.
 இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் பாலாஜி சத்திவேலாக எப்படி மாறினார்..?
நான் உதவி இயக்குநராக வேலை செய்த படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இல்லாதபோது நடிப்பேன். இது எல்லா படங்களிலும், எல்லா உதவி இயக்குநர்களும் செய்யக்கூடியது.
‘ஜென்டில்மேன்’ படத்திலும் அப்படி நடித்துள்ளேன்.
நான் ஒர்க் பண்ணிய படங்களில், கதை சொல்லப்போகும் இடங்களில் சின்ன ரோல் சார், பண்ணிக் கொடுங்கனு சொல்வாங்க. நட்புக்காக அப்படி நடித்துள்ளேன். ‘விசாரணை’ படத்துக்காக வெற்றிமாறனுக்கு ஒரு பாராட்டு விழாவை மிஷ்கின் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் மணிரத்னம் சார், ஷங்கர், பாலா, கெளதம் வாசுதேவ் மேனன் உட்பட ஏராளமான இயக்குநர்கள் கலந்துகொண்டார்கள்.
அங்கு நான் ஜாலியாக சிரித்துப் பேசினேன். எல்லோரும் அப்போதே மறந்திருப்பார்கள் என்று நினைத்தபோது மறு நாள் வெற்றிமாறன் எனக்கு போன் பண்ணி, ‘நீங்க நடிகர் பாலாஜி சக்திவேல். ஏன் நடிக்கக்கூடாது’ என்று கேட்டு உற்சாகப்படுத்தினார். அது சரிப்பட்டு வராதுன்னு அப்படியே விட்டுவிட்டேன்.
‘அசுரன்’ ஆரம்பிக்கும்போது, ‘உங்களுக்கு ஒரு கேரக்டர் இருக்கு. நான் உங்க ஆபீஸ் வர்றேன்’னு சொன்னார். ‘சார், நான் உங்க ஆபீஸுக்கு வர்றேன். ஆனால், நீங்க நினைக்கிற மாதிரி நான் நடிகர் மெட்டீரியல் கிடையாது. நீங்க சொன்னதைப் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்’ என்று வாய்ப்பை மறுக்கத்தான் வெற்றிமாறன் ஆபீஸ் போனேன். ஆனால், அவர் விடாமல் ‘அசுரன்’ல எனக்கு ஒரு கேரக்டர் கொடுத்து நடிக்க வெச்சார். அவர் ஆரம்பிச்சு வெச்சது இப்போது என்னை தொழில் முறை நடிகன் எனுமளவுக்கு ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு.
‘காந்தி கண்ணாடி’யில் காந்தியாக நடித்த அனுபவம் எப்படி?
ஒரு படப்பிடிப்பில் இருக்கும்போது இயக்குநர் ஷெரீப் ‘காந்தி கண்ணாடி’ கதையைச் சொன்னார். கதை பிடிச்சிருந்தது. ஹீரோ யார் என்று கேட்டேன். பாலா என்றார்கள்.
அவர் இலவசமாக ஆம்புலன்ஸ் கொடுத்ததிலிருந்து அவரை கவனிக்கிறேன். உண்மையில் அவர் ரியல் ஹீரோ. இந்தப் படத்துல நான் நடிக்க அதுவும் ஒரு காரணம்.
இன்னொரு காரணம், தேசிய விருது வாங்கிய அர்ச்சனாவுடன் சேர்ந்து நடிப்பது. ஆரம்பத்துல பதட்டம் இருந்துச்சு. சில நாட்களில் சகஜமாகிவிட்டது. தயாரிப்பாளர் ஜெய்கிரண் இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததை நல்ல விஷயமாகப் பார்த்தேன்.
பாலாஜி சக்திவேல் வாழ்க்கையில் இயக்குநர் ஷங்கர் யார்?
ரொம்ப முக்கியமானவர். ‘காதல்’ படத்தை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லும்போது க்ளைமாக்ஸ் மாற்றும்படி சொல்லியிருக்கிறார்கள். அது தவறு கிடையாது. என் வளர்ச்சி மீது உள்ள அக்கறையில் அப்படிச் சொன்னார்கள். ஷங்கர் சாரும், அவருடைய மனைவியும் கதையை கேட்டதும் முழு மனதோடு தயாரிக்க முன் வந்தார்கள்.
எந்தவித சமரசமும் இல்லாமல் பண்ணுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். ‘காதல்’ என்ற படத்தின் வழியாகத்தான் சினிமா உலகத்தில் எல்லோருக்கும் என்னைத் தெரியும். அந்த வகையில் உயிருள்ளவரை ஷங்கர் சாரை மறக்கமாட்டேன். உங்கள் படங்களில் பல புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அதன் பின்னணி என்ன? புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுக்க காரணம் சம்பவங்களின் அடிப்படையில் கதை பண்ணுவதால். கதைக்கேத்த முகங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கதைதான் முக்கிய பங்கு வகிக்கும். ஹீரோயிசம் சில சமயம் இருக்கும். சில சமயம் இருக்காது. அந்த மாதிரி பண்ணும்போது எந்தவித இமேஜும் இல்லாதவர்கள் நடிக்கும்போது, அதாவது புதுமுகங்கள் நடிக்கும்போது நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
பவுண்டட் ஸ்கிரிப்ட் அல்லது படப்பிடிப்புத் தளத்தில் தற்செயலாக நடக்கும் விஷயங்கள்... எது இயக்குநருக்கு கை கொடுக்கும்?
பவுண்டட் ஸ்கிரிப்ட் அடிப்படை. அது முக்கியம். ஒரு கவிதையோ, கதையோ நல்லா வரவில்லை என்றால் கிழித்துவிட்டு வேறு எழுதலாம். ஆனால், சினிமாவில் அப்படிச் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இயக்குநரே தயாரிப்பாளராக இருக்கும்போது அது சாத்தியம். எப்போதும் பவுண்டட் ஸ்கிரிப்ட் முக்கியம். படப்பிடிப்பு நடக்கும்போது சில மாற்றங்கள் நிகழ்ந்தால் அது அற்புதமான தருணம்.
ஆங்கிலத்தில் Happening என்று சொல்வார்கள். சணல் குமார் சசிதரன் என்ற இயக்குநர். அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘கதை இல்லாமல் ஸ்பாட்டுக்குப் போவேன். படமாக்குதல் நடக்க, நடக்க கதை அதுவாக தன்னுடைய முடிவை நோக்கி நகரும்‘னு சொல்லியிருக்கிறார். அப்படி சொல்லி ஒரு முழுப் படத்தையே எடுத்துள்ளார்.
படம் பேர் ‘ஒழிவுடிவசதே களி’. மலையாள சினிமாவில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்த படம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அது விதிவிலக்கு. சினிமா என்பது வணிகம் சார்ந்த விஷயம் என்பதால் பவுண்டட் ஸ்கிரிப்ட் இருப்பது எப்போதும் நல்லது. கேரக்டரை முன்வைத்து கதை எழுதுவீர்களா? பொதுவாக உங்கள் கதை பிராசஸ் எப்படி இருக்கும்?
ஏற்கனவே சொன்னமாதிரி கேரக்டர் வெச்சு எழுதுவது ஒரு வகை. ‘Character advent story’ என்று ஒரு முறை உள்ளது. பெரும்பாலான ஹீரோக்கள் அதை விரும்புவார்கள். நான் சம்பவங்களின் அடிப்படையில் பண்ணுவதால் அதுதான் எனக்கு வருகிறது. கேரக்டர் அட்வென்ட் கதை வரும்போது அதையும் பண்ணணும். சம்பவங்களின் அடிப்படையில் அதிகமாகப் பண்ணியிருக்கிறேன். எல்லாமே பண்ணணும். அதனால் அதைப் பண்ணணும்னு நெனைச்சு பண்ணக்கூடாது. கதை என்பது அதுவாக வரும்.
எந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும் என்று கணிக்க முடியுமா?
பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டை கணிக்க முடியும் என்பது திரைக் கதையைப் பொறுத்து மாறும். திரைக்கதை அப்படியே படமாக்கப்பட வேண்டும். வாழ்க்கை எப்படி புதிராக உள்ளதோ, திரைக்கதையும் அப்படித்தான்.
திரைக்கதையில் புதிராக சொல்லும்போது அது வெற்றி கொடுக்கும். அதில் குழப்பங்கள் நடக்கும்போது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகுமா, ஆகாதா என்ற சந்தேகம் வருவது இயல்பு. ஆனால், இயக்குநர் அல்லது கதாசிரியர் முழுமனதோடு உண்மைக்கு நெருக்கமாக படைப்பு செய்யும்போது கண்டிப்பாக ஹிட் அடிக்க முடியும்.
எஸ்.ராஜா
|