கல்லா கட்டும் மூன்றெழுத்து நடிகை!



லைவ் ஸ்ட்ரீமிங்... சப்ஸ்க்ரிப்ஷனுக்கு ஏற்ப குறையும் உடை... 

‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது பழமொழி’. இப்போது ஆவதும் சமூக வலைதளத்தாலே அழிவதும் சமூக வலைதளத்தாலே என்பதுதான் புதுமொழி. 

அதிலும் ஆவது நடக்கிறதோ இல்லையோ அழிவது மிக நன்றாகவே நடக்கிறது.
 MMS வீடியோக்களில் துவங்கிய பிரச்னை இப்போது பலவிதமான பூதங்களாக மாறி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஆன்லைன் அடிமையாக்கும் விளையாட்டுக்கள், மிரட்டல்கள், ஸ்காண்டல் வீடியோ, போலி ஷாப்பிங் தளங்கள், டிரேடிங், லோன் செயலிகள் என விதவிதமாக ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்கள். 
இதோ இப்போது இன்னொரு பூதமாக சப்ஸ்கிரிப்ஷன் என்கிற பெயரில் தலைவிரித்து ஆடுகிறது. ‘காசு கட்டுங்க லைவ் ஸ்ட்ரீமில் என்னுடன் இணையுங்கள்...’ இதுதான் இந்த ஏமாற்றுக்காரர்களின் தாரக மந்திரம். 
எந்தப் படிப்பும் தேவையில்லை, பெரிய அளவில் அறிவு, முதலீடு, பொருட்செலவுகள் எதுவும் தேவையில்லை. சொந்தமாக ஒரு youtube சேனல் மற்றும் சமூக வலைதள பக்கங்கள்... அவ்வளவுதான். தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் கடமையாக லைவ் சேனலில் ‘‘ஹலோ ஃபிரெண்ட்ஸ்...’’ என கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு மயக்கும் விதத்தில் பேசத் துவங்குவார்கள். 
‘‘தொடர்ந்து இந்த மாதிரி இன்னும் ப்ரீமியம் லைவ் ஸ்ட்ரீமில் என்னுடன் பேச வேண்டுமா... சப்ஸ்கிரைப் எடுத்துக்கோங்க. சில்வர், பிளாட்டினம், கோல்ட், டைமண்ட் வரை என்னிடம் சப்ஸ்கிரிப்ஷன் வசதிகள் உள்ளன...’’ என ஆரம்பித்து ‘‘இங்கே பேச முடியாத பல விஷயங்களை அங்கே பேசலாம்...’’ என்பார்கள். 
இந்த வலையில் வீழ்த்தப்படும் ஆண்கள் சப்ஸ்கிரைப் எடுத்துக் கொண்டு அங்கே சென்றால் முதலில் பார்த்த இலவச லைவ் வீடியோவை விட அதில் இன்னும் ஆடை குறைவாக இருக்கும். இன்னும் அடுத்தடுத்த ப்ரீமியம் சப்ஸ்கிரைப் எடுத்தால் இதைவிட அதிக சலுகைகள் கிடைக்கும் என்பர். 
அதாவது சப்ஸ்கிரிப்ஷன் பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆடை குறையும். பேச்சுகளும் கவர்ச்சியான நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஆபாச நிலைக்கு செல்லும். 

பெரும்பாலும் வட மாநில பெண்கள் இப்படி சப்ஸ்க்ரிப்ஷன் வழியாக அதிகமாகவே வீட்டில் இருந்து சம்பாதித்து வருகிறார்கள். ரூபாய் 30 சப்ஸ்க்ரிப்ஷன் துவங்கி மாதத்திற்கு 2000 வரையிலும் கூட ஒரு நபரிடம் பணம் பறிக்கிறார்கள். 

இதுவும் ஒருவித ‘ஹனி டிராப்’ வகைதான். ஹனி ட்ராப் வகையிலாவது ஒரு பெண் அல்லது ஒரு நபர் சமூக வலைதளம் மூலமாக இன்னொரு நபரைத்தான் ஏமாற்றுவார். ஆனால், இங்கே ஒரு நபர் ஒரு கூட்டத்தையே பணம் பறித்து ஏமாற்றுவார். மொத்த கும்பலுக்கும் ஒரே லைவ் ஸ்ட்ரீமில் ஆசையாக பேசுவது, கவர்ச்சியாக உடல் பாகங்களை காட்டுவது என ஆரம்பித்து கல்லா கட்டுவார்கள். 

இன்னொரு வகையில் ஒரு சில கல்லூரி மாணவிகள் ‘கல்லூரிக்கு பணம் கட்ட காசு இல்லை, ரூம் வாடகை கொடுக்க பணம் இல்லை, சாப்பாட்டிற்கே வழி இல்லை’ என சுகர் பேபிகளாக மாறி 40 வயதுக்கு மேல் உள்ள சுகர் டாடிகளை டார்கெட் செய்வார்கள். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் திருமணமான சில தம்பதியரே இதைக் கூட்டாக சேர்ந்து செய்கிறார்கள் என்பதுதான். இவர்கள் திருமணம் செய்து கொண்டதே அல்லது சேர்ந்து வாழ்வதே இப்படியாக பணம் பறிப்பதற்காகதான் என்று சொன்னால் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வரும்.

ஆனால், அது உண்மைதான். மனைவி வீடியோவில் பேசுவதை ஷூட் செய்வதே உடன் இருக்கும் ஆண் நண்பர் அல்லது கணவர்தான். 

இவர்களில் பலர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் கண்ணியமான மரியாதைக்குரிய தம்பதியர் போல் நாடகமாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால், பின்புலத்தில் மிகப்பெரிய வலை வீசி சப்ஸ்கிரைப் என்கிற பெயரில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி டைமண்ட் வரை சப்ஸ்கிரிப்ஷன எடுத்தாகிவிட்டது... அதன் பிறகு என்ன என்றால்... ‘என்னுடைய பிரத்தியேக இணையதளத்திற்கு வாங்க’ என்கிறார்கள்.இதுதான் ‘பகாசுரன்’ படம் வெளிச்சம் போட்டுக் காட்டிய இன்னொரு உண்மை. 

ஆம். இதற்கென பல பிரத்தியேக இணையதளங்கள் உள்ளன. அங்கே பத்து நொடிகள் வீடியோ முதல் 10 நிமிட வீடியோக்கள் வரை காணக் கிடைக்கும். நேரம் அதிகரிக்க அதிகரிக்க ஆடை குறையக் குறைய பணம் அதிகம் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் பலர் இதில் முகம் காட்டாமல் முழு நிர்வாண வீடியோ சாட்டிங்குகள் கூடசெய்கிறார்கள். பலர் நேரடியாகவே முகம் காட்டி வீடியோ சாட்டிங் அல்லது வீடியோ லைவ் செய்வதுண்டு. முன்னொரு காலத்தில் கவர்ச்சி நடிகைகளாகவும், அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்த நடிகைகளும் கூட இப்படி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதில் முன்பு டாப் நடிகர்களுடன் நடித்த மூன்றெழுத்து நடிகையும் அடக்கம் என பகீர் கிளப்புகிறார்கள் கோலிவுட்டில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். ‘‘நான் வாழ பணம் தேவை. அதற்காக யாரையும் ஏமாற்றவில்லை. 

அவர்களாக என்னைத் தேடி வருகிறார்கள். அதனால் நான் என் உடலைக் காட்டி சம்பாதிக்கிறேன்...’’இப்படி நேரடியாகவே ஒரு பேட்டியில் அந்த மூன்றெழுத்து நடிகையும் சொல்லியிருக்கிறார். இவர் மட்டுமல்ல, வாய்ப்பிழந்த சில நடிகைகள், பழம்பெரும் கவர்ச்சி மாடல்கள், வடநாட்டில் இருக்கும் பல புறநகர் கிராமத்துப் பெண்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், திருநங்கைகள்... என சகலரும் இப்படி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதுகுறித்து ஒருசில ஆன்லைன் பிரபல பெண்களிடம் கேட்கும் போது அவர்கள் சொல்லும் நியாயம் வேறு விதமாக இருக்கிறது.‘‘நாங்கள் யாரையும் வீடு தேடிச்சென்று ஏமாற்றவில்லை. எப்படியாவது எங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்று நினைக்கிற ஆண்கள்தான் பணம் கட்டி எங்களது வீடியோக்களை பார்க்கிறார்கள். நாங்கள் சொல்லும் கட்டணத்திற்கு சரி என்றால் அவர்கள் கூப்பிடும் இடத்திற்கும் நாங்கள் செல்வதுண்டு. யாரையும் கையைப் பிடித்து நாங்கள் காசைக் கறப்பதில்லை. 

அவர்கள் கைகளில் இருக்கும் மொபைலில் அவர்கள் நினைத்தால் மட்டுமே பணம் எங்களுக்கு கொடுக்க முடியும். இதில் எங்களுடைய தவறு எதுவுமில்லை. முன்பு சாலை ஓரத்தில் நிற்கும் பாலியல் தொழிலாளர்களிடம் இவர்கள் காசை இழந்தார்கள், இப்போது இன்டர்நெட்டில் இழக்கிறார்கள். உண்மையில் குடும்பம், மனைவி, குழந்தைகள், காதலி என தனக்கென ஓர் உலகத்தில் வாழும் ஆண்கள் இதுபோன்ற வீடியோக்கள் பக்கம் வருவதே கிடையாது. 

யார் கிடைப்பார்கள் என அலையும் ஆண்களும், முன்பு ஆபாச தளங்களில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும்தான் இப்போது இன்னும் சுவாரசியமாக என்ன செய்யலாம் என யோசித்து எங்களிடம் சப்ஸ்கிரைப் செய்துகொண்டு வீடியோக்களைப் பார்க்கிறார்கள்...’’ என்கிறார்கள்.இந்தப் பெண்கள் அல்லது இந்தத் தம்பதிகள் தங்களை ஊருக்குள் மரியாதையான குடும்பமாக காட்டிக்கொள்ள அல்லது கௌரவமான நபராக தெரியப்படுத்த ஏதாவது ஒரு சிறிய பொட்டிக் பிசினஸ் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருப்பார்கள். 

ஆனால், யாருக்கும் எந்த ஆர்டர்களும் கொடுப்பதில்லை; எடுப்பதுமில்லை. அங்கேயும் ஒரு விதமான பணம் சூறையாடப்படுகிறது. 

கடமைக்காக உடைகள் மற்றும் புடவைகளை அணிந்து கொண்டு அதன் விலை சொல்லி வீடியோக்கள் பதிவிட்டு இன்னொரு புறம் சமூகத்தில் ஒரு சிறிய தொழிலதிபர் போல் அல்லது பெண் தொழில் முனைவோர் போல் தங்களைக் காண்பித்துக் கொள்வதும் நடக்கிறது. இவர்களை அங்கீகரிக்கவும் ஒரு சில ஈவன்ட் மேனேஜ்மென்ட் குழுவினர் ‘சிறந்த பெண் தொழில் முனைவோர்’, ‘சிறந்த இணையதள பிரபலம்’, ‘சிறந்த சமூக வலைத்தள போராளி’, ‘இன்டர்நெட் சென்சேஷன்’ என விருதுகளையும் கொடுத்து அல்லது பணம் கொடுத்து இவர்களே அந்த விருதை வாங்கி தங்களை இன்னும் அதிக லைம் லைட்டில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். 

இதற்கு மயங்கி கடை திறப்பு, சமூக விழாக்கள், நிகழ்ச்சிகள் என இவர்களை சிறப்பு விருந்தினர்களாக அல்லது போட்டிகளில் நீதிபதிகளாக அழைத்து மரியாதை செலுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்... கல்லூரி விழாக்களுக்கு இவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கெளரவிக்கும் கொடுமைகளும் அரங்கேறுகிறது.இப்படியான விருதுகளும், சிறப்பு விருந்தினர் அந்தஸ்தும்தான் இவர்களுக்கு பெரிய முதலீடு. இந்த நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்ள வேண்டுமானால் அதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். 

ரூபாய் 20,000 முதல் இவர்களின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை பொறுத்து கட்டணத்தை உயர்த்துகிறார்கள். மேலும் நிகழ்ச்சிக்கு வருவதானால் உடைகள் துவங்கி மேக்கப் முதல் அந்த நிகழ்ச்சி குழு கொடுக்க வேண்டும். வந்து செல்ல போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். வந்தால் கணவன் மனைவி சகிதமாகத்தான் வருவார்கள். அல்லது நண்பர்கள் படை சூழ வருவார்கள். போதாக்குறைக்கு ஒருசில பிரபலங்கள் இதில் பவுன்சர்கள் வேறு கேட்டு பந்தா செய்வதும் உண்டு. 

பொதுவாக இவர்கள் அதிகம் திறந்து வைப்பது சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள்தான். இதற்காக வருடம்தோறும் அவர்களுக்கு சலூன் சேவைகள் முதற்கொண்டு இலவசமாக வழங்கப்படும். 

இது இத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து சினிமா ப்ரொமோஷன், ப்ராடக்ட் ப்ரமோஷன் என கல்லா கட்டுகிறார்கள். யெஸ். வெறும் ஒரு youtube லைவ் ஸ்ட்ரீமிங்கில் துவங்கி திடீரென ஒரு நாள் வீடு வாங்குகிறார்கள், கார் வாங்குகிறார்கள். இது எதுவும் தெரியாமல் இவர்களிடம் பணத்தைக் கொட்டி இருள் உலகத்தில் இவர்களின் வீடியோக்களைப் பார்த்து ஜொள் விட்டபடி தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் ஷாக் டேட்டா.

இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், இவர்கள் பார்க்கும் பல வீடியோக்களில் இருக்கும் பெண்கள் உண்மையான நபரே கிடையாது, AI உருவாக்கிய மாடல்கள்!
இது கூட தெரியாமல் ‘சூப்பர் பேபி’, ‘வாவ் பேபி’ என ரசிக்கிறார்கள். இப்படி ஏமாறுபவர்கள் பெரும்பாலும் 35 - 65 வயதுக்குள் இருக்கும் ஆண்கள்தான். இதில் ஏமாறும் பெண்கள் மிகக் குறைவு. அதேபோல் 15 வயது முதல் 50 வயது வரையிலும் கூட பெண்கள் இதில் சம்பாதிக்கிறார்கள் என்பது புனைவல்ல; எதார்த்தம்.

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? 

ஷாலினி நியூட்டன்