சினிமா லோகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த லோகா உருவான கதை...



லோகமே தற்போது ‘லோகா’ படப் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. ‘லோகா அத்தியாயம் 1 : சந்திரா’ - மலையாளத் திரையுலகின் புதிய வரலாறு. 
நவீன சினிமா தொழில்நுட்பங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தினால் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தியப் படங்களும் எடுக்க முடியும் என்பதை நிரூபித்து முதல் பெண் கதாநாயகி கதையைக் கொண்டு 100 கோடி கிளப்பில் இணைந்த தென்னிந்தியத் திரைப்படமாக மாறியிருக்கிறது லோகா. 

இயக்குநர் டொமினிக் அருண், ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், எடிட்டர் சாமன் சக்கோ உள்ளிட்ட பல திறமையாளர்கள் ஒன்றிணைந்து, உடன் துல்கர் சல்மான்  தயாரிப்பில் கைகொடுக்க இப்படம், மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.  
எப்படி சாத்தியப்பட்டது, எங்கே உருவானது இந்த ‘லோகா’... பகிர்கிறார் இயக்குநர் டொமினிக் அருண்.‘ஸ்டைல்’ படத்தின் எழுத்து மூலம் தனது கரியரை துவங்கியவருக்கு ஒரு ஷார்ட் ஃபிலிம் இயக்கம். அதைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் உதவ ‘தரங்கம்’ என்கிற மலையாளத் திரைப்படத்தை உருவாக்கினார் டொமினிக் அருண். 

ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. அத்தனைக்கும் பதில் சொல்லும்படி இப்போது ‘லோகா’ யுனிவர்சல் உருவாக்கி விட்டார் டொமினிக்.
எங்கே ஆரம்பித்தது ‘லோகா’?ஆரம்பத்தில் அனைத்துமே எளிமையான கதையாதான் எழுத ஆரம்பிச்சோம். ஆனால், கள்ளியங்காட்டு நீலி கதை தெரிய வந்த பிறகுதான் மொத்த ஸ்கிரிப்ட்டையும் மாற்றி எழுத ஆரம்பிச்சோம். அதன்பிறகுதான் இந்தக் கதை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. 

2022ம் ஆண்டு ஆரம்பிச்ச ப்ராஜெக்ட். அப்போதே நீலிக்கான குழந்தையைத் தேர்ந்தெடுத்து 3 வயதில் இருந்து பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சிட்டோம். பலகட்ட ஆடிஷன்களுக்குப் பிறகு தேர்வானவங்கதான் பேபி துர்கா வினோத்.

தயாரிப்பாளராக துல்கர் சல்மான் இந்த படத்துக்குள் வந்தது எப்படி ?

‘கொத்தா’ படத்தில் துல்கருடன் வேலை செய்திட்டு இருந்தார் சினிமாட்டோகிராபர் நிமிஷ். அவர் வழியாதான்துல்கரை சந்திச்சு கதை சொன்னோம்.இதற்கு முன்பு நாங்கள் சந்தித்த தயாரிப்பு தரப்பு யாருமே இந்தக் கதையைக் கேட்டுட்டு தயாரிக்க முன்வரலை. துல்கர் மட்டும்தான் இந்தக் கதையை எப்படி பெரிய ஸ்கேல் ப்ராஜெக்ட் ஆக மாத்தலாம் என்கிற அளவுக்கு யோசித்தார்.

கதையாக கேட்கும்போது ‘ட்வைலைட்’, ‘த வேம்பையர் டைரிஸ்’ போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியல்கள் போலத்தான் தெரிந்திருக்கும்... எப்படி இதை கதையாக செய்யலாம் என உங்களுக்குத் தோன்றியது?

ஒரு சின்ன ப்ராஜெக்ட் ஆக நானும் சாந்தி பாலச்சந்திரனும் எழுத ஆரம்பிச்சோம். அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகத் துவங்கியது. நீலி கதையை சேர்த்தபிறகு இதுவரையிலும் சொல்லாத ஒரு கதையாக மாறி இருந்த போதுதான் இந்தக் கதை மேல எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு.உண்மைதான். கதையாக கேட்டால் ஒரு சாதாரண வேம்பையர் கதை. ஆனால் நம் பழங்கால கதை சேர்த்தபிறகு இதன் டோன் மாறிடுச்சு.

ஆரம்பத்தில் பார்வதி திருவொத்து தேர்வானதா செய்தி வந்ததே... சந்திரா பாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எப்படி வந்தார் ?

இந்த கேரக்டருக்கு இன்னும் ஒருசிலர் பெயர்கள் பேச்சுவார்த்தையில்தான் இருந்துச்சு. அதில் கல்யாணி பிரியதர்ஷனும் ஒருத்தர். ஆனால். கல்யாணி பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தது துல்கர் சல்மான். அவருடைய சாய்ஸ் பெஸ்ட். கல்யாணி முழுமையாகவே தன் உடல் முதற்கொண்டு இந்த படத்திற்காக மாற்றினார். எனக்கும் துல்கருக்குமே அப்படி ஓர் ஆச்சரியம் கொடுத்தார் அவர்.

ஆரம்பிக்கும் பொழுதே பெரிய பட்ஜெட்... பெரிய ப்ராஜெக்ட் என்றுதான் ஆரம்பித்தீர்களா?

கதையாக இருந்தவரை இது ஒரு சிம்பிள் சூப்பர் ஹீரோ படம்... அப்படித்தான் யோசிச்சோம். துல்கர் உள்ளே வந்தபிறகுதான் கதை பெரிய ப்ராஜெக்ட் ஆக சினிமாடிக் யுனிவர்சாக மாறியது. 

அவருடைய ப்ரொடக்‌ஷன் நிறுவனத்தின் பெயர் ‘Wayfarer Cinematic Universe’ (WCU). இதை வைத்தே ‘லோகா’வை ஐந்து பாகங்களாக திட்டமிட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கினோம்.

அடுத்த பாகங்களுக்கான படப்பிடிப்புகள் எப்போது ஆரம்பம்?

அடுத்த வருஷமே ஆரம்பிக்கப் போகிறோம். நாங்க எதிர்பார்த்ததை விடவும் இந்தியா முழுக்கவே படம் பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. வசூல் ரீதியாகவும் பாசிட்டிவ் ரிசல்ட். அதனால் ‘தாமதம் வேண்டாம்... கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சுடுங்க’ என துல்கரும் சொல்லிட்டார். அடுத்த பாகம் இன்னும் பிரம்மாண்டமா... இதைவிட அதிகமான கேரக்டர்களுடன் திட்டமிட்டிருக்கோம்.

ஒரு பழங்குடி மொழியையே இந்தக் கதைக்காக இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் உருவாக்கியிருப்பதா சொல்றாங்களே..?

ஆமா. காரணம் இந்தப் படத்தில் வேலை செய்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அவர்கள் எதிர்பார்த்த முழு சுதந்திரத்தையும் நாங்க கொடுத்துட்டோம். அத்தனை பேரும் தங்களுடைய பெஸ்ட் திறமையைக் கொடுத்திருக்காங்க. அதில் பாடலாசிரியர் ஹரி நாராயணனும், இசையமைப்பாளர் ஜேக்சும் சேர்ந்து பல்வேறு பழங்குடி மக்களின் மொழிகளை ஆராய்ச்சி செய்து ஒரு புது மொழியை உருவாக்கியிருக்காங்க. அதைத்தான் நீலி போர்ஷன் வரும்பொழுது பயன்படுத்தி இருக்கோம்.

ஓணம் திருவிழா, மோகன்லால், பகத் பாஸில் திரைப்படம்... இத்தனை போட்டிகள் இருந்தும் ஏன் பெரிதாக விளம்பரங்கள் செய்யவில்லை?

பழங்கால விளம்பர ஸ்டைல்தான். படம் பார்த்தவர்கள் அவர்கள் வாயால் மற்றவர்களிடம் படம் குறித்து பேசட்டும். அதுதான் உண்மையான விமர்சனமாக இருக்கும் என்கிறதை நாங்கள் முழுமையா நம்பினோம். 

ஒரு படம் நல்லா இருந்தால் அது தானாகவே தனக்கான ரசிகர்களை திரையரங்குக்கு கூட்டிக்கொண்டு வரும். 2021ம் ஆண்டு கதையாக எழுதும்போது இந்தப் படம் இவ்வளவு பெரிய படமா வரப்போகுது... ஓணம் பண்டிகையில் வெளியாகும், அதுவும் மலையாளத் திரைப்பட ஜாம்பவான்களான மோகன்லால் சார், பகத் பாஸில் சார் படங்களுடன் மோதப் போகிறது... இப்படி எதுவும் எங்களுக்கு தெரியாது. ஒருவேளை இதற்கு ஏற்ற தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் யார் நடிகர்கள் என்றே தெரியாத அளவிற்கு இதுவும் ஒரு சாதாரண படமாக வெளியாகி கடந்து போயிருக்கும். 

இப்போ ஐந்து பாகங்கள், இன்னும் நிறைய கேரக்டர்களை திட்டமிட்டிருக்கோம். சந்திராவாக எழுதும்பொழுதே இதில் டொவினோ தாமஸ் மற்றும் துல்கர் வருவது குறித்து நாங்கள் பிளான் செய்யவே இல்லை. 

கிட்டத்தட்ட 20 வகையான ஸ்கிரிப்ட் இந்தப் படத்துக்கு மட்டும் எங்களிடம் இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் கதை பெரிதாகி ஆழமாக எழுத... எழுத கதைக்குள் சில முக்கியமான நடிகர்கள் வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. 

டொவினோ தாமஸ் ஏற்கனவே கதைக்குள் இருந்தார், அதைத்தொடர்ந்து உள்ளே வந்தவர்தான் துல்கர் சல்மான். துல்கர் தயாரிப்பாளராக நின்று அவர் வேலையைச் செய்வது மட்டும்தான் முதலில் நாங்கள் போட்ட திட்டம். ஆனால், ஒரு ப்ராஜெக்ட்... அதற்கு என்ன தேவையோ அதை அதுவே தீர்மானிக்கும் என்பார்களே... அப்படி நடந்ததுதான் சவுபின் சாகிர் வரை கதைக்குள் வந்தது. 

‘லியோ’ படத்தின் வேளையிலேயே சாண்டி மாஸ்டர்தான் இந்தக் கதையின் வில்லன் என ஏற்கனவே முடிவு செய்துட்டேன். அதில் எந்த மாற்றமும் வேண்டாம் அப்படின்னு துல்கரும் சொல்லிட்டார். அதற்கு ஏத்த மாதிரி இந்த சந்திரா சாப்டர், சாண்டி மாஸ்டரால் இன்னும் அடுத்த கட்ட அப்டேட் சூப்பர் ஹீரோவாக மாறியது. 

அவருடைய வில்லன் சிரிப்பும், நடிப்பும் அவர் யார் என மற்ற மொழி ரசிகர்களையும் இப்போது தேட வச்சிருக்கு. அடுத்தடுத்த பாகங்கள் இன்னும் பிரம்மாண்டமாக... இன்னும் பெரிய ப்ராஜெக்டாக , நீங்கள் எதிர்பாராத பல நடிகர்களுடன் ரிலீஸ் ஆகும்.

ஷாலினி நியூட்டன்