செலிபிரிட்டி + பொலிட்டீஷியன்ஸ் பாதி... மாதவ் அகஸ்டி டெய்லரிங் மீதி!



இந்திய ஆடை வடிவமைப்பு துறையில் மாதவ் அகஸ்டியைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. பாலிவுட் ஸ்டார்கள் தொடங்கி பல விவிஐபி அரசியல் தலைவர்கள் வரை அவர் ஆடை வடிவமைப்பு செய்யாத நபர்களே இல்லை.

பாலிவுட் நடிகர் சுனில் தத், தேவ் ஆனந்த், திலீப் குமார், வில்லன் நடிகர் அம்ரீஷ் பூரி, சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பலருக்கு ஆடை வடிவமைப்பு செய்து, அதனைத் தோரணையாகத் தைத்துக் கொடுத்தவர் இவர்தான்.

ஆனால், ஃபேஷன் டிசைனில் முறையான கல்வி என்று எதையும் கற்காதவர் மாதவ் அகஸ்டி. எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த ஒரு தையல்காரர் என்பதே அவரின் அடையாளம். 

பொதுவாக அனுபவமே சிறந்த ஆசிரியர் என்பார்கள். இவரின் வாழ்க்கையிலோ அனுபவம் மட்டுமே சிறந்த ஆசிரியராக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். 
தற்போது அவருக்கு 76 வயதாகிறது. இந்த வயதிலும்கூட அவர் விதவிதமான டிசைன்களில் ஆடைகளை வடிவமைப்பு செய்து வருவது பலரையும் வியக்கச் செய்கிறது. சமீபத்தில் அவரின் ஐம்பது ஆண்டுகால ஆடை வடிவமைப்புப் பயணம் பற்றி, ‘Stitching Stardom: For Icons, On and Offscreen’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதில் அவரின் பயணம் அத்தனை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.   
நாக்பூரைச் சேர்ந்தவர் மாதவ் அகஸ்டி. அவரின் தந்தை ஒரு துறவி. ஆனால், ஷெவ்டே என்கிற வழக்கறிஞரின் கோட்களை தைத்து வந்துள்ளார். தந்தையின் கோட் தைக்கும் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சிறு வயது மாதவ் அகஸ்டிக்கு, டெய்லராக வேண்டும் என்ற ஆசை மனதில் மலர்ந்துள்ளது. 

இருபது வயதில் நாக்பூரிலிருந்து வெளியேறியவர், தையல்காரராக வேண்டி குவாலியர் சென்றுள்ளார். அங்கே ஒரு கடையில் ஸூட் தைக்கும் பணியில் ஈடுபட்டார். 1969ம் ஆண்டின் முற்பகுதி வரை அவர் குவாலியரிலேயே இருந்தார். அப்போது சில படிப்பினைகள் அவருக்குக் கிடைக்க இந்தியா முழுவதும் சுற்றி பல்வேறு தையல் வேலைப்பாடுகள் குறித்து முழுமையாகக் கற்க வேண்டும் என முடிவெடுத்தார். 

அப்படியாக அவர் முதலில் சென்றது இந்தியாவின் தலைநகரமான தில்லிக்கு. அங்கே தார்யாகஞ்ச் என்ற இடத்தில் சர்பால் எனும் தையல்காரரிடம் ஆறு மாதங்கள் வேலை செய்தார்.

பிறகு குவாலியரில் அவர் பணிபுரிந்தபோது அங்கே, மொராதாபாத் ஷெர்வானிகளுக்கு அதிக தேவை இருப்பதாக மற்ற தையல்காரர்கள் பேசுவதை ஏற்கனவே கேட்டிருந்தார். இதனால், தில்லியிலிருந்து ஷெர்வானி செய்வதைப் படிக்க மொராதாபாத் சென்றார். 

இங்கும் ஆறு மாதங்கள் இருந்து ஷெர்வானிகள் தைப்பது பற்றி முழுமையாகக் கற்றார். இங்கே வேலைசெய்யும்போது ஆண்களுக்கான பைஜாமாக்கள் அலிகார் நகரில் தயாரிக்கப்படுவதை அறிந்தார். உடனே அலிகார் சென்றார். 

அங்கேயும் ஆறு மாதங்கள் தங்கியிருந்து பைஜாமாக்கள் தைக்க முழுமையாகக் கற்றார். தொடர்ந்து ரூர்கேலா, கட்டாக், ஒரிசா, ஜோத்பூர், பிலாய் எனப் பல்வேறு இடங்களுக்கும் பயணித்து அங்குள்ள தையல் வேலைப்பாடுகளைப் படித்தார். பின்னர் கொல்கத்தா சென்று ஆடைகளுக்கான ‘கட்டர்’ வேலையைப் பார்த்தார்.

இப்படியாக அவர் ஒவ்வொரு தையல் வேலைப்பாட்டையும் கற்க ஒவ்வொரு இடத்திலும் ஆறு மாதங்கள் செலவழித்தார். தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நகருக்குச் சென்று அங்குள்ள ராணுவ கன்டோன்மென்ட்டில் ராணுவ உடைகள் தைப்பது குறித்து பயின்றார். இந்நேரம் ஆங்கிலத்தில் பேசவும் கற்றார். இதனால் பலரிடம் அவரால் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது.

பிறகு 1973ம் ஆண்டு மும்பை திரும்பியவரின் வாழ்க்கை அப்படியே மாறிப் போனது. இதிலிருந்து அவரின் டெய்லர் கிராஃப்பும் உயர்ந்தது. அப்போது, ‘தூந்த்’ என்ற இந்திப் படத்திற்காக ராணுவ உடைகள் தைத்துக் கொடுத்தார். 

அதில் அவரின் தையல் கலை கவனம் பெற்றது. அவருக்கு இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் நன்றாகத் தெரியும் என்பதால் கூடுதல் ப்ளஸ்ஸாக மாறியது. முதன்முதலாக நடிகர் சுனில் தத், தனக்குத் தனியாக ஆடை வடிவமைப்பு செய்துதரும்படி கேட்டுள்ளார். அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தையல் பணிகளில் இருக்கவில்லை.

இந்நிலையில் 1975ம் ஆண்டு தாதரில் ஒரு சிறிய கடையைத் திறந்தார் மாதவ் அகஸ்டி. இந்தக் கடை பற்றிய செய்திகள் பரவியது. இதனால் சஃபாரி ஸூட்களை விரும்பி அணியும் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், குர்தாக்களை விரும்பி அணியும் அமைச்சர் கோபிநாத் முண்டே, குர்தாவில் பாக்கெட் இல்லாமல் அணியும் பிரமோத் மகாஜன், மூன்று பட்டன் ஜாக்கெட்களை அணியும் எல்.கே.அத்வானி உள்பட பலரும் வாடிக்கையாளர்களாக மாறினர். 

இதன்பிறகு அவர் வழக்கறிஞர் ஷிரிஷ் குப்தே மற்றும் பிரபல நாடகக் கலைஞர் மோகன் வாக் ஆகியோர் மூலம் பால் தாக்கரேவைச் சந்தித்தார். ‘‘அப்போது பாலாசாகேப் தனது கால்கள் புகைப்படங்களில் தெரியாதவாறு ஆடைகளை வடிவமைக்கும்படி சொன்னார்...’’ எனச் சந்தோஷமாகக் குறிப்பிடுகிறார் மாதவ் அகஸ்டி. 

அவருக்காக ஒரு வெள்ளை நிற குர்தா பைஜாமாவை வடிவமைத்தார். அது பால்தாக்கரேவின் ‘சிக்னேச்சர் லுக்’ ஆக மாறியது. இதற்காகவே காஷ்மீர் ஷால் துணியை வரவழைத்துள்ளார் மாதவ் அகஸ்டி. 

இவை எல்லாவற்றையும்விட 1987ம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படமே மாதவ் அகஸ்டியைத் தனித்துவமாக்கியது. இந்தப் படத்தில் மொகம்போ என்ற கேரக்டரில் அம்ரீஷ் பூரி நடித்தார். 

இந்தக் கேரக்டருக்கான உடையை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டிதான். இந்தக் கேரக்டரும், ஆடையும் பெரிய அளவில் ஹிட்டாகி ‘மொகம்போ’ பூரி என அம்ரீஷ் அழைக்கப்பட்டார். அவருடன் அகஸ்டியும் ‘மொகம்போ’ டெய்லர் எனப் பாராட்டப் பெற்றார்.இவ்வளவு பெருமைகள் வாய்ந்த மாதவ் அகஸ்டிக்கு கடந்த மாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாரத் கௌரவ் விருது வழங்கப்பட்டுள்ளது. 

அம்ரீஷ் பூரியின் முதல் படத்திலிருந்து கடைசி படம் வரை அவருக்காக ஆடை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டி. 2005ம் ஆண்டு அம்ரீஷ் பூரியின் மறைவிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வேலைகளைக் குறைத்துக் கொண்டவர், இப்பொழுது இந்தத் தலைமுறையினருக்கு தனித்துவமாக ஆடைகளை வடிவமைப்பு செய்து வருகிறார்.  

பேராச்சி கண்ணன்